ஆஷஸ் பகலிரவு டெஸ்ட்: நிலைமையை மாற்றுமா இங்கிலாந்து அணி?

 

1954-55க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரில் முதல் டெஸ்டை இழந்த இங்கிலாந்து அணி ஒருபோதும் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. 

இம்முறை ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, புதிய சாதனையை நிகழ்த்தும் முனைப்பில் உள்ளது. 

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டை ஆஸி. அணி எளிதாக வென்றது. 

2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. ஆஷஸ் தொடரில் நடைபெற்ற 335 டெஸ்டுகளில் 136-ல் ஆஸ்திரேலியாவும் 108-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 91 டெஸ்டுகள் டிரா ஆகியுள்ளன. 2017-18 ஆஷஸ் தொடரை வென்று 2019 தொடரை சமன் செய்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி வசம் உள்ளது.

2-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நாளை (டிசம்பர் 16) நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் ஆஸி. அணியில் இடம்பெறுவார் என கேப்டன் கம்மின்ஸ் அறிவித்துள்ளார்.

பகலிரவு டெஸ்டுக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிராட், ஆண்டர்சன் ஆகியோர் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார்கள். மார்க் வுட் இடம்பெறவில்லை. 

ஆஸ்திரேலியாவில் கடைசியாக விளையாடிய 11 டெஸ்டுகளில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி கிடைத்ததில்லை. 

மேலும் ஆஸ்திரேலிய அணி இதுவரை விளையாடிய 8 பகலிரவு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அடிலெய்டில் மட்டும் 5 வெற்றிகள். ஆனால் இங்கிலாந்து அணி பகலிரவு டெஸ்டுகளில் ஒரு வெற்றியை மட்டும் அடைந்து 3-ல் தோல்வியடைந்துள்ளது. 

எனினும் கடந்த வருடம் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தோல்வியிலிருந்து மீண்டு வந்து வெற்றி பெற்றது போல நாங்களும் வெற்றி பெற முயற்சி செய்வோம் என ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

அடியெல்ட் ஆடுகளம், பகலிரவு டெஸ்ட், வரலாறு என பல அம்சங்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாக உள்ளன. 1954-55க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்டை இழந்து டெஸ்ட் தொடரை வென்ற அணி எனப் பெயரெடுக்க இங்கிலாந்து விரும்புகிறது. பலத்த போட்டி நமக்குக் காத்திருக்கிறது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>