ஆஷஸ் தொடர் வெற்றியை நெருங்கும் ஆஸ்திரேலியா: மெல்போர்னில் மேலும் தடுமாறும் இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டையும் அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்டையும்  ஆஸி. அணி எளிதாக வென்றது. ஆஷஸ் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. 3-வது டெஸ்ட், மெல்போர்னில் ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. 

2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. 2017-18 ஆஷஸ் தொடரை வென்று 2019 தொடரை சமன் செய்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி வசம் உள்ளது.

3-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் பர்ன்ஸ், ஆலி போப், கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் ஆகிய நால்வரும் நீக்கப்பட்டு கிராவ்லி, ஜானி பேர்ஸ்டோ, மார்க் வுட், ஜேக் லீச் ஆகியோர் இடம்பிடித்துள்ளார்கள். ஆஸி. அணியில் காயம் காரணமாக ஜை ரிச்சர்ட்சன் விலகியுள்ளார். இதனால் ஸ்காட் போலண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார். காயத்திலிருந்து ஜோஷ் ஹேசில்வுட் இன்னும் குணமாகவில்லை. கேப்டன் கம்மின்ஸ் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளதால் மைக்கேல் நசீர் மெல்போர்ன் டெஸ்டில் விளையாடவில்லை.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 65.1 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஜோ ரூட் 50 ரன்களும் பேர்ஸ்டோ 35 ரன்களும் எடுத்தார்கள். பேட் கம்மின்ஸ், லயன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 16 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்தது. 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 87.5 ஓவர்களில் 267 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மார்கஸ் ஹாரிஸ் 76 ரன்கள் எடுத்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்நிலையில் 2-வது இன்னிங்ஸிலும் இங்கிலாந்து அணியின் மோசமான பேட்டிங் தொடர்கிறது. 2-ம் நாள் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 51 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஜோ ரூட் 12, ஸ்டோக்ஸ் 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இதனால் 3-வது டெஸ்டையும் வென்று ஆஷஸ் தொடரைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது ஆஸ்திரேலிய அணி. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>