இது வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களுக்கு கசப்பான செய்தி

whatsapp-e1489070253100-1520955310

மாறி வரும் காலத்தின் தேவைக்கேற்ப வாட்ஸ் ஆப்பும் பல்வேறு புதிய மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறது. முகநூல் நிறுவனத்திடம் உள்ள வாட்ஸ்ஆப்பில் மிக முக்கிய மாற்றம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வாட்ஸ்ஆப்பில் உள்ள சாட், வீடியோ, புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் நவம்பர் 12, 2018-க்குப் பிறகு தாமாகவே அழிந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாக வாட்ஸ்ஆப்பில் நாம் பதிவிறக்கம் செய்து பார்க்கும் வீடியோ, புகைப்படங்கள், சாட்கள் அனைத்தும் நமது ஸ்மார்ட்போன் மெமரியில் சேமிக்கப்படும். அதேநேரத்தில், இந்தத் தகவல்கள் கூகுள் டிரைவிலும் (பேக்கப்) சேமிக்கப்படும். 

இந்தத் தகவல்களை கடந்த ஓராண்டுக்கு மேல் புதுப்பிக்கவில்லை என்றால், கூகுள் டிரைவில் உள்ள அனைத்து தகவல்களும் நவம்பர் 12, 2018-க்குப் பிறகு அழிக்கப்படும் என்று வாட்ஸ் ஆப் அறிவித்துள்ளது. இதற்காக கூகுளுடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.

இது வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களுக்கு கசப்பான செய்தியாக இருந்தாலும், மகிழ்ச்சி தரும் மற்றோர் அம்சமும் உள்ளது. அதாவது, இனி வரும்காலங்களில் வாட்ஸ்ஆப் தகவல்களை ஸ்மார்ட்போன் மெமரியில் சேமிப்பதை விட நேரடியாக கூகுள் டிரைவிலேயே இலவசமாகச் சேமிக்கலாம் என்றும் இந்தத் தகவல்களின் அளவில் எந்தவித அளவீடும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் கூகுள் டிரைவில் உள்ள நீண்டநாள் வாட்ஸ்ஆப் தகவல்களைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்ப்போம்.உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் கணக்கு பயன்பாட்டில் இருக்க வேண்டும். கூகுள் டிரைவில் உள்ள தகவல்கள் உங்கள் போனில் பதிவிறக்கம் செய்ய ஏதுவாக காலியான இடம் இருக்க வேண்டும். கூகுள் பிளே, ஆன்ட்ராய்ட் பிரிவு 2.3.4 மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும். பின்னர், வாட்ஸ்ஆப்பில் உள்ள செட்டிங்ஸ் பிரிவில் சென்று சாட்ஸ், சாட் பேக்கப்-பை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் வாட்ஸ்ஆப் – ஐ ரீ-இன்ஸ்டால் செய்தால் அனைத்து பேக்கப்களும் ஸ்மார்ட்போனுக்கு வந்துவிடும். இந்த செயலின்போது Wi-Fi இணைப்பில் இருந்தால் உடனடியாகப் பதிவிறக்கம் செய்யலாம். இல்லை டேட்டாவுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதேபோல், ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை கூகுள் டிரைவில் பேக்கப் செய்வதற்கு வாட்ஸ்ஆப் செட்டிங்கில் சென்று சாட்ஸ், சாட் பேக்கப், பேக்கப் டூ கூகுள் டிரைவ்-ஐ கிளிக் செய்து, பின்னர் பேக்கப் செய்வது மாதந்தோறுமா அல்லது தினந்தோறுமா என்பதைத் தேர்வு செய்தால் போதும். கூகுள் டிரைவிற்கு தகவல்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்துவிடலாம்.
– அ.சர்ஃப்ராஸ்
 

<!–

–>