ஒழுங்கா ஸ்கூலுக்கு போய்க்கிட்டிருந்த உனக்கு என்னாச்சு? குழந்தைகளின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு கட்டுரை!

அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போதிலும் சுமித்ராவால் வேலையில் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. எப்போதும் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் செல்லும் மகள் ராகவி ஒரு வாரமாகவே காலை எழுந்தவுடனே வயிறு வலி, தலை வலி என ஏதாவது காரணம் சொல்லிக் கொண்டு பள்ளிக்கு போக அழுவது ஏனென்று புரியவில்லை. இன்றும் காலை ‘வயிறு வலிக்குதும்மா நான் ஸ்கூலுக்கு போகலை’ என்று அழ ஆரம்பித்ததும், ‘ஏண்டி தினம் என் உயிர வாங்குற? ஒழுங்கா ஸ்கூலுக்கு போய்க்கிட்டிருந்த உனக்கு என்னாச்சு?’ என்றாள்.

‘எனக்குப் புடிக்கலை, நான் போக மாட்டேன்’ என பெட்ரூமுக்குள் ஓடியவளின் முதுகில் ஒரு அடி வைத்து பாத்ரூமுக்குள் இழுத்துச் சென்று குளிப்பாட்டி, அவசரமாய் கிளப்பி விட்டாள் சுமித்ரா. வேன் சத்தம் கேட்டதும் இன்னும் பெருங்குரலெடுத்து அழுத ராகவி ‘அம்மா, ப்ளீஸ் என்னை நீங்க கொண்டு போய் விட்டா நான் ஸ்கூலுக்குப் போறேன்’ என்றாள். ‘உன்னைக் கொண்டு போய் விட்டுட்டு நான் எப்ப ஆபீஸ் போய் சேருவது, அப்புறம் எதுக்கு உனக்கு மாசம் 2000 ரூபாய் வேன் பீஸ் கட்டுறது? காலங்காத்தால என்னை டென்சனாக்காம ஒழுங்கா போ’ என இன்னொரு அடி போட்டு வேனில் ஏற்றி அனுப்பினாள்.

பத்து வயது ராகவி படிப்பில் படுசுட்டியுமல்ல, மிக மோசமுமல்ல சராசரி மாணவி. ஆசிரியர்களிடமிருந்து குற்றச்சாட்டுகள் ஏதும் இதுவரை வந்ததில்லை. பிறகு ஏன் பள்ளி செல்ல அழுகிறாள் என்பது சுமித்ராவின் சிந்தனையில் ஓடிக் கொண்டேயிருந்தது.

உணவு இடைவேளையின் போது தோழி காவ்யா, ‘சுமி நேந்து நியூஸ்ல கொடுமையப் பாத்தியாடீ? ஆறு மாசத்துக் குழந்தைய ஒருத்தன் கெடுத்திருக்கான்.. பத்து நாளுக்கு முன்னாடி தான் அயனாவரத்துல ஒரு சின்ன குழந்தைய பதினேழு பேர் சேர்ந்து கெடுத்துருக்கானுங்க. வயசு பையன்லேர்ந்து வயசானவங்க வரைக்கும் எத்தனை பேர் அந்தக் குழந்தைய டார்ச்சர் பண்ணியிருக்காங்க? அவனுங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? ஏழு மாசமா எப்படி பெத்தவங்களுக்கு தெரியாம இருந்துச்சு? அக்கம் பக்கத்துல ஒருத்தருமேவா பாக்கலை?  பிள்ளைங்களுக்கு பிரச்னை எந்த ரூபத்துல வரும்னே தெரியல. வாட்ச்மேன், ஸ்கூல் மாஸ்டர், பக்கத்து வீட்டுத் தாத்தா, ஆட்டோ ட்ரைவர்ன்னு யாரையும் நம்பக் கூடாது. பொம்பளைப் பிள்ளைங்கள வைச்சிருக்கவங்க வயத்துல நெருப்பைக் கட்டிக்கிட்டுத்தான் இருக்கணும் போலிருக்கு’ என்றதும் சுமித்ராவின் மூளைக்குள் ஏதோ பொறி தட்டியது. ‘அம்மா நீங்க கொண்டு போய் விடுங்க, நான் ஸ்கூலுக்குப் போறேன்’ என்று மகள் அழுதது காதுக்குள் ஒலித்தது. அப்போ பிரச்னை பள்ளியில் இல்லை, வேனில் என்பது புரிந்ததும் மனம் பதறியது. உடனே பள்ளி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு மகளின் பெயர் வகுப்பு விபரம் கூறி வேனில் அனுப்ப வேண்டாம், நானே வந்து அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அவளே போனாள்.

