எடை குறைக்க நினைப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா? 

Z_EGG_EATING

சிலருக்கு சாப்பாட்டில் முட்டை இல்லையென்றால் தொண்டைக்குள் சாப்பாடு இறங்காது. தினமும் குறைந்த பட்ச அசைவ பட்சணமாக முட்டையாவது வயிறுக்குள் இறங்கியாக வேண்டும். இல்லாவிட்டால் வயிறு முட்டச் சாப்பிட்ட பின்பும் நிறைவாக உண்ட திருப்தி கிடைக்காது. அப்படிப்பட்டவர்கள் உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழியென்று டயட்டில் இறங்கினால் என்ன ஆகும்? முட்டை உண்ணும் போது கீழே சொல்லப்பட்டுள்ள சில ஆலோசனைகளைக் கடைபிடித்தால் போதும்… அதனால் எடை கூடுதலை எளிதில் தவிர்க்கலாம்.

முட்டையினால் உடல் எடை கூடும் என்பது தவறான நம்பிக்கை. முட்டை மட்டுமல்ல அது காய்கறிகளாகட்டும், கீரை வகைகளாகட்டும், பழங்கள் மற்றும் அசைவ உணவு வகைகளாகவே இருக்கட்டுமே, எது ஒன்றையும் கணக்கு வழக்கின்றி அதீதமாக உண்டால் மட்டுமே உடல் எடை கூடுமென்ற பயம் வரவேண்டும் என்கிறார்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் குழுவினர். 

எதையும் அளவறிந்து உண்டால் எடை கூடுமேயென்று அஞ்சத் தேவையில்லை. முட்டையைப் ‘புரதங்களின் அரசன்’ என்பார்கள். ஏனெனில் அதில் இல்லாத அமினோ அமிலங்கள், புரதச் சேர்க்கைகள் இல்லை. முட்டையின் வெண்கருவில் அல்புமின் எனும் புரதம் இருக்கிறது. மஞ்சள் கருவில் குளோபுலின் எனும் புரதம் இருக்கிறது. இந்த இரு புரதங்களுமே மனித ஆரோக்யத்தில் பங்கு வகிக்கக் கூடிய மிக முக்கியமான புரதங்கள். அல்புமின்னில் கொழுப்புச் சத்து மிக, மிக சொற்பம் என்பதால் அதை எல்லா வயதினரும் உண்ணலாம். குளோபுலின் அப்படியல்ல சிறு குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு குளோபுலினைத் தவிர்க்கச் சொல்லி சில மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். காரணம் அதிலிருக்கும் கொழுப்பு மூலக்கூறுகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யலாம்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உட்டையின் வெண்கருவை மட்டும் தினமும் சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ளலாம். வெண்கருவை மட்டுமே சாப்பிடுவதென்றால் தினமும் இரண்டு முதல் நான்கு முட்டைகள் வீதம் சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ளலாம். மஞ்சள் கருவையும் சேர்த்து உண்பீர்கள் எனில் அதாவது முழு முட்டையை உண்பது தான் திருப்தி என்று நினைப்பவர்கள் வாரத்திற்கு ஒரே ஒரு முட்டை தான் சாப்பிட வேண்டும். கோடையில் முட்டை அதிகம் சாப்பிடாமல் தவிர்ப்பதும் நல்லதே, காரணம் முட்டை உண்பதால் மனித உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். ஒருவேளை கோடையில் தினமும் உணவில் முட்டை சேர்த்துக் கொள்ள விரும்பினீர்கள் எனில் மறக்காமல் அதிகளவில் பழரசங்கள், மோர், தண்ணீர் அருந்துவதையும் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இந்த நீராகாரங்களும், பழரசங்களும் முட்டை உண்பதால் உடல் அடையக்கூடிய உஷ்ணத்தின் சதவிகிதத்தைக் குறைக்குமாம்.

முட்டை சாப்பிடுவதைக் குறைக்காமல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், முட்டையைப் பொரித்து உண்ணாமல் அப்படியே அவித்து உண்ணலாம். பொரிக்கும் போது அதில் சேர்க்கப்படும் எண்ணெய் மற்றும் இயல்பாக மஞ்சள் கருவில் இருக்கும் கொழுப்பு இரண்டும் சேர்ந்து எடையை அதிகரிக்கச் செய்யுமே தவிர குறைக்கும் முயற்சியைத் தடை செய்து விடும்.

இந்த ஆலோசனைகளை மனதில் வைத்துக் கொண்டு முட்டை சாப்பிட்டால் உடல் எடை கூடுமேயென்று அஞ்சத் தேவையில்லை.

<!–

–>