இடுப்பு  வலி, வெட்டைச் சூட்டைப் போக்கும் அல்லி அரிசிப் புட்டு!

lillyriceputtu

யூடியூபில் ‘மை கண்ட்ரி ஃபுட்ஸ்’ தளத்தில் ஒரு மாமியாரும் மருமகளும் அல்லி அரிசிப் புட்டு செய்வது எப்படி என்று செய்து காட்டியிருந்தார்கள். பார்க்க வித்யாசமாக இருந்தது. அரிசியில் பலவகை இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர இதுவரை பலரும் பயன்படுத்திப் பழகியவை ஒரு சில வெரைட்டிகளைத் தான். ஏதோ இப்போது ஆர்கானிக் உணவு மோகம் தலைக்கேறி இருப்பதால் சிலருக்கு சிறுதானிய வகை அரிசிகளான கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, வரகு, மூங்கிலரிசி பற்றியெல்லாம் கொஞ்சம் தெரிந்திருக்கிறது. ஆனாலும் அல்லி அரிசி எல்லோருக்கும் புதுசு தான்.

குளங்களில் சர்வ சாதாரணமாக முளைத்துக் கிளைபரப்பிக் கிடக்கும் அல்லிப்பூக்களை சில இடங்களில் நாம் கண்டிருப்போம். அல்லியைப் பற்றி இதுவரை நாம் அறிந்தது அல்லி இரவில் மலரும் பூ என்பதாகவே இருந்திருக்கக் கூடும். அல்லிக்கிழங்கில் இருந்து அரிசி எடுத்து அதில் புட்டு செய்து சாப்பிடலாம் என்பதெல்லாம் அமேஸிங் திங்கிங். இந்தப் புட்டு செய்யக் கொஞ்சம் மெனக்கெடல் தேவை. பெரும்பாலும் பஞ்ச காலங்களில் மக்கள் இவ்வகைப் புட்டுக்களை செய்து சாப்பிட்டு உயிர்வாழ்ந்திருக்கிறார்கள்.

முதலில் அல்லிக்குளங்களுக்குச் சென்று அவற்றின் தண்டுகளில் கால் சிக்கிக் கொள்ளாமல் கணிசமான அளவில் அல்லிக்கிழங்குகளைப் பறித்தெடுக்க வேண்டும். பிறகு ஆரஞ்சுப் பழத்தில் சுளை உறித்து எடுத்து பழத்தினுள் இருக்கும் பல்புகளை எடுத்தாற்போன்று அல்லிக்கிழங்கில் இருந்து உள்ளிருக்கும் அரிசி போன்ற பொருளைப் பிரித்து உதிர்க்க வேண்டும். இதைக் கவனமாகச் செய்தோமென்றால் அல்லி அரிசி வீணாகாமல் காக்கலாம். அல்லி அரிசியில் இருவகை உண்டு .ஒன்று சிவப்பாக இருக்கும் மற்றொன்று வெளிர் கருப்பு. இதில் சிவப்பாக இருப்பதை அல்லிப் பச்சரிசி என்றும் வெளிர் வெள்ளையாக இருப்பதை அல்லிப் புழுங்கலரிசி என்றும் அழைக்கிறார்கள்.

தேவையான பொருட்கள்:

  • அல்லிக் கிழங்கு – 20 முதல் 25 வரை
  • பச்சரிசி: அரைப்படி
  • தேங்காய் : அரைமுடி
  • வெல்லம்: தேவையான அளவு
  • ஏலக்காய்: 4 அல்லது 5 

செய்முறை:

அல்லி அரிசியை நன்கு பொரியும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும். அதே விதமாக பச்சரிசியையும் வறுத்துப் பொன்னிறமாக எடுத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காயைத் துருவி அதையும் வறுத்து எடுத்துக் கொண்டு பச்சரிசி, அல்லி அரிசி இரண்டையும் உரலிலோ அல்லது மிக்ஸியிலோ இட்டு பொடித்துக் கொண்டு அதில் நன்கு  திருவிய தேங்காயையும் வெல்லத்தையும் சேர்த்துப் பிசிறி விடவும். கலவை நன்கு கலக்க சிறிது வெந்நீர் தெளித்துக் கொள்ளலாம். அரசிலையில் அவித்து வைத்த அல்லி அரிசிப் புட்டை சுடச்சுட பரிமாறி ருசித்துப் பாருங்கள். புதுமையாகவும் அதே சமயம் வித்யாசமான சுவையிலும் நாவைக் கட்டிப்போடும். எதற்காக மெனக்கெட்டு அல்லி அரிசியில் புட்டு செய்து சாப்பிட வேண்டும் என்று கேட்பவர்களுக்கான பதில்… அல்லி அரிசிக்கு இடுப்பு வலி, வெட்டை நோய், உடல்வலி போன்றவற்றை தீர்க்கும் குணங்கள் உண்டு.
 

<!–

–>