அஞ்சலி: மனிதாபிமானத்தின் அபிமானி மருத்துவர் ஜீவானந்தம்

ஒரு எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர், அனைவருக்கும் விருப்பமானவராக இருக்க முடியுமா… 24 மணி நேரமும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக தன்னைப் பாவித்துக் கொண்டு பணியாற்றக் கூடிய மருத்துவர்களில் ஒருவர் மக்களுக்கான வேலைகளைச் செய்துவிட முடியுமா.. சகலரையும் சினேகத்துடனும் பிரியத்துடனும் சமமாகப் பாவித்து கைகுலுக்க முடியுமா.. அன்புக்காகவும், ஆதரவுக்காகவும் ஏங்குபவர்களைத் தேடிச்சென்று உதவிக்கரம் நீட்ட முடியுமா.. எல்லாமும் முடியும் என்று சாதித்துக் காட்டி, தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து மறைந்தவர் ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் வெ. ஜீவானந்தம். 

சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் பொதுவுடைவாதியுமான வெங்கடாலசலத்திற்கு மகனாகப் பிறந்தவர் ஜீவானந்தம். தந்தையில் சிந்தனைச் சாயல், உறவினர்களின் தத்துவச் சாயல், ஈரோட்டு மண்ணின் உரிமைச் சாயல் என அனைத்தையும் ஏந்திக் கொண்ட ஜீவானந்தம் தந்தை பெரியாரின் சிபாரிசின் பேரில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர். அந்த வித்தியாசத்தையும், பெருமையையும், கடமையையும் முழுமையாக உணர்ந்ததன் காரணமாகவே மக்களுக்கான மருத்துவராக தன்னை ஆக்கிக் கொள்ள முயற்சித்தார்.

மக்களுக்கான மருத்துவர் என்கிற அடையாளம் அவருக்கு சாதாரணமாக கிடைத்திடவில்லை. ஈரோடு மாவட்டத்தில் ஒரு சிலரே மயக்க மருத்துவம் படித்திருந்த போதும் இவர் படித்த மயக்கவியல் மருத்துவத்தை பணப்பெருக்கத்திற்கானதாக பயன்படுத்திடவில்லை. மிகவும் குறைவான மருத்துவர்களிடமே மயக்கவியல் நிபுணராக பணிபுரிந்தார். தங்களது மருத்துவமனை அனைத்துத் தரப்பினருக்கும் நோய் தீர்க்கும் மருத்துவமனையாக அமைந்திட வேண்டுமென்கிற பேராசையுடன் குறைந்த கட்டண மருத்துவமனையாக கியூரி மருத்துவமனையைத் தொடங்கினார்.

ஆனால் அதன்பிறகுதான் டி.டி.கே அறக்கட்டளையினருடன் தொடர்பு கிடைத்திடவே தமிழக அளவில் முதன்முறையாக தனது புதிய மருத்துவமனையான குடிநோயாளிகள் மீட்பு மையத்தைத் தொடங்கினார். அந்த மருத்துவமனை கல்வித் தாகம் தீர்த்த நளந்தா பல்கலைக்கழகத்திற்கு இணையாக தனது நளந்தா மருத்துவமனை அனைவருக்கும் நலத்தை தந்தருளும் மருத்துவமனையாக அமைந்திட வேண்டுமென்கிற எண்ணத்தில் வித்தியாச பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.

