'ஏற்றுக்கொள்ளும் மனமிருந்தால் பிரச்னை இல்லை'

நானெல்லாம் அப்படி இருக்க மாட்டேங்க! எனக்கு மருமகள் வந்தா நான் என் பொண்ணு போல பார்த்துப்பேன். கஷ்டம் ஏதும் வராம பார்த்துப்பேன்! என்ன ஆடை வேணும்னாலும் போட்டுக்க விட்டுருவேன். எது வேணும்னாலும் வாங்கிக்கச் சொல்வேன்!

நானும் எங்க மாமியாரும் நண்பர்கள் போல! எதுவாயிருந்தாலும் பகிர்ந்து கொள்வோம்! எங்களுக்குள்ள ஒண்ணும் பிரச்னையில்லை.

மேலே குறிப்பிட்ட முதல் வசனம், மாமியார் ஆவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லா பெண்மணிகளும் வாடிக்கையாகச் சொல்வது. என் மாமியார் போல இருக்க மாட்டேன்! அவங்க எதுக்கு எடுத்தாலும் குற்றம் கண்டுபிடிப்பாங்க! எவ்வளவு செஞ்சாலும், என்னைப் பற்றி எல்லாரிடமும் குறை சொல்வதே அவருக்கு வேலை. இல்லைனா அவங்களுக்கு தூக்கமே வராது. மாமியார் உடைச்சா மண்சட்டி, மருமகள் உடைச்சா பொன்சட்டி போல இருப்பாங்கண்ணு சொல்ல நாம் கேள்விப்பட்டதுண்டு.

இரண்டாவது வசனம். கல்யாணம் ஆன புதிதில் மருமகள் தனது மாமியாரைப் பற்றி கூறுவது. ஏனென்றால் புதிதில் அவர்களுக்கு தனது மாமியாரை அம்மாவைப் போல் பார்த்துக் கொள்வதும், மாமியாரும், மருமகளைத் தன் மகள் போல பாவித்து எல்லா விஷயங்களையும் எளிதாக எடுத்துக் கொள்வதால் வரும் வசனம் அது.

நான் என்னுடைய கிளினிக்கில் ஆய்வு செய்யும்போது, பொதுவாக நடுத்தர வயதில் உள்ள பெண்மணியும், புதிதாக கல்யாணம் ஆன மருமகள்களும் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இதுபோல உள்ளவர்கள் பின்னாளில், தங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு, பூதாகரமாக வெடித்து, குடும்பம் தனித்தனியாகப் பிரிவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். மாற்றாக சிலர், குடும்பங்களில் பிரச்னைகள் இருந்தாலும், அது பெரிதாக வளரவிடாமல் இன்னும் மாமியார் – மருமகள் உறவு சுமூகமாகச் செல்வதையும் காண்கிறோம்.

ஏன் பிரச்னை ஏற்படுகிறது? உறவில் விரிசல் ஏற்படுவது ஏன்?

1. மகனை வளர்க்கும் தாய், சிறு வயதிலிருந்து மகனுக்கு எது வேண்டும். என்ன வேண்டும் என பார்த்து பார்த்து வாங்கி செய்கிறார். திடீரென கல்யாணம் ஆனவுடன், மகன் அவருடைய மனைவியிடம் நெருக்கம் காட்டுகிறார். இதனால், தன் மீது அன்பு குறைந்துவிட்டதாகவும், தன்னுடன் நேரத்தைச் செலவிடமாட்டேன் என்கிறான் என்ற ரீதியில், தனக்குள்ளே ஒரு மாயையை தாய் ஏற்படுத்திக் கொள்கிறார். இதன் விளைவாக மருமகள் மீது பொறாமை கொள்வது, குற்றம் கண்டுபிடித்து அதை எல்லோரிடமும் முக்கியமாக அண்டை அயலார்களிடம் கூறுவது போன்ற செயல்களில் ஈடுபடும்போது, பிரச்னைகள் ஆரம்பமாகின்றன.

2. முக்கியமாக சமையலறையில் தன் கணவனுக்கு, பிள்ளைகளுக்கு, வீட்டில் வருவோருக்கு என அதிக நேரம் தன் வாழ்க்கையில் அங்கேயே கழித்துவிட்ட தாய்க்கு, திடீரென அந்த இடத்தை இன்னொரு பெண் வந்து, ஆக்கிரமித்து விட்டாளே! என ஆதங்கப்பட்டு, வரும் பிரச்னைகளும் ஏராளம்.

