கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமாம்!

பீட்ரூட் மிகச்சிறந்த நார்ச்சத்து மிகுந்த ஆங்கிலக் காய்கறி வகைகளில் ஒன்று. சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்றாக இருந்த போதும் இந்திய சமையலறைகளில் பெரும்பாலும் பீட்ரூட்டுக்கு முன்னுரிமை அளிக்க இன்றும் கூட தயக்கமே நிலவுகிறது. காரணம் அதனால் உண்டாகும் இளஞ்சிவப்புக் கறை. ஆனால் அந்தக் கறை நல்லது என்று தெரிந்த போதும் பெண்கள் ஏன் பீட்ரூட்டைத் தவிர்க்கிறார்கள் எனில் பீட்ரூட்டை வைத்து அவர்களுக்கு அதிகமான ரெஸிப்பிகளில் சமைக்கத் தெரியாது என்பதாலும் தான். பொடியாக நறுக்கியோ அல்லது துருவியோ பொரிக்கலாம். மிஞ்சினால் சர்க்கரையும், நெய்யும் சேர்த்து பீட்ரூட் ஹல்வா செய்யலாம். அதைத் தாண்டி வேறென்ன செய்ய முடியும்?

பீட்ரூட் மில்க்‌ஷேக்

பீட்ரூட்டைக் கொண்டு பொரியல் தவிர, டீ தயாரிக்கலாம், மில்க் ஷேக் தயாரிக்கலாம். எலுமிச்சைச் சாறு கலந்து பீட்ரூட் ஜூஸ் தயாரிக்கலாம். அரைத்து கோதுமை மாவில் கலந்து பிசைந்து பூரிகள் இடலாம். அதன் சிவப்பு நிறம் குழந்தைகளை ஈர்த்து அதிகம் உண்ண வைக்கும். சாலட்களில் துருவிச் சேர்த்து பச்சையாகவோ அல்லது அரைவேக்காட்டில் வேக வைத்தோ தாராளமாக பீட்ரூட் சேர்க்கலாம். பீட்ரூட்டில் சூப் தயாரிக்கலாம். 

பீட்ரூட்  ‘சாய்’ அல்லது டீ

பீட்ரூட் டீ தயாரிக்க ரெஸிப்பி!

  • தேவையான பொருட்கள்…
  • பீட்ரூட் – 1
  • இஞ்சிச் சாறு – 1/4 டீஸ்பூன்
  • புதினாச்சாறு – 1 டீஸ்பூன்
  • எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
  • சர்க்கரை அல்லது தேன் – தேவையான அளவு
  • ஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

பீட்ரூட்டைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் இட்டு அரைத்துச் சாறு எடுத்துக் கொண்டு அந்தச் சாற்றை அடுப்பிலேற்றிக் காய வைக்கவும். சாறு நன்கு சூடானதும் இறக்கி சற்று ஆற வைத்து அதில் புதினாச்சாறு, இஞ்சிச் சாறு, எலுமிச்சைச் சாறு, ஏலத்தூள் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். இந்த பீட்ரூட் சாற்றை குழந்தைகளுக்கு தினமும் அருந்தத் தந்தால் அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை என்பதே வராது. அது மட்டுமல்ல கர்ப்பிணிகள் இந்த டீயை தினமும் அருந்தி வந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை சிவப்பாக இருக்கும் என்றொரு நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது.

பீட்ரூட் சூப்

கர்ப்பிணிகள் பீட்ரூட்டைச் சாறு எடுத்து அதில் பூண்டு, சிறு வெங்காயம் நறுக்கிப் போட்டு ஒரு சிட்டிகை பெருங்காயத்தூளும், ஐந்தாறு கறிவேப்பிலை மற்றும் உப்புச் சேர்த்து சூப் செய்தும் அருந்தலாம்.

அப்படியே பச்சையாக சாலட் செய்தும் சாப்பிடலாம்.

திருமணத்திற்கு தயாராக இருக்கும் இளம்பெண்கள் எனில் பீட்ரூட் சாறு எடுத்து அதைத் தினமும் ஒருமுறை முகத்தில் அப்ளை செய்து காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் முக கழுவித் துடைத்து வந்தால் சருமம் மென்மையாவதோடு நிறமும் அதிகரிக்கும் என்றொரு நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது. பீட்ரூட் ஃபேஸியல் செய்து கொண்டால் முகச்சுருக்க்கங்கள் அகன்று சருமத்தின் இறந்த செல்கள் அகற்றப்பட்டு முகம் இளமைத்தோற்றம் பெறும்.

பீட்ரூட்டின் வரலாறு…

‘பீட்’ செடியின் முதன்மையான வளர்ந்த வேர்ப்பகுதியே பீட்ரூட் எனக் கூறப்படுகிறது. கரும்புக்கு அடுத்தபடியாக இனிப்புக்காக பயன்படுத்தும் சர்க்கரையின் மூலமாக பீட்ரூட் இருக்கிறது. பீட்ரூட்டின் இலைகளையே ஆதிகாலத்தில் சமையலுக்கு பயன்படுத்தியதாகத் தெரிகிறது. பீட் செடியின் வேர்ப்பகுதியை உணவுக்காக பயன்படுத்த ஆரம்பித்தவர்கள் ரோமானியர்கள். ரோமானிய நாடோடிகள் மூலமாக வட ஐரோப்பாவில் பீட்ரூட்டை உணவுக்காக பயிரிடுவது பரவியது. 19ம் நூற்றாண்டில் பீட்ரூட்டிலிருந்து சர்க்கரையைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் இதன் தேவை மற்ற நாடுகளில் அறிமுகமானது. ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகே இந்தியாவிலும் பீட்ரூட் அறிமுகமானது. இந்தியாவில் ஐரோப்பியர்களின் காலநிலைக்கு ஒத்த குளிர்பிரதேசங்களில் இது பயிடப்படுகிறது.

சமைப்பதற்கு உகந்த பீட்ரூட்டை தேர்ந்தெடுப்பது எப்படி?

பீட்ரூட்டின் தோல் வறண்டு போகாமல், தோலை லேசாகக் கீறினால் உள்ளேயிருக்கும் காயின் சாறு உடனே வெளிப்பட வேண்டும். இதுவே சமைப்பதற்கு தோதான இளம் பீட்ரூட். முற்றிய பீட்ரூட் தோல் தடித்து கடினமானதாக இருக்கும். இதை வேக வைக்கும்போது கடினத்தன்மை அதிகமாகி விடும். சுவையும் சற்றும் குறைச்சலாக இருக்கும்.

பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள்

100கிராம் பீட்ரூட்டில் கார்போஹைட்ரேட் 9.96கி,நார்ச்சத்து 2.0கி, சர்க்கரை 7.96கி, கொழுப்பு 0.18கி. இவை தவிர, கால்சியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ்,ஜின்க் போன்ற தனிம சத்துக்களும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்பளக்ஸ் போன்ற உயிர்சத்துக்களும் அடங்கியுள்ளன.

 

<!–

–>