உலக குழந்தை சாதனையாளர் விருது பெற்ற 'சிலம்பம்' சாம்பியன்!

தமிழர்களின் வீரக்கலைகளுள் சிலம்பமும் ஒன்று. வெளிநாட்டவரால் வியப்புடன் பார்க்கப்படும் வீரக்கலைகளில் சிலம்பக்கலையும் ஒன்று. பழங்காலத்தில் தமிழர்கள் அனைவராலும் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்டு வந்த சிலம்பக்கலை காலப்போக்கில் மறையத் தொடங்கி தற்போது மீண்டும் உயிர்பெற்று வருகிறது எனலாம். 

ஒரு காலத்தில் தமிழகம் முழுவதும் ஏராளமான சிலம்பப் பள்ளிகள் இருந்த நிலையில் கற்றுக்கொள்ள ஆர்வமின்மையால் ஏறக்குறைய சிலம்பப் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. ஆனால் அரிய கலையான சிலம்பக் கலையை அழிந்து விடாமல் பாதுகாக்கும் விதமாக தற்போது குழந்தைகள் பலரும் சிலம்பம் கற்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.  சிறு வயதிலேயே மாணவர்கள் பலரும் சிலம்பக் கலையை ஆர்வமுடன் பயின்று வருகின்றனர். அத்துடன் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனையும் புரிந்து வருகின்றனர்.

அந்தவகையில், சிலம்பக்கலையில் சாதிக்கும் சிறுவர்களில் மதுரை அச்சம்பத்தைச் சேர்ந்த அதீஸ்ராமும்(11) ஒருவர். தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஜெயராமனின் மகனான அதீஸ்ராம், மதுரை மாவட்டம் செக்கானூரணியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.  மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகேயுள்ள தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயில்கிறார். விராட்டிபத்தில் உள்ள மாருதி சிலம்பப்பள்ளியில் கடந்த நான்கு ஆண்டுகளாக சிலம்பப் பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று சாதனைகள் புரிந்து வருகிறார்.

சிலம்பத்தில் உள்ள பல்வேறு  வகைகளில் ஒற்றைக்கை சிலம்பம், இரட்டைக் கை சிலம்பம், சுருள்வாள், கத்தி, வேல்கம்பு, கத்திக்கேடயம், தண்ணீர் சுற்றுதல், தீக்கம்பு, நட்சத்திரப் பந்தம், சூரியப் பந்தம் மற்றும் சக்கரப் பந்தம் என அனைத்து வகைகளையும் 11 வயதிலேயே கற்றுத் தேர்ந்துள்ளார் அதீஸ்ராம். தற்போது ‘சிலம்பன்’ என்ற குறும்படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்து வருகிறார். 

2018-ல் பஞ்சாப் ஜலந்தரில் நடைபெற்ற தேசிய  அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு, 2019 செப்டம்பரில் மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்ப சாம்பியன் போட்டியில் பங்கேற்று இரட்டைச் சிலம்பத்தில் தங்கப்பதக்கம் என ஏராளமான பரிசுகளை வென்றுள்ளார்.

மேலும், தற்போது சிலம்ப வகையில் மிகக்கடினமான தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் சிலம்பம் சுழற்றும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் மதுரையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியரிடம் பாராட்டுச் சான்றிதழும் பெற்றுள்ளார். 

சிலம்பக்கலையில் தனது பயணம் குறித்து மாணவன் அதீஸ்ராம் கூறும்போது, சாலையோரம் சிலம்பப் பயிற்சி பெற்றவர்களைப் பார்த்து சிலம்பத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது.  இதனால் 7  வயது முதல் சிலம்பத்தில் பயிற்சி பெற்று வருகிறேன். எதிர்காலத்தில் மிகச் சிறந்த பயிற்சியாளராக திகழ வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம் என்றார்.

இந்நிலையில் ஹரியாணாவைச் சேர்ந்த டிரீம் அச்சீவர்ஸ் அமைப்பு,  உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நூறு குழந்தைகளைத் தேர்வு செய்து உலக குழந்தை சாதனையாளர்கள் எனும் விருதை ஆண்டுதோறும் வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த விருதுக்கு சிலம்பப் பிரிவில் 2021ஆம் ஆண்டிற்கான விருதுக்கு மாணவர் அதீஸ்ராம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

அதீஸ்ராமின் தந்தை ஜெயராமன் கூறும்போது, அதீஸ்ராம்  7 வயதில் இருந்தே சிலம்பப் பயிற்சி பெற்று வருகிறார். சிலம்பத்தில் சாதனைகள் படைத்து வந்தாலும் ஸ்கேட்டிங் மற்றும் வில்வித்தையிலும் பயிற்சி பெற்று வருகிறார்.  சிலம்பக் கலையில் பல்வேறு நுணுக்கங்களையும் கற்றுத்தேறி வருகிறார். நாள்தோறும் கடுமையான பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார் என்றார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>