உணவுப் பொருட்களில் எப்படியெல்லாம் கலப்படம் செய்கிறார்கள் பாருங்கள்! எளிதில் கண்டறிய சில உபாயங்கள்…

அன்றாடம் பயன்படுத்தும் 25 உணவுப் பொருட்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நிகழ்த்தப்படும் கலப்படம் குறித்தும் அவற்றை எளிய முறையில் கண்டறிவது எப்படி என்றும் இப்போது காணலாம்.

பாலில் சலவைத்தூள் கலப்படம் செய்யப்படுவதைக் கண்டறிவது எப்படி? 

10 மில்லி பாலில் அதே அளவு தண்ணீர் கலந்து குலுக்கும் போது அது கடினமான படலமாக  மாறினால் அதில் சலவைத்தூள் கலந்திருப்பதை அறியலாம்.

நெய் மற்றும் வெண்ணெயில் பிசைந்த உருளைக்கிழங்கு அல்லது ஸ்டார்ச் மாவு கலந்துள்ளதா என்பதை அறிய அரை டீஸ்பூன் நெய் மீது மூன்று டீஸ்பூன் டிங்சரை விட்டால் அது நீல வண்ணமாக மாறும். அதை வைத்து நெய் சுத்தமானதா அல்லது கலப்பட நெய்யா என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
தேனில் சர்க்கரை கரைசல் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை அறிய தேனை நீருடன் கலந்து சோதித்துப் பார்த்தால் போதும். ஏனெனில் உண்மையான தேன் நீருடன் கலக்காது.
சர்க்கரை, வெல்லம் போன்றவற்றில் சாக்பீஸ் தூள் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அப்பொருட்களை நீரில் கரைக்கும் போது டம்ளரின் அடியில் மாவுப் பொருள் படிவதைக் காணலாம். இதை வைத்து சர்க்கரை, வெல்லத்தில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை எளிதில் கண்டறிய முடியும்.

புரதச் சத்து மிகுந்த முழுப்பருப்பில் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கேசரி பருப்பு கலப்படம் செய்யப்பட்டிருந்தால் பருப்பின் அடிப்பகுதி சரிவாகவும், சதுர வடிவிலும் காணப்படும் நன்றாக உற்று நோக்கினால் இதைக் கண்டறியலாம்.

ராகி அல்லது கேழ்வரகில் ரோடமைன் பி என்ற ரசாயனப் பொருள் நிறத்திற்காகக் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் தண்ணீர் அல்லது தாவர எண்ணெயில் நனைத்த பருத்திப் பஞ்சை வைத்து தேய்த்தால் போதும் கேழ்வரகில் உள்ள செயற்கை நிறம் பஞ்சில் ஒட்டிக் கொள்ளும்.

மிளகில் காய்ந்த பப்பாளி விதைகள் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை அறிய அதையும் எளிதில் கண்டறிய வழி இருக்கிறது. கடையில் வாங்கிய மிளகில் கலப்படம் இருப்பதாக சந்தேகித்தால் ஒரு டம்ளர் நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகை எடுத்து போடவும். பப்பாளி விதைகள் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அவை நீரில் மிதந்து நிற்கும். நிஜமான மிளகு நீருக்கடியில் கிடக்கும்.

மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள் தூளில் வண்ணக்கலப்படம் இருப்பதாக அஞ்சினால் அவற்றையும் தலா ஒரு ஸ்பூன் எடுத்து டம்ளர் தண்ணீரில் கலந்தீர்கள் எனில் கலப்பட மசாலாத்தூளில் இருக்கும் செயற்கை வண்ணம் மெல்லிய கோடாக நீருக்குள் கீழிறங்குவதை கவனிக்க முடியும். அதே போல மிளகாய்த்தூளில் மரத்தூள் கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் இருந்தால் அதையும் நீரில் கலந்து சோதிக்கலாம். மரத்தூள் நீரின் மேல் மிதக்கும்.

கடுகு விதையில் பிரம்ம தண்டு விதைகள் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் கடுகின் மேற்பரப்பு சொரசொரப்பாக இருப்பதுடன் உட்புறம் வெள்ளை நிறத்தில் இருக்கும்.அதே ஒரிஜினல் கடுகில் தோல் நீக்கிப் பார்த்தால் பளபளப்பான மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

மஞ்சள் கிழங்கில் நிறத்திற்காக லெட் குரோமைட் எனும் ரசாயனம் சேர்க்கப்பட்டிருந்தால் கிழங்கைத் தண்ணீரில் போடும் போது நீரின் நிறம் மாறும் கலப்படமற்ற கிழங்கு என்றால் நீரின் நிறம் மாறாது.

குங்குமப்பூவில் நிறமூட்டப்பட்ட மக்காச்சோளக் காம்புமுனை கொடிச்சுருள் கலப்படம் செய்யப்பட்டிருந்தால்  அவற்றை நீரில் கலக்கும் போது நிறம் மாறி வண்ணம் வெளியேறும்.

பச்சைமிளகாய் மற்றும் பச்சைப் பட்டாணியில் நிறமூட்டி கலக்கப்பட்டிருந்தால் அவற்றி நீரில் போட்டாலோ அல்லது தாவர எண்ணெயில் நனைத்த பஞ்சு கொண்டு துடைத்தாலோ போதும் நிறம் தனியாக ஒட்டிக் கொண்டு காட்டிக் கொடுக்கும்.

காபித்தூளில் தேவைக்கு அதிகமாக சிக்கரித்தூள் கலக்கப்பட்டிருந்தால் பாலில் கலக்கும் போது ஒரிஜினல் காபித்தூள் பாலில் மிதக்கும், சிக்கரித்தூள் பாலில் மூழ்கும்.

தேயிலையில் காலாவதியான தேயிலை அல்லது மரத்தூள் சேர்க்கப்பட்டிருந்தால் அதை வடிகட்டும் போது வடிகட்டியில் கரை படியும். தூய தேயிலை கரையை ஏற்படுத்தாது.

ஆப்பிளின் மீது மெலுகு பூசப்பட்டிருந்தால் ஆப்பிளின் தோலை லேசாக கத்தியால் உரசினால் போதும் மெலுகு உரிந்து வரும். கையில் ஒட்டும். 

இப்படி மேற்கண்ட பொருட்கள் மட்டுமல்ல மேலும் பல உணவுப் பொருட்களிலும் கலப்படம் செய்வதும், கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தெரிந்தே வாங்கி கடைகளில் வைத்து விற்பனை செய்வதும் கூட தண்டனைக்குரிய குற்றமே! என எச்சரிக்கின்றனர் உணவுப் பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

ஏனெனில் இந்தக் கலப்படங்களால் இவற்றை வாங்கி தொடர்ந்து பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான நோய்கள் வரும் அபாயம் இருப்பதாகவும் மேலும் பலவிதமான உடல் உபாதைகளுக்கு காரணமாக இவை அமைகின்றன என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். 

<!–

–>