வீட்டிற்கு வந்து விசாரித்ததும் பெரிதும் அதிர்ச்சியடைந்தாள். வேனில் காலை ஏற்றும் போது ராகவிதான் முதல் குழந்தை, மாலை வரும் போது இவள்தான் கடைசி. இறக்கி விடுவதற்கு முன் இவள் தனியாக இருக்கும் பத்து நிமிடங்கள் வேன் ஓட்டுநரின் உதவியாளர், முதலில் சாக்லேட் தந்து மடியில் உட்கார வைத்தவன் பிறகு இவளை ஆபாசமாகக் கிண்டல் செய்வது, தகாத இடங்களில் தொடுவது, கிள்ளுவது என எல்லை மீறியிருக்கிறான். நடந்ததை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியதால் குழந்தை பயந்து போய் ஏதும் சொல்லாமல் மறைத்து, பள்ளிக்கு போக மாட்டேன் என அழுதிருக்கிறாள்.

உடனே சுமித்ரா தன் கணவரிடம் நடந்ததைக் கூறி மகளை மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்று ஆற்றுப்படுத்தியதோடு காவல் துறையில் புகார் கொடுத்ததால் வேன் ஓட்டுநர், உதவியாளர் இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இங்கே சுமித்ரா விழித்துக் கொண்டதால் அவரது மகள் காப்பாற்றப்பட்டாள். இல்லையெனில் குழந்தை யாரிடமும் எதுவும் சொல்லவில்லை என்ற தைரியத்தில் அந்த காமுகர்கள் அடுத்த நிலைக்குத் துணிந்திருப்பார்கள்.

இதுபோல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இத்தகைய நிகழ்வுகள் அரங்கேறும் போது மக்கள் கொதித்து சமூக வலைதளங்களில் தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதும். பிறகு வேறு சம்பவம் நடைபெற்றதும் திசை திரும்பி விடுவதுமாகவே உள்ளனர். இவை ஏன் நடக்கின்றன? இனி எந்த குழந்தையும் இவ்வாறு பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தீர்வு நோக்கி தொடர்ந்து செயல்பட வேண்டியது மிக அவசியம்.

காரணம் என்ன?

பொதுவாக மனிதன், கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவையாகவே இருப்பினும், இத்தகைய பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் மிருகம் பாதி அரக்கன் மீதி என மனிதத்தன்மை என்பதே துளியும் இன்றி நடந்து கொள்ளக் காரணம் என்ன? இது பிறவியிலேயே இருக்கும் நோயா? குறைபாடா? நிச்சயமாக இல்லை. உளவியலில் மனிதர்களை பிறவியிலேயே இருக்கக் கூடிய குணாதிசயங்களைக் கொண்டு இன்ட்ரோவர்ட், எக்ஸ்ரோவர்ட், சைக்காடிக் என்று பல வகைகளாகப் பிரிக்கலாம். ஆனால் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுதல் என்பது பிறவியில் வரும் குணமல்ல. வளரும் போது கற்றுக் கொள்வது தான்.

பெண்கள் நாகரீகமாக உடை உடுத்த வேண்டும் என்பது சரிதான். ஆனால் பாலியல் குற்றங்கள் பலரும் சொல்வது போல் பெண்களின் உடையைப் பார்த்தோ, உடல் அமைப்பைப் பார்த்தோ நிகழ்வதல்ல. குடி போதையில் தன்நிலை மறந்து செய்யும் செயலும் அல்ல. அடிப்படையிலேயே வக்கிர மனம் கொண்டவர்கள் தனக்கு அமையும் சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு செய்யும் பாதக செயல்.

இவர்கள் பிறரது உணர்வுகளையோ, பிறருக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் தான் நினைப்பதை உடனே அடைய வேண்டும் எனத் தன் ஆசையைக் கட்டுப்படுத்த முயலாமையும், தன்னுடைய சுகமே முக்கியம் என்ற சுயநலமும் கொண்ட கொடியவர்களாகவும் இருப்பதே முக்கிய காரணம். குழந்தை அடம் பிடித்து அழும் என்பதற்காக அது கேட்பதையெல்லாம் உடனே தந்து விடுவது, நல்லதாக இருந்தாலும் குழந்தைக்குப் பிடிக்காத எதையும் செய்யாமலிருப்பது என அதிக செல்லம் கொடுக்கப்படும் குழந்தைகள் பிற்காலத்தில் இப்படி மாற வாய்ப்புண்டு. இது மட்டுமல்லாமல் தவறான பழக்கங்களைக் கொண்ட நண்பர்களுடன் சேர்க்கை, இணையத்தின் மூலம் பாலியல் வக்கிரங்களைத் தூண்டும் ஆபாசப் படங்களைப் பார்த்தல் ஆகியவையும் மிக முக்கிய காரணங்கள்.

