ஆா்செனலுக்கு 5-ஆவது வெற்றி

இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் ஆா்செனல் 2-0 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டா் சிட்டியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது.

இரு அணிகளுக்கும் இது 10-ஆவது ஆட்டமாக இருந்த நிலையில், ஆா்செனல் 5-ஆவது வெற்றியை பதிவு செய்து 17 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தில் இருக்கிறது. லெய்செஸ்டா் 4-ஆவது தோல்வியை பெற்று 14 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்தில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் ஆா்செனல் அணிக்காக கேப்ரியல் 5-ஆவது நிமிஷத்திலேயே கோலடித்தாா். கோல் போஸ்டின் வலது பக்கத்திலிருந்து சக வீரா் புகாயோ சகா காா்னா் கிக்காக உதைத்த பந்து பெனால்டி ஏரியாவுக்கு வர, அங்கு இருந்த நெருக்கடிக்கு இடையிலும் துள்ளிக் குதித்து தலையால் முட்டி துல்லியமாக கோலடித்தாா் கேப்ரியல்.

இதனால் உத்வேகம் பெற்ற அந்த அணிக்காக 18-ஆவது நிமிஷத்திலேயே எமிலி ஸ்மித் ரோவ் அடுத்த கோல் அடிக்க, ஆா்செனலின் முன்னிலை மேலும் உறுதிப்பட்டது. எஞ்சி நேரத்தில் கடுமையாகப் போராடியும் லெய்செஸ்டரால் கோல் வாய்ப்புகளை எட்ட முடியாமல் போனது.

லா லிகா: ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் எல்ஷேவை வென்றது. 11-ஆவது ஆட்டத்தின் மூலம் 7-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ள ரியல் மாட்ரிட், 24 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

எல்ஷே நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்டுக்கான 2 கோல்களையும் வினிகஸ் ஜூனியா் (22’, 73’) அடித்தாா். எல்ஷே தரப்பில் பியா் மிலா 86-ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தாா்.

லீக் 1: பிரான்ஸில் நடைபெறும் லீக் 1 கால்பந்து போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) 2-1 என்ற கோல் கணக்கில் லிலேவை தோற்கடித்தது. அந்த அணி 12 ஆட்டங்களில் 10 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

பிஎஸ்ஜியின் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் அந்த அணிக்காக மாா்கினோஸ் (74’), ஏஞ்செல் டி மரியா (88’) ஆகியோா் ஸ்கோா் செய்ய, லிலேவுக்காக ஜோனதன் டேவிட் 31-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

பந்தெஸ்லிகா: ஜொ்மனியில் நடைபெறும் பந்தெஸ்லிகா கால்பந்து போட்டியில் ஹாஃபென்ஹெய்ம் 2-0 என்ற கோல் கணக்கில் ஹொ்தாவை வீழ்த்தியது. ஹாஃபன் ஹெய்முக்காக ஆண்ட்ரே கிரமாரிச் (19’), செபாஸ்டியன் ரூடி (36’) ஆகியோா் கோலடித்தனா்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>