இந்தியா, பாகிஸ்தான் பங்கேற்கும் 4 நாடுகள் டி20 போட்டி: ஐசிசியிடம் ரமீஸ் ராஜா கோரிக்கை

இந்தியா, பாகிஸ்தான் உள்பட நான்கு நாடுகள் பங்கேற்கும் டி20 போட்டியை நடத்த ஐசிசியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.

அரசியல் சூழல் காரணமாக 2012-13-க்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐசிசி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் போட்டிகளில் மட்டுமே இரு நாடுகளும் மோதுகின்றன. இந்த நிலையை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா முயற்சி எடுத்து வருகிறார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 36-வது தலைவராக ரமீஸ் ராஜா கடந்த வருடம் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு வாரியத்தில் 2003-04-ல் தலைமை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். 2004-ல் இந்தியா பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்ததற்கு ரமீஸ் ராஜா முக்கியப் பங்கு வகித்தார். 

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என நான்கு நாடுகளும் பங்கேற்கும் டி20 போட்டியை நடத்த ரமீஸ் ராஜா திட்டமிட்டு இதுபற்றி ஐசிசி கூட்டத்தில் விவாதிக்கவுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியை ஒவ்வொரு வருடமும் நடத்துவதன் மூலம் இந்தியாவும் பாகிஸ்தானும் சர்வதேச ஆட்டங்களில் அடிக்கடி மோதும் நிலைமை உருவாகும், இதன் வழியாக அதிக வருமானமும் கிடைக்கும் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை ரமீஸ் ராஜா செய்து வருகிறார். 

ட்விட்டரில் அவர் மேலும் கூறியதாவது: இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என நான்கு நாடுகளும் பங்கேற்கும் டி20 சூப்பர் தொடர் ஒவ்வொரு வருடமும் நடைபெறும். சுழற்சி முறையில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வருடம் அப்போட்டியை நடத்தலாம். தனி வருமான முறையில் கிடைக்கும் லாபத்தை சதவீத அடிப்படையில் அனைத்து ஐசிசி உறுப்பினர்களும் பங்கிட்டுக்கொள்ளலாம். இது வெற்றிகரமாக அமையும் என்றார். 

ரமீஸ் ராஜாவின் இந்த முயற்சிக்கு ஐசிசி சம்மதம் அளித்துவிட்டால் இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஆட்டங்களை ஒவ்வொரு வருடமும் காண ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதனால் ஐசிசியின் முடிவு என்னவாக இருக்கும் என்கிற ஆர்வம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>