ஆச்சர்யம் காத்திருக்கிறது: பாண்டியா

 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவுக்கும் செல்லவில்லை. ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணியில் விளையாடிய பாண்டியா, காயம் காரணமாக ஒரு ஓவர் கூட வீசவில்லை. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகப் பந்து வீசாததால் விமர்சனங்களுக்கு ஆளானார். பிறகு நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் பந்துவீசினாலும் ஒரு விக்கெட்டும் அவர் எடுக்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்தபோது தோள்பட்டையில் பாண்டியாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்துக் காயத்துக்குச் சிகிச்சை எடுத்து வருகிறார். 

2015-ல் ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார் பாண்டியா. கடந்த வருடம் வரை மும்பை அணிக்கு மட்டுமே விளையாடியுள்ளார். ஏழு வருடங்கள் விளையாடியதில் மும்பை அணி நான்கு முறை சாம்பியன் ஆகியுள்ளது. 

ஐபிஎல் 2022 போட்டியில் ஆமதாபாத் அணியின் கேப்டனாகச் செயல்படவுள்ளார். இந்நிலையில் கேப்டன் பதவி பற்றி பாண்டியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய அணியினருக்கு என்னுடைய பந்துவீச்சு உடற்தகுதி பற்றி தெரியும். அனைவருக்கும் அத்தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஹார்திக் பாண்டியாவை ஒரு பேட்டராக மட்டும் இல்லாமல் பந்துவீச்சாளராகவும் இணைத்துப் பார்க்கும்போது நன்றாக உள்ளது. என்னுடைய பந்துவீச்சு உடற்தகுதியைப் பற்றி கேட்கிறீர்கள். அனைவருக்கும் அது ஆச்சர்யமாக இருக்கும். 

ஐபிஎல் போட்டியில் கடைசிக்கட்டத்தில் தான் நான் பேட்டிங் செய்ய வருவேன். தேவை ஏற்பட்டால் மட்டுமே முன்னால் களமிறங்குவேன். கேப்டனாக புதிய பொறுப்பில் நான் எப்படிச் செயல்படுகிறேன் என்பதைச் சோதிக்க ஐபிஎல் சரியான களமாக இருக்கும். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் உள்ள அதே அழுத்தம் ஐபிஎல்-லிலும் இருக்கும். இது நல்ல தொடக்கம். இதன் வழியாக நாட்டுக்குத் தலைமை தாங்கவும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அதை நான் எதிர்பார்க்கவில்லை. அது என்னை நோக்கி வருவதாக இருந்தால் நிச்சயம் வரும்.

ஒரு நல்ல கேப்டனாக இருப்பது எப்படி என்கிற கையேடு கற்றுக்கொள்ள இல்லை என நினைக்கிறேன். எந்த ஆட்டத்திலும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்பவனாக இருந்துள்ளேன். எங்கள் அணி வீரர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒரே குறிக்கோளுடன் விளையாடுவோம். என் அணி வீரர்களுக்காக எப்போதும் என் கதவு திறந்திருக்கும். மனத்தளவில் கேப்டனாகச் செயல்படுவதற்குத் தயாராக உள்ளேன். விராட் கோலியிடமிருந்து ஆக்ரோஷமும் தோனியிடமிருந்து நிதானமும் ரோஹித்திடமிருந்து வீரர்கள் தன் விருப்பத்தைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தையும் கற்றுக்கொண்டுள்ளேன் என்றார்.  

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>