இந்தியாவுக்கு முதல் வெற்றி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது

 

அபுதாபி: உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தனது முதல் வெற்றியை புதன்கிழமை பதிவு செய்தது. முதலிரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்திருந்த இந்திய அணி, இந்த 3-ஆவது ஆட்டத்தில் ஆல்-ரவுண்டில் அசத்தி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. 

அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் விளாசியது. அடுத்து ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களே அடித்தது. ரோஹித் சர்மா ஆட்டநாயகன் ஆனார்.

அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க இனி எல்லா ஆட்டங்களிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கிய இந்தியா, இந்த வெற்றியின் மூலம் போட்டியில் தன்னை தக்க வைத்துக் கொண்டது. 

பிளேயிங் லெவனில், வருண் சக்கரவர்த்தி காயமடைந்ததால் அவருக்குப் பதிலாக ரவிசந்திரன் அஸ்வின் களம் கண்டார். அதேபோல் காயத்திலிருந்து மீண்ட சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, இஷான் கிஷணுக்கு ஓய்வளிக்கப்பட்டது. அஸ்வின் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளைப் பந்து ஆட்டத்தில் களம் புகுந்தது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. 

இந்த ஆட்டத்திலும் டாûஸ இழந்த இந்தியா, முதலில் பேட் செய்யும் நிலைக்கு ஆளானது. எனினும், ஸ்கோரை அதிகமாக்கும் பட்சத்தில் ஆப்கானிஸ்தானுக்கு சவால் அளிக்க இயலும் என்பதை உணர்ந்து ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டினர் இந்திய பேட்டர்கள். 

இன்னிங்ûஸ தொடங்கிய கே.எல்.ராகுல் – ரோஹித் சர்மா வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் விளாசினர். இதனால் 5-ஆவது ஓவரிலேயே 50 ரன்களை எட்டியது ஸ்கோர். 

முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்த இந்த கூட்டணியை கரீம் ஜனத் 15-ஆவது ஓவரில் பிரித்தார். 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் எடுத்திருந்த ரோஹித், அவரது பெüலிங்கில் விளாசிய பந்து முகமது நபி கைகளில் கேட்ச் ஆனது. 

தொடர்ந்து ரிஷப் பந்த் ஆட வர, மறுபுறம் ராகுலும் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 69 ரன்கள் சேர்த்த நிலையில் குல்பதின் நயிப் வீசிய 17-ஆவது ஓவரில் பெüல்டானார். பின்னர் பாண்டியா களம் புகுந்தார். ஓவர்கள் முடிவில் பந்த் 1 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 27, பாண்டியா 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தானில் அதிகபட்சமாக கரீம் ஜனத் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை போராடினார். எஞ்சியோரில் ஹஸரதுல்லா ஜஸôய் 13, ரஹ்மானுல்லா குர்பாஸ் 19, குல்பதின் நயிப் 18, நஜிபுல்லா ஜர்தான் 11 சேர்க்க, கேப்டன் முகமது நபி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35 ரன்கள் அடித்தார். 

முகமது ஷாஸôத், ரஷீத் கான் டக் அவுட்டாகினர். ஓவர்கள் முடிவில் ஜனத்துடன் அஷ்ரஃப் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பெüலிங்கில் முகமது ஷமி 3, அஸ்வின் 2, பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் 
சாய்த்தனர். 

சுருக்கமான ஸ்கோர்

இந்தியா – 210/2

ரோஹித் சர்மா    74 
கே.எல்.ராகுல்    69 
ஹார்திக் பாண்டியா    35* 

பந்துவீச்சு

கரிம் ஜனத்    1/7
குல்பதின் நயிப்    1/39 
முகமது நபி    0/7

ஆப்கானிஸ்தான் – 144/7

கரீம் ஜனத்    42* 
முகமது நபி    35 
ரஹ்மானுல்லா    19 

பந்துவீச்சு

முகமது ஷமி    3/32 
அஸ்வின்    2/14 
ரவீந்திர ஜடேஜா    1/19

புள்ளிகள் பட்டியல்

குரூப் – 1
இங்கிலாந்து    4    4    0    8
தென் ஆப்பிரிக்கா    4    3    1    6
ஆஸ்திரேலியா    3    2    1    4
இலங்கை    4    1    3    2
மே.இ. தீவுகள்    3    1    2    2
வங்கதேசம்    4    0    4    0
குரூப் – 2
பாகிஸ்தான்    4    4    0    8
ஆப்கானிஸ்தான்    3    2    1    4
நியூஸிலாந்து    3    2    1    4
இந்தியா    3    1    2    2
நமீபியா    3    1    2    2
ஸ்காட்லாந்து    3    0    3    0

இன்றைய ஆட்டம்

குரூப் 1
ஆஸ்திரேலியா – வங்கதேசம்
நேரம்: பிற்பகல் 3.30
இடம்: துபை 

மேற்கிந்தியத் தீவுகள் – இலங்கை
நேரம்: இரவு 7.30
இடம்: அபுதாபி

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>