கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக் கூடிய திடீர் சிக்கல் என்ன?

‘என்ன இப்படி இளச்சிட்டீங்க? ஷுகர் இருக்கா?’ முப்பது வயசுதான் ஆகுது… அதுக்குள்ளயே தலமுடியெல்லாம் நரச்சி வயசான ஆளு மாதிரி இருக்குறான்.. ஷுகர் ஏதாச்சும் வந்துடுச்சா? சாப்பாடு கொஞ்சமாதான் சாப்பிட்டீங்க? போதுமா? என்ன ஏதாச்சும் டயட் கன்ட்ரோல்ல இருக்கீங்களா? இல்ல, சக்கர நோயா?’ எங்கே சென்றாலும், இப்படி அன்றாட வேலைகள், உணவுப்பழக்கம் போன்றவற்றில் பல சந்தேகங்களைப் புகுத்திப் பாடாய்படுத்தும் சர்க்கரை நோயைக் கண்டும், தனக்கும் வந்து விடுமோ என்று பயத்துடனும்தான் பலர் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயைப் பற்றிய பல தகவல்களை பல்வேறு வகையான ஊடகங்களின் வாயிலாகவும், ஏற்கெனவே நீரிழிவு நோயாளிகளாக இருப்பவர்கள், நண்பர்கள்; மூலமாகவும் தினம் தினம் அனைவரும் கேட்டுக் கொண்டிருப்பதால், முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நீரிழிவு பற்றிய புரிதல் சற்று அதிகமாகவே இருக்கிறது.  ஆனால், கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் திடீர் சிக்கலான கர்ப்பகால நீரிழிவு பற்றியும், அதற்கான உணவுமுறை பற்றியும் முழுமையான தெளிவு பெண்களுக்கு போதுமான அளவில் இல்லை என்றே எண்ணவைக்கிறது அதிகரித்து வரும் தற்போதைய புள்ளிவிவரங்கள். 

இந்தியாவில் வெவ்வேறு இடங்களில், புவியமைப்பைச் சார்ந்து 3.8 % முதல் 21% வரை கர்ப்பகால நீரிழிவு நோய் பரவியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 

சென்னையில் 16.2 சதவிகிதமும், ஈரோட்டில் 18.8 சதவிகிதமாகவும் இருக்கிறது. இந்தியர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கத்தையும் பின்பற்றும் அமெரிக்காவில், வருடத்திற்கு 1,00,000 பெண்கள் கர்ப்பகால நீரிழிவால் அவதிப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 
 

நீரிழிவு நோய் எப்படி வருகிறது?

கணையம் எனப்படுகின்ற உறுப்பானது, பீட்டா செல்களின் மூலம் இன்சுலின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இந்த இன்சுலின் சுரப்பானது, ஒருவரின் உடலிலுள்ள சர்க்கரையை ஆற்றலாக மாற்றி உடலுக்கும் அன்றாட வேலைகளுக்கும் தேவையான சக்தியை உருவாக்கித்தருகிறது. இதனால் சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிகரிப்பது தவிர்க்கப்பட்டு ஒரு சராசரி நிலையில் வைக்கப்படுகிறது. 

இவ்வாறு சுரக்கப்படுகிற இன்சுலின் அளவு குறைவதாலோ அல்லது சுரக்கப்பட்ட இன்சுலின் வீரியம் இல்லாமலும் மற்றும் சரியாக பயன்படுத்த முடியாத ஒரு நிலை உடலுக்கு வருவதாலோ, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் அதிகமாகி விடுகிறது. இதனால், புரதம் மற்றும் கொழுப்பு போன்ற பிற சத்துக்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு பல்வேறு விதமான உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இந்த நிலையே சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோய் அல்லது மதுமேகம் என்றழைக்கப்படுகிறது. 

கர்ப்பகால நீரிழிவு 

கர்ப்பகாலம் என்பது, அதிகளவு இன்சுலினை வெளியிடுவதாகவும் அதே சமயம் எதிர் இன்சுலின் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்ட்ரான், பிளாசன்ட்டாவின் லாக்டோஜன், கார்டிசோன் மற்றும் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் போன்றவைகளின் செயல்பாட்டால், குறைந்த அளவு இன்சுலின் தாங்குதிறன் அல்லது செயல்திறன் கொண்ட நிலையாகவும் இருக்கிறது. கர்ப்பகாலத்தில் நீரிழிவு ஏற்படுவதற்கு, அப்பெண்ணின் முன்கர்ப்பகால ஆரோக்கியம், பணிச்சூழல், உணவுமுறை, சமூக மற்றும் பொருளாதார நிலை ஆகியவையும் காரணங்களாகின்றன. கர்ப்பகால நீரிழிவு நோய் உள்ள பெண்கள், பிரசவத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு சீரடைந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பு நிலைக்குத் திரும்பினாலும், பின்னாளில், இரண்டாம் நிலை (TYPE 2) நீரிழிவுக்கான வாய்ப்புகள் சற்று அதிகம்தான். 

பொதுவாக கர்ப்பிணி பெண்களின் உடல் எடை 10 கிலோ முதல் 12 கிலோ வரையில், குறிப்பாக 20 வாரங்களுக்குப்பிறகு அதிகரிக்கும். இதற்குக் காரணம், குழந்தையின் வளர்ச்சி, உடலின் கொழுப்பு, தாய்ப்பால் சுரப்பிற்கு இயற்கையாகவே பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றைப் பொருத்ததாகும். 

