அம்பானி வீட்டு காதல் பறவைகளின் புதுக்குடித்தன மாளிகை விலை என்ன தெரியுமா?

டிசம்பர் 13, 2018 அன்று மொத்த இந்தியாவும் மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு வெகு விமரிசையாக நடந்து முடிந்தது முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானி, தொழிலதிபர் அனந்த் பிரமல் திருமணம். முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ‘அண்டிலியா’ எனும் ஆடம்பர மாளிகையில்  நடத்தப்பட்ட இந்த திருமண விழாக் கொண்டாட்டம் சுமார் 1 வார காலத்துக்கு நீடித்தது. திருமணத்தில் கலந்து கொண்ட வி வி ஐ பி, வி ஐ பி க்கள் பட்டியலை வெளியிட்டால் பார்ப்போர் தலை சுற்றிப் போவார்கள். அந்த அளவுக்கு நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் என திருமணம் திமிலோகப்பட்டது. திருமணம் நிகழ்ந்தேறிய அம்பானியின் ‘அண்டிலியா’ மாளிகை யைப் பற்றி பெத்த பேர் உண்டு. இந்தியாவின் மிகப்பெரிய லக்ஸுரி மாளிகைகளில் ஒன்றான அண்டிலியாவின் இன்றைய மதிப்பு 200 கோடி ரூபாய்கள் என்கிறார்கள்.

அதைக்காட்டிலும் விலையுயர்ந்தது என்றால் இதுவரையில் இங்கிலாந்தின் பங்கிங்ஹாம் அரண்மனையின் பெயரைத்தான் சொல்லிக் கொண்டிருந்தோம். இனிமேல் அப்படிச் சொல்லத் தேவை இருக்காது. ஏனெனில் அண்டிலியாவைக் காட்டிலும் விலையுயர்ந்த மாளிகையொன்று இந்தியாவில் கட்டப்பட்டு விட்டது. அது யாருக்கு என்றால்? அம்பானி மகளுக்கும், மருமகனுக்கும். இந்த மாளிகையை இவர்களுக்காகக் கட்டி பரிசளித்திருப்பது யார் தெரியுமா? அம்பானி இல்லை. அவரது சம்பந்தி அதாவது மணமகனின் பெற்றோர்.

கிடைத்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவலின் அடிப்படையில், ‘குலிட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாளிகையின் மொத்த மதிப்பு 450 கோடி. சுமார் 50,000 சதுர அடி மனையில் கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட மாளிகை தெற்கு மும்பையின் வோர்லி பகுதியில் அரபிக் கடலைப் பார்த்த வண்ணம் அமைந்திருக்க்றது. மாளிகையின் எஃகு வேலைப்பாடுகள் அனைத்தும் 11 மீட்டர் உயரத்தில் 3D தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டடத்தை வடிவமைக்கும் பொறுப்பு லண்டனைச் சேர்ந்த எக்கர்ஸ்லே ஒக்லகான் எனும் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகத் தகவல்.

மூன்று தளங்களுடன் அமைந்திருக்கும் இந்த மாளிகையின் ஒவ்வொரு தளத்திலும் தனித்தனியாகப் பல டைனிங் அறைகளும், வெளிப்புற நீச்சல் குளம் ஒன்றும், தளத்திற்கு ஒன்றாக தனித்தனியே மிகப்பெரிய வரவேற்பறைகளும் வடிவமைக்க்ப்பட்டுள்ளன.

இந்த மாளிகை டயமண்ட் தீமின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் ஸ்பெஷல் டயமண்ட் அறையொன்றும் இங்கு உண்டாம். ஒரு திறந்த வெளி நீச்சல் குளமும், பூஜை அறையும் மிக ரம்மியமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

ஆக மொத்தத்தில் இந்த செய்தியை அறிந்த மாத்திரத்தில் இயக்குனர் சங்கரின் ‘அந்நியன்’ திரைப்படப் பாடலொன்று நினைவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

‘உன் போல் அழகி உலகினில் இல்லை, இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை’ என்ற பாடலைப் போலத்தான் இருக்கிறது அம்பானிகளின் ஆடம்பர மாளிகைக் கதை.

இதுவரை இந்தியாவிலேயே மிக விலையுயர்ந்த ஆடம்பர மாளிகைக்குச் சொந்தக்காரர் என்றால் அது முகேஷ் அம்பானி என்று சொல்லிக் கொண்டிருந்தோம். இனிமேல் அவரது மகள், மருமகளின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்.

சரிதான். 
 

<!–

–>