உங்கள் குழந்தை மண்ணை அள்ளி சாப்பிடுகிறதா?

மண் தின்னும் குழந்தை என்றால் பெற்றோருக்குப் பெரும் வேதனை. மண் மட்டுமின்றி சாம்பல், காகிதம், கோலப்பொடி, விபூதி, பல்பொடி, குச்சி, சாக்பீஸ், துணி என்று உண்ணத் தகாத பல பொருட்களை விரும்பி ருசித்துச் சாப்பிடும் குழந்தைகளை ஹோமியோபதி, லண்டன் மலர் மருந்துகள் மூலம் சிகிச்சையளித்து விரைவில் மாற்ற முடியும். 

பொதுவாக குழந்தைகளுக்கு ஒரு வயது நெருங்கும் சமயத்திலிருந்து இரண்டு வயது வரை கண்ணில் கண்டதை எல்லாம் எடுத்துப் பார்க்கும் பழக்கமும், கடித்துப் பார்க்கும் பழக்கமும் இருக்கும். அதையும் கடந்து ஒரு சில பொருட்களை விரும்பி ரசித்து ருசித்து சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்வார்கள். முறையாக உண்ண வேண்டிய உணவைத் தவிர்த்து இத்தகைய பழக்கத்துக்குட்பட்டால் அது வளரும் பருவத்தில் உடல்நலப் பிரச்னைகளை உருவாக்கும். குழந்தைகளுக்கு எளிதாகக் கிடைக்கும் பொருள் தரையில் இருக்கும் மண், தூசு போன்றவை. இவ்வாறு மண் தின்னும் பழக்கம் PICA என்று அழைக்கப்படுகிறது.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடமே இப்பழக்கக் கோளாறு அதிகம் காணப்படுகிறது. பெற்றோரின் அன்பு மற்றும் அரவணைப் பின்மை, பாதுகாப்பற்ற உணர்வு, பெற்றோர் உணவூட்டும் பழக்கங்களிலுள்ள குறைபாடுகள், ரத்தசோகை, மனவளர்ச்சிக் குறைபாடு போன்ற காரணங்களால் மண் தின்னும் பழக்கம் உருவாகி, வளர்ந்து நீடிக்கிறது.

மேலும் அடித்தட்டு வர்க்க ஏழ்மை நிறைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளிடம் இப்பழக்கம் ஒப்பீட்டளவில் அதிகம் நிலவுகிறது. அதேபோல் நல்ல மனவளர்ச்சியுடன் உள்ள குழந்தைகள் உணவு அல்லாத இதரப் பொருட்களைத் தின்றாலும் உரிய காலத்தில் நிறுத்தி விடுகின்றனர். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இப்பழக்கத்தை நிறுத்தாமல் தொடர்கின்றனர். 

குழந்தைகளின் தோற்றம் செயல்பாடு, மனநிலைகளுக்கேற்ப, கல்கேரியா கார்ப், சிலிகா, சிகூடா, அலுமினா, பெர்ரம்மெட், நேட்ரம்மூர், சினா, கல்கேரியாபாஸ், நைட்ரிக் ஆசிட், நக்ஸ்வாமிகா போன்ற ஹோமியோபதி மருந்துகள் மண், சாம்பல் தின்னும் பழக்கத்தை மாற்றியமைக்க உறுதியாக உதவும். மலர் மருந்துகளில் வால்நட், வொய்ட் செஸ்ட்நட் பட், செர்ரிப்பழம், சிக்கரி போன்ற மருந்துகள் குழந்தைகளிடம் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். 

மண்ணும் காகிதமும் தின்னும் பழக்கமுடைய நான்கு வயதுச் சிறுமியை என்னிடம் சிகிச்சைக்கு அழைத்து வந்தனர். அவளுக்கு மலம் மிக இறுகலாகவும் சற்று கருநிறமாகவும் சிரமப்பட்டு வெளியேறுகிறது. ஒவ்வொரு முறை மலம் கழிக்கும் போதும் வலி தாங்காமல் அழுகிறாள். உணவையோ, திண்பண்டங்களையோ விரும்பி உண்பதில்லை. மண் தின்பதும் பேப்பர்களை மென்று ருசித்துத் தின்பதும் எவ்வளவு திட்டி அடித்த போதும் நிறுத்த முடியவில்லை. சில மாத காலம் சிகிச்சை எடுத்தும் பலனில்லை. வளர வளரச் சரியாகி விடும் என்று மருத்துவர்கள் கூறிய வலுவற்ற கருத்தில் பெற்றோருக்கு உடன்பாடு ஏற்படவில்லை.

இந்தக் குழந்தைக்கு ஹோமியோபதியில் நைட்ரிக் ஆசிட் என்ற மருந்தும், மலர் மருத்துவத்தில் செர்ரிப்பழம் மற்றும் வால்நட் போன்ற  மருந்துகளும் கொடுக்கப்பட்டது. பத்து நாட்களில் குழந்தையின் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்பட்டது. மேலும் சில நாட்கள் தொடர் சிகிச்சை அளித்தபின் சிறுமி முழு நலம் அடைந்தாள். அவள் இப்போது மண், காகிதம் உண்பதில்லை. உணவை விரும்பி சாப்பிடுகிறாள். மலச்சிக்கல் தொந்தரவோ, வலிகளோ இல்லை. பெற்றோருக்கும் நிம்மதி.

மேலும் வளரும் குழந்தைகளில் காணப்படும் பொறாமை, சந்தோஷம், பயம், தாழ்வு மனப்பான்மை,கோபம், எரிச்சல், பிடிவாதம், மந்தம், சோம்பல், ஞாபகக் குறைபாடு, பிறரைக் குறை கூறும் சுபாவம் போன்ற இயற்கைக்கு மாறான பல்வேறு குணக்கேடுகளையும் மாற்றி குழந்தைகளிடம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குழந்தைகளின் மன ஆற்றல்களை அதிகரிக்கவும் மலர் மருந்துகள் அற்புதமாக பயனளிக்கின்றன. சிறுவர்களிடம் காணப்படும்  திருட்டு, புகை, குடிப்பழக்கம் போன்றவற்றையும் மலர் மருந்துகளால் மாற்ற இயலும். குழந்தைகளுக்கு மட்டுமன்றி எந்த வயதினருக்கும் இம்மருந்துகள் பயன்படும். எதிர்மறையான இயல்புகளை நீக்கி மனநலத்தையும், உடல்நலத்தையும் அளிப்பதே இவற்றின் சிறப்பம்சம்.

Dr.S.வெங்கடாசலம்
மாற்றுமருத்துவ நிபுணர்
சாத்தூர் Cell : 94431 45700
Mail : alltmed@gmail.com

<!–

–>