உலகையே அங்குலம் அங்குலமாக அளக்கும் 'கூகுள் எர்த்'

rome_4

கூகுள் மேப் இருந்தால், இருக்கிற இடத்தில் இருந்தே உலகையே சுற்றிவரலாம். நாம் செல்ல வேண்டிய இடத்தைப் பதிவிட்டால், அந்த இடத்திற்கான தூரம், சேரும் நேரம், வழி ஆகியவற்றை கூகுள் மேப் துல்லியமாகக் காண்பித்துவிடும். தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்தகட்டமாக, உலகையே அங்குலம் அங்குலமாக அளக்கும் ‘கூகுள் எர்த்’ என்ற ஆன்ட்ராய்ட் செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

உலகில் உள்ள புகழ்பெற்ற கட்டடங்கள், பகுதிகள் என அனைத்தையும் துல்லியமாக ‘3டி’ வடிவத்தில் இந்த செயலி காண்பிக்கிறது. கூகுள் மேப் இரண்டு பகுதிகளின் இடைப்பட்ட தூரத்தை மட்டும் காண்பித்து வந்தது. ஆனால் இந்த ‘கூகுள் எர்த்’ , நாம் காண்பிக்கும் பாரம்பரிய கட்டடங்களின் உயரம், நீளம், அகலம் ஆகியவற்றின் அளவையும் துல்லியமாகக் காண்பிக்கிறது. அதுமட்டுமின்றி, ஒரு நாட்டின் பகுதியில் இருந்து மற்றொரு நாட்டில் உள்ள பகுதிக்கு இடையிலுள்ள தூரத்தையும் இந்த செயலியில் அளந்துவிடலாம். கடற்கரையின் பரப்பளவு உள்பட எந்தப் பகுதியாக இருந்தாலும் அதன் அளவை தோராயமாகத் தெரிந்து கொள்ளலாம்.

நாட்டில் எந்த இடத்துக்கும் செல்வதாக இருந்தாலும், அந்த இடத்தை கூகுள் எர்த்-இல் குறிப்பிட்டால் போதும், அந்த இடத்துக்கே நேரடியாக அழைத்துச் செல்கிறது. பின்னர் ‘ஸ்ட்ரீட் வியூவ்’-இல் அந்தப் பகுதி எப்படி காட்சியளிக்கும் என்பதை 360 டிகிரியில் காண்பித்துவிடுகிறது. மேலும், அந்தப் பகுதி குறித்த மேலும் தகவல்களை அறிந்து கொள்ள, உள்ளூர்வாசியின் தகவலையும் கூகுள் அளிக்கிறது. அந்தப் பகுதியின் புகைப்படம் எடுத்தும் பிறருக்கு பகிரவும் இந்த செயலியில் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

நாம் இருக்கும் தெருவையும், இடத்தையும் ‘கூகுள் எர்த்’ 3 டி வடிவில் காண்பித்துவிடுகிறது. இந்த செயலி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும், தனி மனித அந்தரத்துக்கும் எதிராக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தபட வேண்டியதே தவிர, அழிவுப்பாதைக்குப் பயன்படுத்தக் கூடாது.

<!–

–>