ஊர் சுற்றும் வேலையில் இருக்கிறீர்களா? உடம்பு வலி தாங்கலையா? நொச்சிச் செடி இருக்க பயமேன்?!

பெருநகரங்களில் மார்க்கெட்டிங் துறை சார்ந்த அலுவல்களில் மாட்டிக் கொள்கிறவர்கள் பாடு படு அனர்த்தம். நாள் முழுக்க ஒன்று உள்ளூரில் அலைய வேண்டும் அல்லது ரயிலிலோ, விமானத்திலோ வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என சதா அலைந்து கொண்டே இருக்க வேண்டும். மாதத்தில் குறைந்தபட்சம் 15 நாட்களாவது இப்படித்தான் இருக்கிறது அவர்களது வாழ்க்கை. சதா சர்வ காலமும் பயணம் தான். இப்படி ஊர்சுற்றி உத்யோகங்களில் மாட்டிக் கொள்கிறவர்களின் உடம்பு வலி பற்றி சொல்லியா தெரிய வேண்டும். சதா முதுகுவலி, கை, கால், மூட்டு வலி, கழுத்தெலும்பு வலி, என்று உடலில் எந்நேரமும் அலுப்பு இருந்து கொண்டே இருக்கும். சிலர் வலி தாங்க முடியாமல் என்ன செய்கிறார்கள் என்றால் ஸ்பா போன்ற மசாஜ் செண்ட்டர்களுக்குச் செல்லத் தொடங்கி… பிறகு நாளடைவில் அந்த மசாஜ் சுகம் பழகிப் போய் அதை விட முடியாமல் காசைக் கொட்டி தண்டம் அழுகிறார்கள். இதனால் தனியார் ஸ்பா செண்ட்டர்களில் லாபம் கொழிக்கிறதே தவிர… சம்மந்தப்பட்டவர்களின் உடல் வலி தீர்கிறதா என்றால் அது தான் இல்லை. மாதாமாதம்… வீட்டுக்கும், வாகனத்துக்கும் இஎம் ஐ கட்டுகிறார் போலே இந்த ஸ்பா செண்ட்டர்களும் ஒரு குறிப்பிட்ட தொகையை இஎம் ஐ போல எடுத்து வைக்க வேண்டியதாகி விடுகிறது.

இம்மாதிரியான நஷ்டங்களில் இருந்தெல்லாம் எப்படி நம்மை நாமே காத்து ரட்சித்துக் கொள்வதோ! என்கிற கவலை நம் எல்லோருக்குமே இருக்கிறது. இதற்குத்தான் வீட்டில் பாட்டி வைத்யம் தெரிந்த பெரியவர்கள் யாரேனும் இருக்க வேண்டுமென்கிறது. இருந்தால்… அவர்கள் நிச்சயம் ஏதேனும் ஒரு உபாயம் சொல்வார்கள் இல்லையா?

இது என் பாட்டி எனக்குச் சொன்ன உபாயம்…

‘உடம்பு வலி தீர வீட்டுக்கொரு நொச்சிச் செடி வளர்க்கனும் கண்ணு… நொச்சிக் காத்துப் பட்டா ஆனானப் பட்ட ஆனை மிதிச்ச வலியும் காத்தோட கரையும்… உடம்பு சும்மா இறுக்கிக் கட்டின பிரம்புக் கட்டில் மாதிரி கின்னுன்னு நிக்கும்.’ 

நொச்சி இலைகளை குளிக்கும் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி அதில் குளித்து வந்தால் உடம்பு வலி, அலுப்பு, சோர்வு, கை, கால் வீக்கம் எல்லாம் தீரும்.

பல ஊர்களில் பலப்பல தண்ணீர் குடித்து பழகியதால் சளித்தொல்லை அதிகமிருப்பவர்கள் இந்த நொச்சி இலைகளைப் போட்டுக் காய்ச்சிய தண்ணீரில் ஆவி பிடித்தால் சளித்தொல்லை அறவே அகன்று சுவாசம் புத்துணர்வாக இருக்கும்.

இப்படி நொச்சி இலைகளை வைத்து பல்வேறு விதமாக பாட்டி வைத்யம் செய்யலாம். எதற்கெடுத்தாலும் மருத்துவர்களிடம் ஓடுவதை விட்டு விட்டு நமக்கு உகந்த முறையில் முன்பே நமது முன்னோர்களுக்குப் பழகியதான இத்தகைய பாரம்பர்ய எளிய வீட்டு மருத்துவமுறைகளைப் பின்பற்றினால் செலவும் குறைவு. பலனும் நிறைவாக கிடைத்த திருப்தி.

நொச்சி இலைகள் உடல் வலியை மட்டுமே தீர்ப்பதில்லை. அது தவிரவும் வேறு பலன்களும் அவற்றால் உண்டு. காய்ந்த நொச்சி இலைகளைப் பெளடர் செய்து வைத்துக் கொண்டு அவற்றை வீட்டில் சாம்பிராணி போடுகையில் அந்தத் தணலில் இந்த பெளடரையும் போட்டு தூபம் காட்டினால் வீட்டில் இருக்கும் கொசுக்கள், புத்தக அலமாரிகளில் தென்படும் சில்வர்ஃபிஷ் மாதிரியான சிறு பூச்சிகள் போன்றவை அகன்று விடும்.

நொச்சியில் இலை, வேர், பட்டை, பூக்கள், தண்டு என செடியின் அத்தனை பகுதிகளுமே மருத்துவக் குணம் கொண்ட தாவரமாகவே கருதப்படுகின்றது.

<!–

–>