ஐபிஎல்: மும்பை அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய ரோஹித் சர்மா, பொலார்ட், பும்ரா & பாண்டியா!

ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும் முதல்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியிருக்கும் தில்லி கேபிடல்ஸும் இன்று மோதுகின்றன. 

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி ஐபிஎல் போட்டியில் 4 முறை கோப்பையை வென்ற நிலையில், 5-ஆவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் தில்லியை சந்திக்கிறது. அதேநேரத்தில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான தில்லி அணி இந்த ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வெல்லும் கனவில் களமிறங்குகிறது.

பலம் வாய்ந்த அணியான மும்பை இந்த சீசனில் இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடி, அதில் 10-இல் வென்றுள்ளது. மேலும், மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததோடு, முதல் தகுதிச் சுற்றில் தில்லியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிச் சுற்றை உறுதி செய்தது. அதேநேரத்தில் தில்லி அணி இந்த சீசனில் 16 ஆட்டங்களில் விளையாடி 9-இல் வெற்றி கண்டுள்ளது. எனினும் கடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதால், அந்த அணி மிகுந்த நம்பிக்கையோடு மும்பையை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் போட்டி ஆரம்பித்த முதல் ஐந்து வருடங்களில் ஒரு கோப்பையையும் மும்பை அணி வெல்லவில்லை. அதாவது 2008 முதல் 2012 வரை. ஆனால் மும்பை அணியில் ரோஹித் சர்மா, பும்ரா, பாண்டியா, பொலார்ட் வந்த பிறகு அந்த அணியின் அடையாளமே மாறிவிட்டது. 2013-ல் ஆரம்பித்து இதுவரை நான்கு ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது.

2010-ல் பொலார்டும் 2011-ல் ரோஹித் சர்மாவும் 2013-ல் பும்ராவும் 2015-ல் ஹார்திக் பாண்டியாவும் மும்பை அணிக்குத் தேர்வானார்கள். இதில் ரோஹித் சர்மா, ஆரம்பத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் விளையாடினார்.

ஐபிஎல் போட்டியில் இதுவரை 199 ஆட்டங்களில் விளையாடி 5162 ரன்கள் எடுத்துள்ளார் ரோஹித் சர்மா. 38 அரை சதங்களும் ஒரு சதமும் அடித்துள்ளார்.

மேலும், ரோஹித் சர்மா இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் இறுதிச்சுற்றில் தோற்றதில்லை. ஐந்து இறுதிச்சுற்றுகளில் விளையாடி ஐந்திலும் ரோஹித்துக்கு வெற்றிகள் கிடைத்துள்ளன. 2009-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். பிறகு மும்பைக்காக 2013, 2015, 2017, 2019 ஆகிய வருடங்களில் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். 

பொலார்ட், 163 ஆட்டங்களில் விளையாடி 3014 ரன்கள் எடுத்துள்ளார். 15 அரை சதங்கள் எடுத்துள்ளார். 198 சிக்ஸர்கள் அடித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஸ்டிரைக் ரேட் – 149.72.

79 ஆட்டங்களில் விளையாடியுள்ள பாண்டியா, 1346 ரன்கள் எடுத்துள்ளார். 4 அரை சதங்கள். 93 சிக்ஸர்கள். ஸ்டிரைக் ரேட் – 159.85.

91 ஆட்டங்களில் விளையாடியுள்ள பும்ரா, 109 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எகானமி – 7.41.

<!–

–>