3. பழைய கலாசாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறுவதாலும், அதை கட்டாயப்படுத்துவதாலும் கூட சில வீடுகளில் மாமியார் – மருமகள் பிரச்னை ஏற்படுவதுண்டு. செல்லமாக, அம்மா, அப்பா வீடுகளில் வளரும் பெண் குழந்தைகள் அதே எண்ணத்துடன், கணவன் வீட்டில் எதிர்பார்க்கும்போது, மாமியாரால் கண்டிக்கப்படுகிறார். அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சிறு சிறு சச்சரவுகள் தொடங்கி, பெரும் பிரச்னைகளில் முடிவடைவதும் உண்டு. உணவு, உடை போன்றவற்றில் அம்மா, அப்பா வீட்டில் உள்ளதுபோல, இங்கே இருக்க முடியவில்லை என்ற ரீதியில் பிரச்னை ஏற்படுகிறது. பெரியவர்கள், ஆண்கள் சாப்பிட்ட பிறகுதான் பெண்கள் சாப்பிட வேண்டும் என உத்தரவு போடும்போது பிரச்னை ஏற்படுகிறது.

4. அவன் அப்படியே அந்தப் பக்கம் சாய்ந்துவிட்டான். மனைவியின் அம்மா, அப்பாவுக்கு, அந்தக் குடும்பத்துக்கு என்ன தேவையோ கவனித்துக்கொள்கிறான். எங்களைச் சுத்தமாகக் கண்டுகொள்வதே இல்லை. மாதந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை அவளிடமே கொடுத்துவிடுகிறான்.

5. பணத்தை சேமித்து வைக்காமல், ஊதாரித்தனமாக செலவு செய்கின்றனர், பெரியவர்களுக்கு மரியாதை தரவில்லை என பல விஷயங்கள் உறவுகளில் விரிசல் ஏற்படுகிறது.

மாமியார் – மருமகள் உறவில் விரிசல் ஏன் ஏற்படுகிறது?

தன்னுடைய மகன் மீது மென்மையாக அன்பைக் கொண்டிருக்கும் தாய்க்கு, திடீரென மாற்றம் ஏற்படும்போது, அதை ஏமாற்றமாக உணர்கிறார். இனிமேல் நமக்குப் பாதுகாப்பு இல்லையோ என்ற சந்தேகம் அவருக்கு மேலிடுகிறது.

பொதுவாக சமூகத்தில் மாமியார் – மருமகள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிராளிகள் என நம்மிடையே பரவலான எண்ணம் உள்ளது. தங்கள் கருத்தே சரியானது என இரு தரப்பினரும் நினைப்பது, அதை ஒருவர் மீது ஒருவர் கட்டாயமாகத் திணிப்பது போன்றவற்றாலும் பிரச்னை ஏற்படுகிறது.

இரு சாராருக்கும் இடையே புரிதல் குறைவாக உள்ளது. முதிர்ச்சியின்மை இல்லாதது, மனம் விட்டுப் பேசாமல் இருத்தல், வெளி ஆட்கள் தலையீடு போன்றவற்றாலும் பிரச்னை வருகிறது.

பிரச்னைகளை தீர்ப்பதற்கு என்னதான் வழி?

1. ஏற்றுக்கொள்ளுதல்: மாமியாரை மருமகள் ஏற்றுக்கொள்வது முக்கியமானது. தன்னுடைய கணவனை வளர்த்த விதத்தில் மாமியாருக்கு உள்ள பங்கினை மருமகள் நினைத்துப் பார்க்க வேண்டும். அதேபோல, தனது மகன் வாழ்க்கையில் ஒரு அங்கம் மருமகள் என்பதையும் மாமியார் ஏற்றுக்கொள்வது அவசியமானது.

2. சில விஷயங்களை மாற்றவே முடியாது என உணரும்போது, அதனுடன் எப்படி ஒத்துப்போகலாம் என எண்ண வேண்டும்.

3. வயதான காலத்தில் மாமியாருக்கு ஏற்படும் சில சிரமங்களைப் புரிந்து கொண்டு, சிறிய உதவிகள் செய்வது, அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும், தேநீர், தண்ணீர், உணவு போன்றவற்றை வழங்குவது போன்ற சேவைகளை மருமகள் செய்ய வேண்டும். இதேபோல, மருமகளுக்குச் சமையலறையில் சிறு, சிறு உதவிகளைச் செய்தால், உறவைப் பலப்படுத்தும்.

4. வெளியே செல்லும்போது ஒருவருக்கொருவர் உங்களுக்கு ஏதேனும் தேவையா? எனக் கேட்பது மனதுக்கு ஆறுதலை ஏற்படுத்தும். மொத்தத்தில் உறவில் குறை காண்பவருக்கு வாழ்க்கையை ரசிக்கத் தெரியாது. வாழ்க்கையை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு உறவில் குறை காணத் தெரியாது.

[கட்டுரையாளர் – ஹோமியோபதி மருத்துவர் – மனநல ஆலோசகர்
கும்பகோணம்]

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>