ஆன்லைன் கல்விமுறை நல்லதுதான்! ஏன்?


கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது ஒமைக்ரான் பரவல் காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. 

இதையடுத்து நேரடி வகுப்புகளுக்கு மாற்றாக புதிதாக ஆன்லைன் கல்வி முறையில் மாணவர்கள் பாடம் கற்கின்றனர். மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கியுள்ளதால் மனநிலை பாதிக்கப்படுவதாகவும் ஆன்லைன் கல்வி முறையால் கல்வியும் பாதிக்கப்படுவதாகவும் பல ஆய்வுகள் கூறுகின்றன. 

இந்நிலையில், குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி முறை நல்லதுதான் என்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு. 

சூரிச் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, மாணவர்கள் வீட்டில் இருப்பது அவர்களின் உடல்நலம் உள்ளிட்ட  நேர்மறை விளைவுகளையும் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறது.

‘ஜாமா நெட்ஒர்க் ஓப்பன் ஜர்னல்’ என்ற இதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

‘மாணவர்கள் ஊரடங்கின்போது ஒரு நாளைக்கு சுமார் 75 நிமிடங்கள் அதிகமாக தூங்கினர். இளைஞர்கள் மது அருந்துவது, புகைப்பிடிப்பது உள்ளிட்டவையும் குறைந்தது. இதனால் அவர்களின் உடல்நலம் தொடர்பான வாழ்க்கைத் தரம் மேம்பட்டது’ என்று ஆய்வின் இணைத் தலைவர் ஆஸ்கர் ஜென்னி தெரிவித்தார். 

ஊரடங்கு காலத்தில் சூரிச் மாகாணத்தில் உள்ள 3,664 உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் தூக்க முறைகள், வாழ்க்கைத் தரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வை மேற்கொண்டனர். 

பள்ளிகள் மூடப்பட்ட மூன்று மாதங்களில், சுமார் 90 நிமிடங்கள் தாமதமாக எழுந்தனர், ஆனால், இரவில் 15 நிமிடங்கள் தாமதமாக படுக்கைக்குச் சென்றனர். அதாவது அவர்களின் மொத்த தூக்கத்தின் அளவு சுமார் 75 நிமிடங்கள் அதிகரித்தது. வார இறுதி நாட்களில் தூக்க நேரங்களில் சிறிய வித்தியாசம் இருந்தது என்று ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கினால் மாணவர்கள் வீட்டில் முடங்கியிருந்ததால் மனநலம் என சில பாதிப்புகள் இருந்தாலும் சரியான வாழ்க்கைமுறையைக் கையாண்டதாகவும் இதனால் அவர்களின் உடல்நலம் மேம்பட்டதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. 

இதையும் படிக்க | குழந்தைகளுக்கு எந்த வயதில் கற்றுக்கொடுக்கத் தொடங்க வேண்டும்?

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>