நல்லது கெட்டது புரியாத வயதில் கட்டுப்பாடற்ற செல்போன் பயன்பாடு ஹார்மோன்களைத் தாறுமாறாகச் சுரக்கச் செய்து விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் தறிகெட்டு நடக்க வைக்கிறது. வசதியற்ற ஏழைகளின் வீட்டில் தாம்பத்திய உறவுக்கும் தனிமையான இடமின்றி, பிள்ளைகள் உறங்கி விட்டதாக எண்ணி உறவு கொள்ளும் பெற்றோர்களைப் பார்க்கும் குழந்தைகளுக்குத் தான் பார்த்ததை செயல்படுத்திட விழையும் ஆவல் ஏற்படுவதுண்டு (Acting  Out). அவர்களுக்கு அமையும் சந்தர்ப்பத்தைப் பொறுத்து வாழ்வின் திசையே மாறிப் போகலாம். திருந்துவதற்கு ஆளின்றி மீண்டும் மீண்டும் தவறு செய்யும் போது, செய்வது தவறு என்ற குற்ற உணர்வே இல்லாமல் மழுங்கிப் போவதே இத்தகைய குற்றங்கள் பெருகுவதற்கான முக்கிய காரணம்.

பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

54% குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக புள்ளி விபரம் சொல்கின்றது. இக்கொடுமைகள் பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் ஏற்படுகினறன. அதுவும் குழந்தைகளுக்கு நன்கு பரிச்சயமான நபர்களாலேயே ஏற்படுகின்றன. எனவே குழந்தைகளை பிறரிடம் அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் தனியாக விட்டுச் செல்லக் கூடாது.  பெற்றோர் பிள்ளைகளின் சிறு முக வாட்டத்தையும் குறிப்பறிந்து காரணம் விசாரிக்க வேண்டும். குறிப்பிட்ட நபரின் அருகாமையை அல்லது தொடுதலை குழந்தை விரும்பவில்லையெனில் ‘தாத்தா தானே, மாமா தானே போய் மடியில் உட்கார், முத்தம் கொடு’ என்றெல்லாம் கூறாமல் குழந்தையின் உணர்வுக்கு மதிப்பளிக்கவும், அந்நபரிடமிருந்து குழந்தையை பாதுகாக்கவும் வேண்டும். ஒருபோதும் குழந்தைகளை ஆடையின்றி இருக்க அனுமதிக்கக் கூடாது.

ஒவ்வொருவரின் உடலைச் சுற்றியும் ஆரா என்ற கண்ணுக்குத் தெரியாத பாதுகாப்பு வளையம் உண்டு. தன் அனுமதியின்றி இவ்வளையத்தைத் தாண்டி வர யாருக்கும் உரிமையில்லை. தன்னுடைய உடல் மீது பிறரது தவறான தொடுதல்களை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. அதே போல் அனுமதியின்றி பிறரது உடலைத் தானும் தொடக் கூடாது. மகிழ்ச்சியுடன் வாழ தனக்கு எவ்வளவு உரிமை உண்டோ, அதே உரிமை மற்றவர்களுக்கும் உண்டு. தன்னால் மற்றவர்களுக்குத் துன்பம் ஏற்படுமாறு நடந்து கொள்ளக் கூடாது என்பதை சிறு வயது முதலே குழந்தைகள் மனதில் ஆழப் பதிய வைக்க வேண்டும்.

சரியான தொடுதல், தவறான தொடுதல் என்பது பற்றி கற்றுக் கொடுப்பதோடு அப்படி யாராவது தவறாகத் தொட்டாலோ. யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டினாலோ உடனே பெற்றோரிடமோ அல்லது வேறு நம்பிக்கைக்குரிய நபரிடமோ தெரிவிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டும். 1098 என்ற குழந்தைகளுக்கான உதவி கிடைக்கும் தொலைபேசி எண் பற்றி சொல்ல வேண்டும்.

நமது முன்னெச்சரிக்கைகளையும் மீறி குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக நேரிட்டால் குழந்தையிடம் ‘இதற்கு நீ எந்த விதத்திலும் காரணமல்ல’ என்று தைரியம் சொல்லி குற்ற உணர்வு ஏற்பட்டுவிடாமல் கவனமாக கையாள வேண்டும். மனநல ஆலோசகரின் உதவியைப் பெறுவதும் நல்லது. தயங்காமல் காவல்துறையை அணுகவும் வேண்டும்.

