கருத்துரிமை, சிலரது தனி உரிமையல்ல

கடந்த ஜன. 5-ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற இருந்த அரசு விழாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் வாகன அணிவகுப்பு பெரோஸ்பூர் அருகே போராட்டக்காரர்களால் தடுக்கப்பட்டதால் அவர் விழா நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு பாதிவழியில் தில்லி திரும்பினார். 

இதையடுத்து நாடு முழுவதும் இதற்கு எதிரான கருத்துகள் எழுந்தன. சமூக ஊடகங்களில் இவ்விவகாரம் மிகவும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. எனினும், விவசாயிகள் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத பிரதமர் மோடி போராட்டக்காரர்களால் தடுக்கப்பட்டது தவறல்ல என்ற வகையிலும் பாஜக எதிர்ப்பாளர்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். 

எந்த ஒரு விஷயத்திலும் இருவேறு கருத்துகள் இருக்கும். அதை ஏற்பதும் எதிர்ப்பதும் அவரவர் சுதந்திரம். ஆனால் பிறர் தனக்குப் பிடிக்காத கருத்தைக் கொண்டிருக்கவே கூடாது என்று கருதுவது, ஒரு வகையில் கருத்தியல் வன்முறையாகும்.

பிரதமரின் பாதுகாப்பு என்பது கட்சி பேதமில்லாது நாட்டு மக்கள் அனைவரும் கவலை கொள்ள வேண்டிய விஷயம். ஆனால், பஞ்சாப் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கீழ்மட்டத் தலைவர்கள் பலர் வெளியிட்ட கருத்துகள் நாகரிகமாக இருக்கவில்லை. சில மாநிலங்களின் முதல்வர்கள் சம்பிரதாயத்துக்காகவும்கூட இதைக் கண்டிக்கவில்லை. இது நமது அரசியலின் தரம் வீழ்ச்சி அடைந்து வருவதையே காட்டுகிறது.
பெரும் தலைவர்களே இவ்வாறு உள்நோக்கத்துடன் அமைதி காக்கும்போது, கீழ்நிலையில் தவறான பிரசாரங்களை மேற்கொள்வோரைத் தடுக்க முடியாது போகிறது. இதற்கு உதாரணம்தான் தமிழ்த் திரைப்பட நடிகர் சித்தார்த்தின் அவல நகைச்சுவை.

பிரதமரின் வாகன அணிவகுப்பு தடுக்கப்பட்டதை பல தேசிய பிரபலங்கள் கண்டித்துள்ளனர். அவர்களில் உலக அளவில் சாதனை படைத்துவரும் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் ஒருவர். அவர் பாஜக உறுப்பினரும் கூட.

“”பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால் நாட்டின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவே இருக்கும். பிரதமருக்கு எதிரான அராஜகவாதிகளின் செயல்பாட்டைக் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கிறேன்”  என்று ட்விட்டரில் அவர் தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். 
பிரதமர் என்ற பதவியை  ஒரு கட்சி சார்ந்ததாகப் பார்க்கவில்லை என்பது அவரது பதிவிலேயே வெளிப்படுகிறது. இதைச் சொல்ல அவருக்கு தனிப்பட்ட உரிமை உள்ளது. தான் சார்ந்த கட்சி சார்பாக கருத்துத் தெரிவிக்கவும் அவருக்கு அரசியல் உரிமை உள்ளது.