கடந்த 30 ஆண்டுகளாக தன்னை நம்பிக்கையுடன் நாடி வந்த பல்லாயிரக்கணக்கான குடிநோயாளிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் குடிநோயற்ற அழகான வாழ்க்கையை அறிமுகம் செய்து காட்டியவர். வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று மருத்துவமனையில் நடைபெறும் குடிநோயாளிகள் தங்களது புதிய வாழ்க்கைக்கும் தங்களது புதிய வாழ்க்கையை வடிவமைத்துக் கொடுத்த மருத்துவமனைக்கும் நன்றி செலுத்தும் கூட்டம்  கடந்த வாரம் வரை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இப்படித்தான் தொடங்கியது இவரது நன்றி செலுத்தும் நடைமுறை. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இவருக்குள் கிளை விட்டுத் தொடங்கியிருந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பழங்குடியின பாதுகாப்பு, மக்களுக்கான எழுத்தாளர்கள் சந்திப்பு, மரபு சார்ந்த பொருள்கள் பாதுகாப்பு, இலக்கிய ஆர்வத்தை வளர்ப்பது, படித்தவர்கள் சந்திப்பது, படிக்காதவர்களை படிக்க வைப்பது, நதிகளைக் காப்பது, மத நல்லிணக்கம் பேணுவது, நாட்டுப்பற்றை ஊக்கப்படுத்துவது, காந்தியத்தைப் போற்றுவது என்று அனைத்தையும் ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் சேர்ந்து வெற்றிப்புள்ளிகளாக்கிக் காட்டியவர்.

தமிழக பசுமை இயக்கத்தின் பேரில் நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் போராட்டங்கள் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈரோடு பக்கம் திரும்ப வைத்தவர். தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பள்ளிக் குழந்தைகள் முதல் அரசியல்வாதிகள் வரையிலான கவனத்தையும் விழிப்புணர்வினையும் ஏற்படுத்தியவர். அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்ட போது இந்திய அளவில் ஈரோட்டில் மட்டும்தான் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சர்வமதப் பிரார்த்தனைகளுடன் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 

இந்திய உலகுக்கு அறிமுகமாக வேண்டியவர்கள் மறைக்கப்பட்டிருந்ததை, புறக்கணிக்கப்பட்டிருந்தவர்களை புத்தாக்கம் செய்து அவர்களது புனித யாத்திரையை தொடங்கி வைத்தவர். காந்தியின் போராட்டத்திற்கு முதன்முதலாக தன்னை உயிர்ப்பலி கொடுத்த தில்லையாடி வள்ளியம்மையை வரலாறுக்கு காட்டிக் கொடுத்த பெருமை கொண்டவர். காந்தியின் கிராமப் பொருளாதாரத்தைக் கட்டிக் காத்து வந்த ஜே.சி.குமரப்பாவை காந்தியவாதிகள் உள்பட அனைவருக்கும் கொண்டு சேர்த்தவர் மருத்துவர் ஜீவா.

மருத்துவர் ஜீவா வெளியிட்ட ஜே;சி.குமரப்பாவின் நூலை தில்லி வரை கொண்டு சென்று பாராட்டி ஜே.சி.குமரப்பாவை இந்தியா முழுமைக்கும் பொருத்தமானவர் என்பதை தினமணி நாளிதழ் பல ஆண்டுகளுக்கு முன்னரே செய்து மருத்துவரின் சமூகப் பணிக்கு வழியமைத்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

மத நல்லிணக்கத்தின் நல்வழியை திப்பு சுல்தான் சுதந்திரப் போராட்டத்திலிருந்து புரட்டிக் காட்டியவர். சாதாரணராய் நிறுவனத்தில் பணியாற்றிய நம்மாழ்வாரை அவருக்குள்ளிருக்கும் இயற்கை விஞ்ஞானியை அவருக்கே உணர வைத்து தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அடையாளம் காட்டி நஞ்சற்ற விவசாய அரங்கிற்கு கைப்பிடித்து இழுத்து வந்தவர் ஜீவாதான். மேதாபட்கரை தமிழகத்திற்கு வரவழைத்து தமிழகத்திலும் பிரச்னைகள் இருப்பதை அரிய வைத்து அதற்காகவும் போராட வைத்து தமிழகத்தில் அவரது அமைப்பை விரிவாக்கம் செய்தவர்.

