கரோனா தடுப்பூசியை ஜோகோவிச் செலுத்திக் கொண்டாரா?: தெரியாது என தந்தை பதில்

 

ஜோகோவிச் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டாரா இல்லையா என்பது தெரியாது. தெரிந்தாலும் சொல்ல மாட்டேன் என்று அவருடைய தந்தை கூறியுள்ளார்.

2022 ஆஸ்திரேலிய ஓபன் போட்டி ஜனவரி 17-ல் தொடங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்க கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் கூறியுள்ளார்கள்.  

உலகின் நெ.1 வீரர் ஜோகோவிச், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்துள்ளதால் அவரால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி ஜோகோவிச்சின் தந்தை ஒரு பேட்டியில் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டாரா இல்லையா என்பது பற்றிய தகவலை யாரிடமும் ஜோகோவிச் பகிர்ந்துகொள்ளவில்லை.

போட்டி அமைப்பாளர்கள் நடந்துகொள்ளும் விதத்தில் தான் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கலந்துகொள்வது பற்றிய முடிவை ஜோகோவிச் எடுப்பார். அச்சுறுத்தல்களும் கட்டுப்பாடுகளும் இருந்தால் அவர் கலந்துகொள்ள மாட்டார். நான் செய்ய மாட்டேன். அவர்  என் மகன். என்ன நடக்கும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்வதும் செலுத்திக்கொள்ளாததும் ஒருவருடைய தனிப்பட்ட உரிமை. தன்னுடைய உடல்நலம் குறித்து முடிவெடுக்க அவரவருக்கு உரிமை உள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டாரா இல்லையா என்பது பற்றி ஜோகோவிச் தெரிவிப்பாரா? மாட்டார் என நினைக்கிறேன். அவருடைய முடிவு எனக்குத் தெரியாது. தெரிந்தாலும் உங்களிடம் சொல்லமாட்டேன் என்றார். 

இந்த வருடம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய மூன்று பட்டங்களையும் ஜோகோவிச் வென்றார். ஆடவா் ஒற்றையரில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை 9 முறை வென்றதோடு நடப்பு சாம்பியனாகவும் உள்ளார். 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>