போக்சோ சட்டத்தின் மூலம் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு மட்டுமன்றி, பாலியல் சீண்டல், குழந்தைகளை ஆபாசமாக ஒளிப்பதிவு செய்வது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கும் தண்டனை பெற்றுத் தருவதோடு பாதிக்கப்பட்ட குழந்தையின் மறு வாழ்வுக்கான இழப்பீட்டையும் பெற முடியும்.

அரசும், ஊடகங்களும் இச்சட்டத்தின் மூலம் தண்டனைப் பெற்றவர்களின் வாழ்க்கை எப்படி சிறையில் சீரழிகிறது, அவர்களது குடும்பங்களும் எத்தகைய அவமானத்திற்கு உள்ளாகிறது என்பது பற்றிய செய்திகளை தொடர்ந்து பொது மக்களுக்கு தெரிவித்தால் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு அது ஒரு எச்சரிக்கையாக அமைந்து குற்றங்கள் குறைய வாய்ப்பாகும்.

பெற்றோர் குழந்தைகளின் ஓய்வு நேரத்தை முறைப்படுத்த அவர்களுக்கு ஆர்வமுள்ள விளையாட்டு அல்லது கலைகளைக் கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். நல்ல விஷயங்களில் கவனத்தைச் செலுத்தினால் தவறான காரியங்களில் மனம் செல்லாது. செல்போனின் நன்மை தீமைகளை குழந்தைக்குப் புரியும்படி விளக்கி, குழந்தைகளின் இணைய பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும்.

தான் செய்வது எதையாவது பெற்றோரிடம் சொல்லாமல் மறைக்கத் தோன்றினால் அது தவறான காரியம் என்பதை வலியுறுத்த வேண்டும். பெற்றோர் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் உற்ற நண்பராக இருந்தால் பெரும்பாலான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.

கல்வித் துறையின் கவனித்திற்கு

தற்போதைய எட்டாம் வகுப்பு அறிவியலில் வளரிளம் பருவத்தை அடைதல் என்ற பாடத்தில் பதின் பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களினால் ஐந்து அல்லது ஆறாம் வகுப்பு படிக்கும் போதே பிள்ளைகள் பருவமெய்திவிடுவதால் இப்பாடத்தை ஐந்து அல்லது ஆறாம் வகுப்பிலேயே வைத்தால் மனித உடல் உறுப்புகள் பற்றியும் பதின் பருவத்தில் ஹார்மோன்களால் தன் உடலிலும் எதிர் பாலினத்தின் உடலிலும் ஏற்படக்கூடிய மாற்றங்களைக் குறித்தும் அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்வார்கள். சில ஆசிரியர்கள் மனித ஆண், பெண் உடலமைப்பு, இனப்பெருக்க உயிரியல் ஆகிய பாடங்களை விரிவாகக் கற்றுக் கொடுக்க தயங்குகிறார்கள். இவற்றை பிள்ளைகளுக்கு தெளிவாக விளக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், சந்தேகங்களை தன் வயதொத்த நண்பர்களிடமோ, இணையத்தின் மூலமாகவோ தெரிந்துக் கொள்ள முயற்சிப்பார்கள். அதைவிட சரியான தகவல்களை சரியான விதத்தில் நாமே தந்துவிடுவது நல்லதல்லவா. இந்த அறிவியல் தகவல்களோடு ஓர் ஆண், பெண்ணை எப்படி சரிசமமாக மதிக்க வேண்டும் என்பதையும் தொடக்க கல்வி முதலே பாடத் திட்டத்தில் இணைப்பது நல்லது.

ஆறாவது முதலே பிள்ளைகள் என்.எஸ்.எஸ், என்.சி.சி, என்.ஜி.சி, ஆர்.எஸ்.பி, ஜே.ஆர்.சி, ஸ்கவுட்ஸ் என ஏதாவது ஒரு அமைப்பில் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென அரசாணை பிறப்பிக்க வேண்டும். குழந்தைகளுக்குள்ள உரிமைகள் பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசகரின் நியமனம் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

பள்ளிகள் பாடத் திட்டம், தோ்வு, மதிப்பெண் சார்ந்து மட்டும் இயங்காமல் நல்லொழுக்கம் மற்றும் வாழ்க்கைக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அப்போது மனங்கள் மரத்துப் போகாமல் மனிதநேயம் மிக்க சமுதாயம் மலரும்.

– பிரியசகி – ஆசிரியர், எழுத்தாளர் / ஜோசப் ஜெயராஜ் – உளவியலாளர்

<!–

–>