கர்ப்பிணிகளே! தயவு செய்து கருவில் இருக்கும் உங்கள் குழந்தையுடன் பேசுங்கள்….

குழந்தை கருவாக, தாயின் கருவறையில் இருக்கும் போதே… தாய் அதனுடன் பேசத் தொடங்கி விட வேண்டும் என்று பல்லாண்டுகளாக மகப்பேறு மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். குழந்தை கருவறையில் உதிரக் கட்டியாக உதிக்கும் போதே அதற்கு தன் தாயின் குரலை தனித்து அடையாளம் காணத் தெரியும் என்பார்கள் வயதான பாட்டிகள். இது எத்தனை தூரம் நிஜமோ?! ஆனால் குழந்தை கருவில் இருக்கும் மூன்றாம் மாதத்தில் இருந்து தாயின் குரல் அதற்குக் கேட்கத் தொடங்கி விடும் என்கிறது அறிவியல். இதனால் தான், கருவுற்ற தாய்மார்கள் அக்காலங்களில் எவ்வித கவலைகளும் இன்றி கருவில் இருக்கும் குழந்தைக்காகவேனும் தங்களது மனதை அமைதியாகவும், நிர்மலமாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமென்கிறார்கள் மருத்துவர்கள். மனம் அமைதியாக இருந்தால் மட்டும் போதாது… கருவில் இருக்கும் குழந்தையோடு அடிக்கடி பேசும் வழக்கத்தையும் அதன் தாய் பின்பற்றி வந்தால் பிறக்கப்போகும் குழந்தையின் எதிர்காலக் கற்றல் திறன் அதிகரிக்கும் என்கிறது இத்துறையில் சமீபத்தில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்று.

குழந்தையின் கற்றல் திறன் என்றதும், உடனே கருவிலிருக்கும் குழந்தையைக் கூட விட்டு வைக்க மாட்டீர்களா? அது பிறந்து பூமி தொடும் முன்பே அதற்கும் ஏ,பி,சி,டி கற்றுக் கொடுக்கச் சொல்கிறதா இந்த அவசர உலகம் என்று கேள்வி எழும்பலாம். இல்லை கற்றல் திறன் என்றால் பாடப்புத்தகங்களை மட்டுமே கற்பதல்ல, இந்த உலகத்தை, உறவுகளை, ஏனைய மனிதர்களைக் கற்கும் திறன் நமது குழந்தைகளுக்கு அவசியம். அதற்குப் பெயரும் கற்றல் தான். 

குழந்தை கருவில் இருக்கையில் அதன் தாய் அதனுடன் பாஸிட்டிவ்வான முறையில் இந்த உலக விஷயங்கள் அனைத்தைப் பற்றியும் பேசத் தொடங்கி விடலாம். ஆனால், ஞாபகமிருக்கட்டும், அத்தனையும் பாஸிட்டிவ்வாகவே இருக்க வேண்டும். நெகட்டிவ்வாகப் பேசி பிறப்பதற்கு முன்பே குழந்தையை தன்னம்பிக்கை இழந்த ஜீவனாகச் செய்து விடத் தேவையில்லை. பாஸிட்டிவ்வாகப் பேசுவதென்றால் என்ன? 

கருவிலிருக்கும் குழந்தையின் அசைவுகள் ஒரு தாய்க்கு எத்தனை இன்பத்தைத் தர முடியுமோ…அதற்கு ஈடான அதே அளவு இன்பத்தை ஒரு தாய், கருவிலிருக்கும் தன் குழந்தையுடனான தொடர் உரையாடலின் மூலமாக குழந்தைக்கும் தரமுடியும். அந்தக் குழந்தைக்கு என்ன தெரியும் என்று நினைத்து விடாதீர்கள்… குழந்தைக்கு தாயின் மொழி புரியும் என்கிறது மருத்துவம்.