கர்ப்பிணி பெண்களுக்கு, எந்த மாதத்திலும் நீரிழிவு நோய்க்கு வாய்ப்புகள் இருந்தாலும், 7, 8, 9 மாதங்களில் ஏற்படும் நீரிழிவானது, உடல் எடை அதிகமான பெரிய குழந்தைகளை பிரசவிக்கும் நிலை இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக 35 வயதிற்குமேல் நீரிழிவு வரும் வாய்ப்புகள் 2% முதல் 7% வரை அதிகரிக்கிறது. பெண்கள் கருவுற்றிருக்கும்போது ஏற்படும் நீரிழிவு நோயானது, குழந்தை பிறப்பு வரை சில சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

25 வயதிற்கும் குறைவான பெண்களாகவும், எந்தவிதமான ஆபத்து காரணிகளும் (RISK FACTORS) இல்லாமல் இருந்தாலும் கர்ப்பகால நீரிழிவு பரிசோதனை தேவையா என்று கேட்டுக்கொண்டிருக்கும் பலர் இருந்தாலும், கர்ப்பகாலத்தில் செய்யும் முறையான பரிசோதனைகள், நீரிழிவு, அதிக இரத்த அழுத்தம், தைராய்டு நோய்கள், மரபணு சார்ந்த குறைபாடுகள் ஆகியவற்றை முன்கூட்டியே கண்டுபிடித்து, சரியான மருத்துவம் அளித்தால்தான், தாய், சேய் இருவரையும் ஆரோக்கியமாக வைத்திருக்கமுடியும் என்பதுதான் மருத்துவர்களின் கருத்து. 

கர்ப்பகால நீரிழிவு நோயை தொடக்கத்திலேயே கண்டுபிடித்து முறையான சிகிச்சையளிக்கத் தவறினால், அறுவை சிகிச்சை மூலம் பிரசவம், குழந்தைக்கு காயங்கள் ஏற்படுதல், குழந்தை இறந்து பிறத்தல் போன்றவைகள் நிகழும் அபாயம் இருக்கிறது. 

கர்ப்பிணிப் பெண்கள், தனக்கு நீரிழிவு வந்துவிட்டதை எண்ணி கவலைப்படுவதால், மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டு, அவர்களின் ஆரோக்கியமும், உள்ளிருக்கும் குழந்தையின் ஆரோக்கியமும் சீர்குலைகிறது. மாறாக, நீரிழிவு வந்துவிட்டபின், சரியான உணவுமுறை, அவற்றை எவ்வாறு பின்பற்றுவது என்பதுபற்றி உணவியல் வல்லுநர்களிடம் ஆலோசனைகளைப் பெற்று அதன்படி செயல்படுவதுதான் நல்லது. 

கர்ப்பகால நீரிழிவு உடைய பெண்கள் பின்பற்ற வேண்டிய ஒருநாளைக்குரிய உணவுப்பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி உணவுப்பட்டியலை அடிப்படையாக வைத்துக்கொண்டு தங்களது அன்றாட உணவுப்பபட்டியலை சற்றே மாற்றிக்கொள்ளலாம். 

கர்ப்பகால நீரிழிவுள்ள பெண்களுக்கான ஒருநாள் மாதிரி உணவுப்பட்டியல்
காலை 6.00 மணி – பலதானிய சத்துமாவு கஞ்சி (1 டம்ளர் 150மி.லி)
காலை 8.00 மணி – கேழ்வரகு தோசை (அ) சப்பாத்தி (3) புதினா சட்னி (2 தேக்கரண்டி )
முற்பகல் 11.00 மணி – காய்கறி கலந்த சூப்(1 கப்)
நண்பகல் 1.00 மணி – சாதம் (1 கப்) பொண்ணாங் 
கன்னி கீரைச் சாம்பார் 
(1 கப்) கொத்தவரங்காய் 
பொரியல் (1 கப்), பூண்டு 
ரசம், தயிர் (50 மி.லி) 
மாலை 4.00 மணி – சர்க்கரை இல்லாத பால் 
(150 மி.லி) கொண்டை 
கடலை சுண்டல் (1 கப்)
இரவு 8.00 மணி – இட்லி (அ) தோசை (அ) 
சோள உப்புமா, வெங்காய 
சட்னி (2 தேக்கரண்டி)
இரவு 10.00 மணி – சர்க்கரை இல்லாத பால்; 
(150 மி.லி) கொய்யாப்
பழம் (1)
 

அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியவைகள்:
கீரைகள், காய்கள் (குறிப்பாக பந்தல் வகை காய்கள்), வெந்தயம், சீரகம், சோம்பு, மஞ்சள், சுக்கு, திப்பிலி ஆகியவை அதிகமான நார்ச்சத்து உள்ளவை. 
 

குறைந்த அளவில் எடுத்துக் கொள்ள வேண்டியவைகள்

தானியங்கள், பருப்புகள், கிழங்கு வகைகள், பால் பொருட்கள், பழங்கள், இறைச்சி உணவுகள், முட்டை.
 

தவிர்க்க வேண்டிய உணவுகள்
சர்க்கரை, மைதா, தேன், பழ ஜாம், ஜெல்லி, கேக் வகைகள், செயற்கை பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள்
 

– ப. வண்டார்குழலி இராஜசேகர், உணவியல் நிபுணர், 
இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம், புதுச்சேரி.

<!–

–>