ஆனால், இதைப் பொறுக்க முடியாமல், பிரதமர் மோடியை தீவிரமாக வெறுப்பவரான தமிழ் நடிகர் சித்தார்த், சாய்னாவின் ட்விட்டர் பதிவில் கேவலமான விமர்சனத்தைப் பகிர்ந்தார். நேவால் தொடர்புடைய இறகுப்பந்தை ஆங்கிலத்தில் சுட்டும் வார்த்தையை (ஷட்டில்காக்) திரித்து பாலியல் ரீதியாக தவறான பொருள் தரும் வகையில் குறிப்பிட்ட அவர், நேவாலை நாட்டின் பாதுகாவலர் என்று எள்ளி நகையாடியிருந்தார்.
இது தேசிய அளவில் கடும் கண்டனங்களைக் குவித்தது. உலகப் புகழ்பெற்ற இந்திய விளையாட்டு வீராங்கனையை பாலியல்ரீதியாக விமர்சிப்பதா என்று சமூக ஊடகங்களில் எதிர்ப்பலை எழுந்தது. அதையடுத்து, சித்தார்த்தின் ட்விட்டர் கணக்கை நீக்குமாறு அந்நிறுவனத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியது. தவிர, நடிகர் சித்தார்த் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு மகாராஷ்டிர காவல் துறைத் தலைவருக்கு மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா கடிதம் எழுதினார். 

இந்நிலையில், சாய்னா நேவாலிடம் சித்தார்த் மன்னிப்புக் கேட்டு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். அதில், தான் பெண்ணியவாதி என்றும், மூர்க்கத்தனமான நகைச்சுவையைப் பயன்படுத்தியதற்கு வருந்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

சித்தார்த்தின் முந்தைய கீழ்த்தரமான விமர்சனத்தைப் பொருட்படுத்தாமல் நாகரிகம் காத்தது போலவே, அவரது இந்த மன்னிப்பையும் ஏற்பதாக சாய்னா நேவால் தெரிவித்திருக்கிறார். சித்தார்த்தை இறைவன் ஆசீர்வதிக்கட்டும் என்றும் அவர் பெருந்தன்மையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
எனினும் இந்த விஷயம் இத்துடன் முற்றுப் பெறுவதல்ல. சாய்னா என்ற பெண்ணை பாலினரீதியாக விமர்சித்தது மட்டுமே கண்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தனது கருத்தைக் கூறும் அரசியல் உரிமை சாய்னா நேவாலுக்கு உள்ளது என்பதே இங்கு கவனத்தில் கொள்ளப்படவில்லை. இதுதான் நாம் போற்றி மகிழும் கருத்துரிமையா?

பாஜகவை எதிர்ப்போர், பாஜகவுக்கு ஆதரவாக யார் கருத்து சொன்னாலும் அவர்களுக்கு “சங்கி’ முத்திரை குத்தி வசை பாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பாஜக ஆதரவாளர்களை வசை பாடுவதும் கேலி செய்வதும் தமிழகத்தில் ஒரு கருத்தியல் வன்முறையாகவே தொடர்கிறது. பிராமண எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு, தமிழ்ப் பெருமிதம், மாநில உரிமை, முற்போக்கு என்ற பெயர்களில் அவை நியாயப்படுத்தப்படுகின்றன. தமிழ்த் திரைத் துறையில் அண்மைக்காலமாக இந்தப் போக்கு மிக அதிகமாகவே வெளிப்படுவதைக் காணலாம்.  

அண்மையில் தனது மகனின் பிறந்த நாளை ஒட்டி பாஜக சிறுபான்மைப் பிரிவின் தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் ஏர்வாடி தர்ஹாவில் தொழுகை நடத்தச் சென்றபோது சில முஸ்லிம் அமைப்புகள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. பாஜக பிரமுகர் தர்ஹாவுக்குள் வரக் கூடாது என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். 

இது முறையா? அளவற்ற அருளாளனைத் தொழ அரசியல் பேதம் குறுக்கிடாது என்று எதிர்ப்பாளர்களிடம் சொல்லக்கூட, அங்கு பெரியவர்கள் யாருமில்லை என்பது வேதனை அல்லவா? இறுதியில் காவல் துறை பாதுகாப்புடன் தர்ஹாவுக்குள் சென்று அவர் தொழுகை நடத்தி இருக்கிறார்.
கருத்துரிமை என்பது பாஜக எதிர்ப்பாளர்களுக்கு மட்டுமே உரிய தனியுரிமையல்ல. இதை அவர்கள் உணராத வரை சித்தார்த்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்.
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>