உங்கள் குழந்தைகள் காய்கறிகள், பழங்கள் சாப்பிட மறுக்கின்றனரா?

கரோனா தொற்றினால் பலரும் இன்று ஆரோக்கியமான இயற்கை உணவுகளுக்கு மாறி வருகின்றனர். நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரிக்கக்கூடிய ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். எனினும் குழந்தைகளிடம் இந்த மாற்றம் பெரிதாக இல்லை. 

இன்று குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு என்னவென்றால் பீட்சா, பர்கர் போன்ற பொருந்தா உணவுகள் மற்றும் துரித உணவுகள்தான். காய்கறிகள், பழங்கள் எல்லாம் குழந்தைகளின் உணவுப் பட்டியலில் இருந்து என்றோ விலகிவிட்டன. 

அப்படியே ஒருவேளை குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைக்க வேண்டுமென்றால், பெற்றோருக்கு பெரும் போராட்டம்தான். 

சமீபத்தில் குழந்தைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் ‘அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில்’ வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆய்வில் இரண்டு உத்திகள் கையாளப்பட்டன. முதலாவதாக, நாள் முழுவதும் குழந்தைகளின் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் 50% கூடுதலாகச் சேர்க்கப்பட்டது. இரண்டாவதாக ஏற்கெனவே உணவு அளவில் 50% மற்ற உணவுகளை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக 50% காய்கறிகள், பழங்கள் சேர்க்கப்பட்டது. 

கூடுதலாக சேர்க்கப்பட்டதில், குழந்தைகள், 24 சதவீதம் காய்கறிகளையும் 33 சதவீதம் பழங்களையும் சாப்பிட்டனர். ஏற்கெனவே உள்ள உணவுக்கு மாற்றாக காய்கறி, பழங்கள் வழங்கப்பட்டதில் குழந்தைகள் 41 சதவீதம் காய்கறிகளையும், 38 சதவீதம் பழங்களையும் சாப்பிட்டனர். 

இதையும் படிக்க | வீட்டில் சுத்தம் செய்ய மறந்துபோகும் 8 முக்கிய பொருள்கள்!

அதாவது, பழங்கள் மற்றும் காய்கறிகள் கட்டாயமாக உணவில் சேர்க்கப்படும்போது வேறு வழியின்றி குழந்தைகள் அதனை  எடுத்துக்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. 

குழந்தைகளுக்கு என்ன உணவளிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும்போது ​​50% உணவு, பழங்கள் மற்றும் காய்கறிகளாக இருக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் நினைவில்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து முயற்சி செய்யலாம், 

நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் முந்தைய ஆய்வின்படி, சுமார் 60 சதவீத குழந்தைகள் போதுமான பழங்களை சாப்பிடுவதில்லை, 93 சதவீதம் பேர் போதுமான காய்கறிகளை சாப்பிடுவதில்லை என்பது தெரியவந்துள்ளது. 

குழந்தைகள் காய்கறிகள், பழங்களை சாப்பிட வைக்க வழிகள்: 

உணவில் புதுமை

இப்போது எல்லாமே ட்ரெண்டிங் ஆக மாறி வரும் நிலையில் உணவிலும் குழந்தைகள் ட்ரெண்டிங்கை எதிர்பார்க்கிறார்கள். அந்தவகையில் காய்கறிகள், பழங்களை வித்தியாசமான முறையில் சமைத்துக் கொடுக்கலாம்.

அனைத்துப் பழங்களையும் சேர்த்து ப்ரூட் சாலட் வடிவிலோ அல்லது ஒவ்வொரு பழத்தையும் பயன்படுத்தி ஏதேனும் ஒரு உணவோ செய்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். 

உதாரணமாக கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரையை வேகவைத்து கடைந்து தோசை மாவில் சேர்த்து மொறு மொறு தோசையாகக் கொடுக்கலாம். 

விடியோ

இன்று விளம்பரங்களைப் பார்த்தே குழந்தைகள் நொறுக்குத் தீனிகளை கேட்கிறார்கள். அந்தவகையில் காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த வீடியோக்களை குழந்தைகளுக்கு போட்டுக்காட்ட வேண்டும். 

இதையும் படிக்க | குழந்தைகளின் மனநலனைப் பாதுகாக்க…

உணவைத் தேர்வு செய்தல் 

எந்தெந்த உணவில் எந்தெந்த சத்துகள் உள்ளன என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து உணவுகளைத் தேர்வு செய்ய வைக்க வேண்டும். குழந்தைகளுக்குப் பிடித்த உணவுகளை அடிக்கடி உணவில் சேர்க்கலாம். சமைப்பதற்கு முன்னர், குழந்தைகளிடம் எந்த காய்கறி இன்று சமைக்கலாம் எனக் கேட்டு சமைக்கும்போது குழந்தைகள் கட்டாயமாக சாப்பிடுவார்கள். 

நண்பர்களுடன் சாப்பிடுதல் 

குழந்தைகளை முடிந்தவரையில் நண்பர்களுடன் சாப்பிட வைக்கலாம். வீட்டில் இரு குழந்தைகள் இருந்தால் இருவரையும் ஒன்றாக அமரவைத்து சாப்பிட வைக்கலாம். அருகில் உள்ள குழந்தை விரும்பி ஒன்றைச் சாப்பிடும்போது மற்றொரு குழந்தையும் அதைச் சாப்பிடும். 

பசித்தபின் உணவு 

பசி எடுக்கும்போது எந்த உணவு கிடைத்தாலும் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். அந்தவகையில் குழந்தைகளுக்கு நன்றாக பசி எடுத்த பின்னர் காய்கறிகள் அடங்கிய உணவைக் கொடுத்தால் பசியில் குழந்தைகள் சாப்பிட்டுத் தான் ஆக வேண்டும். 

நொறுக்குத் தீனிகளைத் தவிருங்கள் 

குழந்தைகள் அதிகமாக நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பதிலாக, ஊட்டச்சத்து மிக்க ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிட கொடுத்து பழக்கலாம்.  

சமையல் கற்றல் 

சமையலறையில் குழந்தைகள் இருப்பதை அவ்வப்போது உறுதி செய்யுங்கள். குழந்தைகளுக்கு சிறிது சிறிதாக சமையல் கற்றுக்கொடுங்கள். சமைத்த உணவுகளையும் அலங்கரித்துவையுங்கள். அழகாக இருக்கும்போது குழந்தைகளுக்கு சாப்பிடத் தூண்டும். 

ஜூஸ் வடிவில் கொடுங்கள்

காய்கறிகள், பழங்களை அப்படியே சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு சூப் அல்லது ஜூஸ் வடிவில் கொடுக்கலாம். சிக்கன் சூப் செய்தால் அத்துடன் சில காய்கறிகளையும் சேர்க்கலாம். குழந்தைகளுக்கு ஏற்றவாறு காய்கறிகள், பழங்களை உணவில் எவ்வகையிலும் சேர்ப்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். 

இதையும் படிக்க |  இதயத்தைப் பாதுகாக்கும் 5 உணவுகள்!

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>