ஓய்வு பெறும் எண்ணம் இல்லை: சாதனை வெற்றிக்குப் பிறகு நடால் அறிவிப்பு

 

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை வென்ற பிறகு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை எனப் பிரபல வீரர் நடால் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில், உலகின் 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் (35) சாம்பியன் பட்டம் வென்றாா்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் 2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என 5 மணி நேரத்துக்கும் அதிகமாகப் போராடி மெத்வதேவைத் தோற்கடித்து ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார் நடால்.

இதன் மூலம் தனது 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றிய நடால், டென்னிஸ் வரலாற்றில் 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரா் என்ற சாதனையைப் படைத்தாா். முன்னதாக அவா் 20 கிராண்ட்ஸ்லாம்கள் வென்று, ஸ்விட்சா்லாந்தின் ரோஜா் ஃபெடரா், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோருடன் சமநிலையில் இருந்தாா்.

இந்நிலையில் பரிசளிப்பு விழாவில் நடால் கூறியதாவது:

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, இதுவே என்னுடைய கடைசி ஆஸ்திரேலிய ஓபனாக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறியிருப்பேன். ஆனால் இப்போது தொடர்ந்து விளையாடுவதற்கான அதிக ஆற்றலுடன் உள்ளேன். என் உணர்வுகளைச் சரியாக இப்போது சொல்ல முடியாது. ஆனால் தொடர்ந்து முயற்சி செய்து அடுத்த வருடம் மீண்டும் இங்கு (ஆஸி. ஓபன்) விளையாட வருவேன். அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன். என்னுடைய டென்னிஸ் வாழ்க்கையில் மிகவும் உணர்ச்சிகரமான தருணம் இது. மெத்வதேவுக்கு இந்தத் தோல்வி கடினமானதாக இருக்கும். அவருடன் இன்று விளையாடியது பெருமைக்குரியது என்றார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>