ஃபேஸ்புக் அராஜகம், பயனாளியின் வீட்டுக்கே சென்று அரசியல் கருத்து அவருடையது தானா? எனச் சான்றுகள் கேட்டு சோதித்த கொடுமை!

facebook

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் அனல் கிளப்பிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இம்முறை பிரச்சாரத்திற்கு சமூக ஊடகங்களையும் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றன. ஃபேஸ்புக் நிறுவனம் ஆளும் மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களுக்கு ஆதரவாக இந்தியப் பயனாளர்களிடையே பல்வேறு விதமான செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு நீடித்து வரும் நிலையில் தற்போது புது தில்லி ஃபேஸ்புக் பயனாளி ஒருவருக்கு நேர்ந்த விநோதமான அனுபவம் அனேக ஃபேஸ்புக் பயனாளர்களிடையே கடும் அதிருப்தியையும், தனிப்பட்ட பாதுகாப்பு குறித்த பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் புதி தில்லியைச் சேர்ந்த ஃபேஸ்புக் பயனாளர் ஒருவரது வீட்டுக்கு வருகை தந்திருக்கிறார் ஃபேஸ்புக் பிரதிநிதி ஒருவர். எப்படி என்றால் பாஸ்போர்ட் என்கொயரிக்கு காவல்துறை அதிகாரியொருவர் வீடு தேடி வருவாரே அந்த மாதிரி! வந்தவர், ஃபேஸ்புக் பயனாளரிடம் அவரது ஆதார் கார்ட் நம்பர் உட்பட வேறு நம்பத்தகுந்த ஆதாரங்களுக்கான சான்றுகள் அனைத்தையும் காட்டுமாறு வற்புறுத்தியிருக்கிறார். எதற்காக என்றால் குறிப்பிட்ட ஃபேஸ்புக் கணக்கின் உரிமையாளர் இவர் தானா என்பதை அறிந்து கொள்வதற்காகவும் அந்தக் கணக்கில் வெளியிடப்பட்ட அரசியல் கருத்து அவரால் எழுதப்பட்டது தானா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் தான். இத்தகவலை செய்தியாளரிடம் பகிர்ந்து கொண்ட பாதிக்கப்பட்ட ஃபேஸ்புக் பயனாளி தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாததால் அவரது பெயரை நாங்கள் இங்கு குறிப்பிடவில்லை.

ஆயினும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இத்தகைய நடவடிக்கை குறித்த அதிர்ச்சியில் உறைந்த அந்த பயனாளி, ஆஃப்டர் ஆல் ஒரு ஃபேஸ்புக் பதிவைக் காரணம் காட்டி ஃபேஸ்புக் பிரதிநிதியால் வீட்டுக்கே வந்து விசாரணை மேற்கொள்ள முடியுமெனில் நாம் என்ன மாதிரியான பாதுகாப்பற்ற சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நான் இதுவரை இப்படியொரு வினோதமான விசாரணையைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. இது எதற்காக மேற்கொள்ளப்பட்டது. அரசு சார்பாக ஃபேஸ்புக் இப்படியொரு நடவடிக்கை எடுத்திருக்கிறதா? அப்படியே இருந்தாலும் கூட ஒரு சமூக ஊடக வலைத்தள நிர்வாகம் தனது பயனாளியை அவர் எழுதிய ஒரு கருத்துக்காக இப்படி குற்றவாளியை விசாரிப்பதைப் போல வீட்டுக்கு வந்து நம்பகத்தன்மை குறித்த கேள்வியை எழுப்ப முடியுமா? என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் வெளிவர முடியவில்லை’ எனத் தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார் அந்த நபர்.

இப்படி ஒரு சம்பவம் நடந்தது நிஜமா என்பதை அறிய IANS செய்தி நிறுவனம் ஃபேஸ்புக் நிர்வாகத்துக்கு தொடர்ந்து மின்னஞ்சல் செய்தும் பதிலேதும் கிடைக்கவில்லை எனத் தகவல்.

இந்தச் சம்பவம் மட்டும் உண்மையானால் சமூக ஊடகங்களின் வண்டவாளம் அனைத்தும் தண்டவாளம் ஏற்றப்படலாம். சமூக ஊடகங்கள் எக்காரணம் கொண்டும் தங்களது பயனாளிகளின் அனுமதி இன்றி அவர்களது தகவல்களைப் பிறருக்கு பகிரக் கூடாது என்பது விதி. அதை ஃபேஸ்புக் மீறியிருக்கிறது.

ஒருவேளை குறிப்பிட்ட நபர் எழுதும் கருத்து சர்ச்சைக்குரியதாக இருந்தாலோ அல்லது மக்களை மூளைச்சலவை செய்வதைப் போல இருந்தாலோ அதில் அதிருப்தி இருக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட சமூக ஊடகங்கள் அவற்றை தங்களது தளத்திலிருந்து நீக்கலாம் அல்லது குறிப்பிட்ட அந்தப் பயனாளரின் கணக்கை முடக்கலாம். இப்படியான நடவடிக்கைகளே கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், தில்லி சம்பவம் புதுமையாகவும், விநோதமாகவும் இருக்கிறது இது  சமூக ஊடக தளங்களில் ஃபேஸ்புக் பயனாளர்களின் ரகசியக் காப்பு மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக இருக்கிறது.

நேரடியாக பயனாளரின் வீட்டுக்கே சென்று நேரடி விசாரணையில் இறங்குவது என்பது இன்ஃபர்மேசன் டெக்னாலஜி ஆக்ட், 2000 அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தை நாடலாம். பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கசிய விடுவதாக குறிப்பிட்ட சமூக ஊடக நிறுவனம் மற்றும் அரசு மீது வழக்குப் போட வகையுண்டு என்கிறார்கள் விவமறிந்த வழக்கறிஞர்கள்.

இந்த விவகாரத்தில் பயனாளரின் குற்றச்சாட்டையொட்டி ஃபேஸ்புக் தனது தலையீட்டை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

<!–

–>