ஐபிஎல்: லக்னெள அணியில் இணைந்த இந்திய முன்னாள் வீரர்

 

லக்னெள ஐபிஎல் அணியின் துணைப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் விஜய் தாஹியா நியமிக்கப்பட்டுள்ளார். 

ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜெயன்ட் அணி உரிமையாளராக இருந்தது.

ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

லக்னெள அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பிரபல முன்னாள் வீரர் ஆன்டி ஃபிளவரும் ஆலோசகராக கெளதம் கம்பீரும் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்கள். இந்நிலையில் லக்னெள அணியின் துணைப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் விஜய் தாஹியா நியமிக்கப்பட்டுள்ளார். 48 வயது தாஹியா, இந்திய அணிக்காக இரு டெஸ்டுகள், 19 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் உத்தரப் பிரதேச அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக இரு வருடங்கள் பணியாற்றியுள்ளார். 

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>