ஆஷஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 473 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த ஆஸி. அணி

 

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி, 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டை ஆஸி. அணி எளிதாக வென்றது. 

2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. 2017-18 ஆஷஸ் தொடரை வென்று 2019 தொடரை சமன் செய்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி வசம் உள்ளது.

2-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் வியாழன் முதல் நடைபெற்று வருகிறது.  கரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ், அடிலெய்ட் டெஸ்டிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக பிரபல வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆஸி. கேப்டனாகவும் டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்கள். மைக்கேல் நசீர் ஆஸி. அணியில் இடம்பிடித்தார்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டேவிட் வார்னர் 167 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 89 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. லபுஷேன் 95 ரன்களுடனும் ஸ்மித் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

லபுஷேன்

இன்று ஆட்டம் தொடர்ந்தபோது 287 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார் லபுஷேன். இதன்பிறகு ராபின்சன் பந்தில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

டிராவிஸ் ஹெட் 18 ரன்களில் ரூட் பந்தில் போல்ட் ஆனார். கேம்ரூன் கிரீனை 2 ரன்களில் வெளியேற்றினார் ஸ்டோக்ஸ். இதன்பிறகு ஸ்மித்தும் அலெக்ஸ் கேரியும் அருமையான கூட்டணி அமைத்தார்கள். சதத்தை நெருங்கும்போது 93 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார் ஸ்மித். 107 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த கேரி, ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசியில் அதிரடியாக விளையாடிய மைக்கேல் நசீர் 35 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். ஜை ரிச்சர்ட்சன் 9 ரன்களில் ஆட்டமிழக்க ஆஸி. அணியின் முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டார் கேப்டன் ஸ்மித்.

ஆஸ்திரேலிய அணி, 150.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>