ஒய் எஸ் ஆர் ஜெகன் மோகன் ரெட்டியாகிய நான்… பாகுபலி ஸ்டைலில் பதவியேற்றார் ஆந்திர மக்களின் ப்ரியத்துக்கு உகந்த ‘ஜெகன் அண்ணா’!

y_s_jagan_reddy_swearing_in_ceremany

ஆந்திரமுதலவராக இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார் ஒய் எஸ் ஆர் ஜெகன்மோகன் ரெட்டி. திறந்தவெளி ஜீப்பில் பவனி வந்த ஜெகன் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் விஜயவாடாவில் இருக்கும் இந்திரா காந்தி முனிசிபல் ஸ்டேடியத்தில் இன்று நண்பகல் சரியாக 12.23 மணியளவில் ஆந்திரப் பிரதேசத்தின் இரண்டாவது முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான சட்டசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் 151 சட்டமன்றத் தொகுதிகளிலும் 22 பாராளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடி மிகப்பெரிய வெற்றியைச் சாதித்துள்ளது.

ஒய் எஸ் ஆர் ஜெகன், ஆந்திராவின் மிக இளம்வயது முதல்வராகக் கருதப்படுகிறார். 2009 ஆம் ஆண்டில் அவரது தந்தையின் துர்மரணத்திற்குப் பிறகே தீவிர அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ஜெகன். அரசியலில் தமது தந்தையைப் பின்பற்றி ஜெகன் நடத்திய பிரஜா சங்கல்ப யாத்ரா எனும் நீண்ட நடைபயணமே அவருக்கு இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்தியுள்ளதாக ஜெகன் நம்புகிறார். அந்த நடைபயணத்தில் அவர் எளிய மக்களோடு மக்களாக பல இடங்களுக்கும் பிரயாணித்து நேரடியாக மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்னைகளை அறிந்து அதை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இது ஜெகனின் தந்தை ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் அரசியல் வழித்தடம். பொதுமக்களின் பிரச்னைகளை நேரில் கண்டறிய வேண்டுமென்றால் தலைவர்கள் மக்களுடன் இரண்டறக் கலக்க வேண்டும். அதற்கு ஒரே வழி,  ‘பிரஜா சங்கல்ப யாத்ரா’. அந்த வழிமுறை தற்போது ஜெகனுக்கும் கை கொடுத்துள்ளது. தனது அரசியல் ஃபார்முலா மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்று 2019 சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் பெரும் வெற்றியைச் சாதித்துள்ள ஜெகன் தனது பதவியேற்பு நிகழ்ச்சியையும் ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் பாகுபலி ஸ்டைலில் உணர்வுமயமாக நிகழ்த்திக் காட்டி மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றுள்ளார். கட்சி தொடங்கிய 9 ஆண்டுகளில் இது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

ஒய் எஸ் ஆர் ஜெகன்மோகன் ரெட்டியாகிய நான்… என ஜெகன் தனது பதவியேற்பு உரையைத் தொடங்கியதுமே மக்களிடையே உணர்ச்சிகரமான வரவேற்பும், கை தட்டலும் அதிர்ந்தது ஸ்டேடியத்தில். இந்த பதவியேற்பு நிகழ்வில் தமிழகத்தில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டு ஜெகனை வாழ்த்தினர். ஆந்திர ஆளுநர் நரசிம்மன் முறைப்படி ஜெகனுக்கு பதவியேற்பும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விழா நிகழ்வில் ஒய் எஸ் ஆர் ஜெகன் ரெட்டியின் தாயாரான ஒய் எஸ் ஆர் விஜயாம்மா, ஜெகனின் மனைவி பாரதி ரெட்டி மற்றும் சகோதரி ஒய் எஸ் ஷர்மிளா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஜெகனின் வெற்றியைத் தொடர்ந்து அவரது கட்சியின் அதிகாரபூர்வ தேர்தல் எழுச்சிப்பாடலாக இருந்த ‘ராவாலி ஜெகன், காவாலி ஜெகன் மன ஜெகன்’ எனும் தேர்தல் பிரச்சார பாடல் இணையத்திலும் செய்தி ஊடகங்களிலும் தொடர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்தப் பாடலில் ஜெகன் நடைபயணமாக ஆந்திர மக்களைச் சந்திக்கும் காட்சிகள் உணர்ச்சிபூர்வமாக படமாக்கப்பட்டுள்ளன.

ஆந்திர முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஒய் எஸ் ஆர் ஜெகன் முதல் கையெழுத்திடப் போகும் திட்டமாக  ‘நவரத்னாலு ஸ்கீம்’ குறிப்பிடப்படுகிறது. நவரத்னாலு ஸ்கீம் என்பது ஒன்பது மக்கள் நலத்திட்டங்களை உள்ளடக்கிய கோப்பாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
 

<!–

–>