ஒருநாள் தொடரில் சொதப்பல்: என்ன ஆச்சு விராட் கோலிக்கு?

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மொத்தமாகவே 26 ரன்கள் மட்டும் எடுத்து ஏமாற்றம் அளித்துள்ளார் விராட் கோலி.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களிலும் வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்திய அணி. 3-வது ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. ஒருநாள் தொடரை வென்ற காரணத்தால் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர், குல்தீப் யாதவ், தீபக் சஹார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். கே.எல். ராகுல், தீபக் ஹூடா, சஹால், ஷர்துல் தாக்குர் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. மே.இ. தீவுகள் அணியில் அகேல் ஹுசைனுக்குப் பதிலாக ஹேடன் வால்ஷ் இடம்பெற்றுள்ளார். பூரன் கேப்டனாக உள்ளார்.

இன்றைய ஆட்டத்தின் 4-வது ஓவரை வீசிய அல்ஸாரி ஜோசப், அதே ஓவரில் ரோஹித் சர்மாவை 13 ரன்களிலும் விராட் கோலியை ரன் எதுவும் எடுக்க விடாமலும் வீழ்த்தினார். 

இந்த ஒருநாள் தொடரில் 8,18,0 என மொத்தமாகவே 26 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் விராட் கோலி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 51, 0, 65 என நன்றாக விளையாடியவர் இம்முறை சொதப்பிவிட்டார்.

விராட் கோலி: இரு நாடுகளுக்கிடையேயான ஒருநாள் தொடரில் குறைவான ரன்கள் 

13 ரன்கள் (3 இன்னிங்ஸ்) v பாகிஸ்தான், 2012/13 (இந்தியாவில்)
26 ரன்கள் (3 இன்னிங்ஸ்) v மே.இ. தீவுகள், 2021/22 (இந்தியாவில்)
31 ரன்கள் (2 இன்னிங்ஸ்) v தென்னாப்பிரிக்கா, 2013/14 (வெளிநாடு)

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய பேட்டர்கள்

8 – ஹர்பஜன் சிங் 
8 – சுரேஷ் ரெய்னா
8 – விராட் கோலி

ஏற்கெனவே இரண்டு வருடங்களுக்கும் மேலாக, கடந்த 68 இன்னிங்ஸிலும் விராட் கோலி ஒரு சதமும் அடிக்காமல் இருப்பது பெரிய ஏமாற்றமாக உள்ளது. (கடைசியாக, 2019 நவம்பர் 23 அன்று வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் 136 ரன்கள் எடுத்தார் கோலி. அது அவருடைய 70-வது சதம். விராட் கோலி களமிறங்கினாலே சதமடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு இப்போது மாறிவிட்டது. ஒரு சதமாவது அடித்தால் நல்லது என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள் ரசிகர்கள்.) சமீபகாலமாக தனது கேப்டன் பதவிகளைத் துறந்தார். இப்போது பேட்டிங்கிலும் ஏமாற்றம் அளித்துள்ளார்.

கேப்டன் பதவி தொடர்பான சர்ச்சைகளால் மனத்தளவில் கோலி பாதிக்கப்பட்டுள்ளார், அதனால் அவர் சிறிது காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஆனால் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகள் உள்ளதால் விராட் கோலியால் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்து ஓய்வெடுக்க முடியுமா என்பது சந்தேகமே. எனவே அவர் தொடர்ந்து விளையாடினாலும் விரைவில் இதுபோன்ற சறுக்கல்களில் இருந்து மீண்டு வர வேண்டும், விரைவில் சதம் அடித்து பழைய நிலைமையை அடைய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>