இதற்கு புராண உதாரணமொன்றைச் சுட்டிக்காட்டினால் உங்களுக்கு எளிதாகப் புரியலாம்…

அபிமன்யூ தன் தாய் சுபத்ரையின் கருவில் இருக்கையில், கர்ப்பிணியான சுபத்ரைக்கு பத்ம வியூகம் பற்றி கேட்டுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. எப்படியெனில் அண்ணன் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா மூலமாக… (பத்ம வியூகம் என்பது போர் வியூகங்களில் ஒன்று… பத்மம் என்றால் தாமரை… தாமரைப்பூவின் இதழ்களைப் போல போர் வியூகம் அமைத்து எதிரிகளைச் சுற்றி வளைப்பது). அப்படி அண்ணன் ஸ்ரீகிருஷ்ணன் மூலமாக பத்மவியூகத்தைப் பற்றி சுபத்ரை மட்டும் அறிந்து கொள்ளவில்லை, அவளது வயிற்றில் இருக்கும் குழந்தையான அபிமன்யூவும் அறிந்து கொள்கிறான். ஆனால், எதுவரை எனில் வியூகத்தின் உள்ளே நுழைவது வரை மட்டுமே அபிமன்யூ கேட்கிறான். வியூகத்தை உடைத்துக் கொண்டு வெளியேறுவது எப்படி என கிருஷ்ணன் சொல்லிக் கொண்டிருக்கும் போது சுபத்ரைக்கு தூக்கம் வந்து விடுகிறது. அவள் தூங்கி விடுகிறாள், அன்னை தூங்கும் போது கருவில் இருக்கும் குழந்தையும் தூங்கி விடுகிறது. எனவே சுபத்ரைக்கு மட்டுமல்ல, அபிமன்யூவுக்கும் பத்ம வியூகத்தில் இருந்து வெளிவருவது எப்படி எனத் தெரியாமலாகி விடுகிறது. கருவில் இருக்கும் குழந்தை போர் வியூகம் கற்றுக் கொண்டு என்ன செய்யப் போகிறது? பிறந்த பிறகு அதைக் கற்றுக் கொள்ள நாட்களே இல்லையா? என்று சிலருக்குத் தோன்றலாம். அது அப்படியல்ல, கருவிலிருக்கையில் கேட்டுக் கொண்ட அரைகுறை ஞானத்தின் துணை கொண்டு அபிமன்யூ பாரதப் போரில் கெளரவர்கள் வகுத்த பத்ம வியூகத்தினுள் நுழைந்து தீரமாகப் போரிடத் துவங்கி விடுகிறான். ஆனால், அவனால் அந்த வியூகத்தை உடைத்துக் கொண்டு வெளியில் வரத் தெரியாமல் போக, கடைசியில் கெளரவ சேனையின் மகாப்பெரிய ஜாம்பவன்கள் அனைவரும் இந்தச் சிறுவனை வளைத்துக் கொண்டு வதைக்க அவன் மிகக் கொடூரமாக இறக்கிறான்’ இத்தனைக்கும் காரணம் தாயின் அவன் கருவறையில் அவன் பெற்ற அரைகுறை ஞானத்தாலே! இதை எதற்காகச் சொல்லவந்தேன் என்றால், கருவில் இருக்கும் குழந்தையுடன் பேசும் தாய், தன் குழந்தையின் எதிர்கால வாழ்வை முன்னிட்டு முழுமையாகவும், பாஸிட்டிவ்வாகவும் ஒரு விஷயத்தைக் கற்றுத்தரவோ, பேசவோ முயல வேண்டும். அப்போது தான் அந்த கருவறை உரையாடல்  நல்ல முறையில் பலன் தரக்கூடும்.

மாறாக, குழந்தை கருவில் இருக்கையில்… தாய், தான் அனுபவித்த கஷ்டங்களையும், நஷ்டங்களையும் விடாமல் ஜபித்துக் கொண்டிருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் அதே விதமான தாக்கங்களே அதிகமிருக்கும். தாய், மிகச் சோர்வுடன், எந்த வேலையும் செய்யாமல், உற்சாகமின்றி, எதிர்காலம் குறித்த அச்சத்துடனும், உறவுகளின் மேல் துவேஷத்துடனும் இருந்தால் பிறக்கும் குழந்தையும் அவளது அச்சாகவே பிறக்கும். எனவே… பிறக்கும் குழந்தைகள் செயற்கரிய செயல்களைச் செய்ய வேண்டும் என்றோ அல்லது மிகப்பெரிய கல்விமானாக வரவேண்டும் என்றோ ஆசைப்படும் பெற்றோர்கள் அதற்கான திட்டமிடலை கருவில் இருக்கும் குழந்தையின் ஆரம்ப நாட்களிலேயே தொடங்கி விடுவது உத்தமம்.

இதை தனது தொடர் ஆய்வாதரங்கள் வாயிலாக சில சோதனைகளை நடத்தி ஆய்வு முடிவாகக் கொண்டு  கட்டுரை சமர்பித்திருக்கிறார்  கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக மருத்துவ மாணவி சாரா ஃபாலி.

சாரா முன்வைக்கும் ஆய்வுக் கட்டுரையில் தெள்ளத் தெளிவாக புரிதலுக்குள்ளான விஷயம் ஒன்றுண்டு அது என்னவெனில், கருவில் இருக்கும் குழந்தையுடன் அதன் தாய் தொடர்ந்து ஆரோக்யமான உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டே இருந்தால் கருவில் இருக்கும் குழந்தையின் இயக்கமும், செயல்பாடுகளும் சுறுசுறுப்பாக இருக்கும். அதே சமயம் தாய், தன் வேலைகளில் மூழ்கிப் போய், கருக்குழந்தையுடன் எந்த விதமான உரையாடல்களையும் நிகழ்த்தாவிட்டால் கருக்குழந்தை மந்தமாகி விடுவதோடு அதற்கு வெளி உலகத்தின் மீதான அறிமுகப் புரிதல் இன்றி பிறந்ததும் மிகவும் குழம்பிப் போகிறது என்பதே!

ஆகவே, கர்ப்பிணிகளே! தயவுசெய்து கருவில் இருக்கும் உங்கள் குழந்தையுடன் தொடர்ந்து ஆரோக்யமாகப் பேசி அதனைக் குதூகலமாக வைத்துக் கொள்ள முயலுங்கள். எல்லாம் உங்கள் குழந்தையின் எதிர்கால நன்மைகளுக்காகத் தான்.

<!–

–>