மொழிபெயர்ப்புக்குள் வாசகர்கள் கண்களுக்கு சிக்காமலிருந்த பல முக்கிய விசயங்களைத் தேடித் தேடி தமிழுக்கு அறிமுகம் செய்தவர். தனது ஆர்வத்தை உலகம் முழுவதும் உலா வரச் செய்து அவற்றை உள்ளூர் செய்திகளாக்கி அனைவரையும் கட்டாயம் வாசிக்க வைத்தவர். 

அவருக்கு அனைவருமே நண்பர்கள்தான். அவரால்  கவிஞராக, எழுத்தாளராக, குடிநோயை விட்டவராக, கண்பார்வையிழந்தும் தொழில் செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை பெற்றவர்களாக, வாழ வாய்ப்பில்லாத முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு வாழ முடியும் என்கிற அடைக்கலம் கொடுத்தவராக, அனைத்துப் பிரச்னைகளுக்கும் குரல் கொடுப்பவராக இப்படித்தான் தன்னை அனைவருக்கும் மருத்துவராக இருப்பதை விடவும் மனிதராகவும் மனிதாபிமானியாகவும் வாழ்ந்து காட்டியவர்.

மருத்துவம் பயின்ற ஒருவர் இப்படித்தான் இருக்க வேண்டுமென்கிற கட்டுப்பாடில்லாதவராக மக்களுக்கானவராக வாழ்ந்து காட்டியவர். யாரிடமும் தன்னை மெத்த மருத்துவப் படிப்பு பயின்றவன் என்கிற அகந்தையைக் காட்டத் தெரியாதவர். அவருக்கு உதவுவது பிடித்தது போல் மரணங்கள் விருப்பமானதாக அமைந்ததில்லை. 

இப்படிப் பலரைப் போலவும் மரணத்தை விரும்பாத மனிதாபிமானத்தின் அபிமானியான மருத்துவர் ஜீவானந்தம் உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை(மார்ச் 2, 2021) 3 மணியளவில் ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் உயிர் பிரிந்தார்.

எல்லோருக்கும் நம்பிக்கையை அளித்த, அனைவருக்கும் நட்பைப் பரிசாக வழங்கிய, தன்னைத் தேடி வந்தவர்களுக்கு தன்னிடமிருந்த அன்பைப் பரிமாறிக் கொண்டே இருந்தவர் மருத்துவர் ஜீவா. புதிது புதிதாக படிக்கக் கொடுத்துக் கொண்டே இருந்தவர், புதிது புதிதான காரியங்களை செய்து கொண்டே இருந்தவரின் எழுத்துக்கள் சட்டென யாரும் எதிர்பாராமல் முற்றுப்புள்ளியாக ஓய்ந்து போனது வேதனையளிக்கக் கூடியதுதான்.

ஒரு மருத்துவரால் இத்தனையும் செய்து விட முடியும் என்று நிரூபித்து உயிரிழந்துள்ள அவரது மரணம் அவரைப் போல மக்களையும், மண்ணையும் சார்ந்து வாழ்ந்து வரும் மருத்துவத்தை நேசித்து வாழும் ஏனைய மருத்துவர்களுக்கும் பெரும் இழப்புதான். அவரது வாழ்க்கை முடிவுற்ற போதும் அவர் எழுதி வைத்துள்ள பக்கங்கள் வாசிக்க வாய்ப்பை வழங்கியபடியே இருக்கும். அதுதான் அவர் விட்டுச் சென்ற தனது அனுபவத்தின் சாயலுடன் கூடிய காலச்சுவடுகள். ஒரு மனிதர் பன்முகமாக வாழ்ந்து அதனை வெற்றியாகவும் நிகழ்த்திக் காட்டிய மருத்துவர் ஜீவானந்தத்தின் நினைவைப் போற்றுவதும், அவரைச் சிந்தித்து கைத்தட்டிக் கொள்வதும் நமக்கானதும் கூட.

<!–

–>