'இந்தியாவில் கரோனா அவசர உதவி எண் குறித்து 48% பேர் அறிந்திருக்கவில்லை'


கரோனா சிகிச்சைக்கான அவசர உதவி எண் குறித்து இந்தியாவில் 48% பேர் அறிந்திருக்கவில்லை என்று புதிய ஆய்வொன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

நாட்டில் கரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பல மாநிலங்களில் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், கரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

இந்நிலையில் மக்கள் யாரேனும் கரோனா அறிகுறிகள் இருப்பதாகத் தெரிந்தால் இலவச உதவி எண் 1075 அல்லது +91-11-23978046 அழைக்கும்படி மத்திய அரசு அறிவித்துள்ளது. 

ஆனால், அரசின் இந்த உதவி எண் குறித்து தெரியாது என்று 48% மக்கள் கூறியுள்ளனர். 

நாட்டில் 12 மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 27,216 பேர் பங்கேற்ற இந்த ஆய்வினை ஸ்மைல் பவுண்டேஷன் நடத்தியுள்ளது. 

தில்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, தமிழகம், சத்தீஸ்கர், குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களிடம் கரோனா அவசர உதவி எண் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. 

இதில் 48% மக்கள் கரோனா சிகிச்சைக்கான ஹெல்ப்லைன் எண் குறித்து  அறிந்திருக்கவில்லை. 22.7% பேர் தனியார் மருத்துவமனைக்குச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர். 

45% பேர் அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ளனர். 25% பேர் கரோனா  பாதுகாப்பின்றி இருக்கின்றனர். அதாவது இவர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கைகளை கழுவுதல் என இவற்றை முழுமையாக கடைப்பிடிப்பதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>