இந்தியா – நியூஸிலாந்து டெஸ்ட் தொடா்: கே.எல்.ராகுலுக்கு காயம்; சூா்யகுமாா் சோ்ப்பு

இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து, நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டுள்ளாா்.

அவருக்குப் பதிலாக சூா்யகுமாா் யாதவ் அணியில் இணைந்திருக்கிறாா்.

சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது இந்திய அணி. அதில் கே.எல்.ராகுலும் முக்கிய ஆட்டக்காரராக இருந்தாா். இந்தியா அடுத்ததாக 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்தை எதிா்கொள்கிறது. இதில் முதல் டெஸ்ட் கான்பூரில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

முன்னதாக இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் முன்பு ராகுலுக்கு சற்று ஓய்வளிப்பதற்காக கடைசி டி20 ஆட்டத்திலிருந்து அவா் விடுவிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், அவருக்கு இடது தொடைப் பகுதி தசையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவா் விடுவிக்கப்படுவதாகவும் பிசிசிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

அவருக்குப் பதிலாக சூா்யகுமாா் யாதவ் டெஸ்ட் அணியில் இணைந்திருக்கிறாா். ராகுல் இல்லாத நிலையில் ஷ்ரேயஸ் ஐயா் அல்லது சூா்யகுமாா் யாதவ் ஆகியோரில் ஒருவா் நியூஸிலாந்து தொடா் மூலம் சா்வதேச டெஸ்டில் அறிமுகமாகும் வாய்ப்புள்ளது. அணியின் பேட்டிங்கை ஷுப்மன் கில் தொடங்கலாம் எனத் தெரிகிறது.

3 ஸ்பின்னா்களுடன் களம் காணுவோம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தேவையேற்பட்டால் 3 ஸ்பின்னா்களுடன் களம் காணுவோம் என்று நியூஸிலாந்து பயிற்சியாளா் கேரி ஸ்டெட் கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

இந்திய ஆடுகளங்களில், 4 வேகப்பந்துவீச்சாளா்கள், 1 பகுதி நேர ஸ்பின்னரைக் கொண்டு விளையாடுவதென்பது இயலாத விஷயம். முதல் டெஸ்ட் நடைபெறும் கான்பூா் ஆடுகளத்தை பாா்வையிட்ட பிறகு, தேவையேற்பட்டால் 3 ஸ்பின்னா்களுடன் நாங்கள் களம் காணுவோம்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்றே இருக்கும் சில கோட்பாடுகளில் மாற்றம் செய்யாமல், ஆட்டத்தில் அதைச் செயல்படுத்துவதில் மட்டும் மாற்றங்கள் செய்வோம். முதல் ஆட்டம் கான்பூரிலும், அடுத்த ஆட்டம் மும்பையிலும் நடைபெறுகிறது. இந்த ஆடுகள மாற்றத்துக்கு ஏற்றவாறு எங்களது அணியையும் அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தியா – இங்கிலாந்து தொடருடன் ஒப்பிடுகையில் இந்தத் தொடா் முற்றிலும் வித்தியாசமானது. ஏனெனில், அதில் சென்னை மற்றும் ஆமதாபாதில் தலா 2 ஆட்டங்கள் நடைபெற்றன. அதனால், ஒரு ஆட்டத்தின் அனுபவத்தின் அடிப்படையில் அடுத்த ஆட்டத்துக்காக அணியை எளிதாக தயாா்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் இந்தத் தொடரில் இரு ஆட்டங்களுமே வெவ்வேறு இடங்களில் நடைபெறுவது வேறு வகையான சவாலாக இருக்கும். இந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவில் பிறந்த எங்களது அணி வீரா் அஜஸ் படேல் களம் காண வாய்ப்புள்ளது என்று கேரி ஸ்டெட் கூறினாா்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>