'ஒத்த தல இல்ல… இது பத்து தல' : ரசிகர்கள் சிம்புவை கண் மூடித்தனமாக ஆதரிப்பதற்கு காரணம்?

 

நடிகர், இசையமைப்பாளர், திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் சிம்பு என்கிற எஸ்டிஆர் என்கிற சிலம்பரசன் டி.ஆர். மேற்சொன்ன அனைத்திலும் வெற்றிகரமாக பயணிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனுக்கு பிறகு தமிழ் திரையுலகில் ஒரு சகலகலா வல்லவன் என அவரை சொல்லலாம். 

மேற்சொன்ன திறமைகள்தான் எவ்வளவு தோல்விகள் கொடுத்தாலும் ரசிகர்களை அவர் பக்கம் நிற்க வைக்கிறது. தொடர்ச்சியான படங்கள் கொடுப்பதில்லை, சொன்ன நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வருவதில்லை, அவரால் பல படங்கள் பாதியில் நின்றிருக்கின்றன, காதல் சர்ச்சைகள், பீப் பாடல் சர்ச்சை இப்படி பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சொல்லப்பட்டாலும், அவருக்கு இருக்கும் ரசிகர் பலத்தாலேயே அவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. 

வேறு யாராவது அவரிடத்தில் இருந்தால் திரையுலகை விட்டே காணாமல் போயிருக்கக் கூடும். ஒவ்வொருமுறையும் அவர் தடுமாறும்போதும் ரசிகர்கள் அவரை மீட்டு கொண்டுவந்திருக்கின்றனர். இதனைத் தாமதமாக உணர்ந்து கொண்ட எஸ்டிஆர் தன்னிடம் இருந்த தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்து வெற்றிப்பாதையில் பயணித்து வருகிறார். அதற்கு முக்கியமான சான்றுதான் மாநாடு வெற்றி. 

இதையும் படிக்க | வெளியானது சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ தீம் பாடல்

தமிழ் திரையுலகில் சிறப்பாக நடனமாடக் கூடியவர் சிம்பு. நாயகனாக அறிமுகமாவதற்கு முன்பே அவரது அப்பா டி.ராஜேந்தர் இயக்கத்தில் மோனிஷா என் மோனலிசா, சொன்னால் தான் காதலா போன்ற பல பாடல்களுக்கு அவர் நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்தார். எவ்வளவு கடினமான நடனம் என்றாலும் மிக இலகுவாக நடனமாடக் கூடியவர் என்பதை அவருடன் பணிபுரிந்த நடன இயக்குநர்களே வியந்து தெரித்துள்ளனர். 

இப்பொழுது பெரும்பாலான நடிகர்கள் பாடுகிறார்கள். ஆனால் ஒரு நடிகராக அவர் அறிமுகமாவதற்கு முன்பே ஏ.ஆர்.ரஹ்மான் சிம்புவை பாடகராக பயன்படுத்திவிட்டார். காதல் வைரஸ் என்ற படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பைலா மோர் என்ற பாடலை சிம்பு பாடியிருப்பார். சுமார் 100 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். பிற நடிகர்களுக்காகவும் அவர் பாடல்கள் பாடி வருகிறார். 

3 வயதில் இருந்தே அவர் கேமராவை எதிர்கொள்வதனால்தான் அவருக்கு கேமரா பயமே இல்லை. எவ்வளவு பெரிய காட்சி என்றாலும், நடிப்பதற்கு சவாலான வேடமாக இருந்தாலும், ஒரே டேக்கில் நடித்துவிடுவார் என்கிறார்கள் அவரை இயக்கிய இயக்குநர்கள். 

ஒரு கமர்ஷியல் நாயகனாக மட்டுமல்லாமல், ஒரு நல்ல நடிகனாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். அதற்கு பெரும் உதாரணம் சமீபத்தில் மாநாடு படத்திலிருந்து வெளியான காட்சி.

மாநாடு படத்தின் இரண்டாம் பாதியில் காவல்துறை அதிகாரியான எஸ்.ஜே.சூர்யா, சிம்பு உள்ளிட்டோரை கட்டி வைத்து மிரட்டுவார். அந்தக் காட்சியை நாம் திரையில் பார்த்தபோது, எஸ்.ஜே.சூர்யா கேள்வி கேட்க, அதற்கு சிம்பு பதில் சொல்ல என இருவரின் முகமும் மாறி மாறி காட்டப்படும்.

இந்தக் காட்சி 5 நிமிடத்துக்கு மேல் ஓடக் கூடியது. இந்தக் காட்சியை படமாக்கும் போது முழுக்க சிம்பு மட்டும் பேசுவதை தனியாக படமாக்கியிருக்கிறார்கள். அந்தக் காட்சியை தயாரிப்பு நிறுவனம் தனியாக வெளியிட்டிருந்தது. அந்த ஒரு காட்சி போதும் சிம்புவின் நடிப்பு திறனுக்கு. 

தற்போது சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார், மஹா உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. அடுத்ததாக ஓமை கடவுளே பட இயக்குநர் அஸ்வத் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது.  இது இவ்வளவு நாள் சிம்புவின் பக்கம் நின்ற ரசிகர்களுக்கு பெரும் படையலே காத்திருக்கிறது என்பதை உணர்த்துகின்றன. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>