காஃபியில் சிக்கரி கலக்கறாங்களே அது ஏன்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

coffee

இன்று தமிழர்களின் மாதாந்திர மளிகை லிஸ்டில் தவறாது இடம்பிடிக்கக் கூடிய முக்கியமான பொருட்களின் லிஸ்டில் காபிப்பொடிக்கு தனித்த இடமுண்டு. தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் நீங்கள் எங்கு பயணிப்பதாக இருந்தாலும் நிச்சயம் எல்லா ஊர்களிலும் காஃபிக் கடைகள் உண்டு. ஆனால் இந்தக் காபி என்கிற வஸ்து நமது இல்லங்களில் விடாப்பிடியாகப் புகுந்து கொண்டது கடந்த 100 ஆண்டுகளுக்குள்ளாகத்தான். அதற்கு முன்பெல்லாம் கருப்பட்டித் தண்ணீரும், நீராகாரமும் அருந்தியவர்கள் நாம்! இந்தியாவில் காஃபி அறிமுகமான ஆரம்ப காலத்தில் வட இந்தியர்கள் ‘சாய்’ என்று தேயிலைப் பக்கம் ஒதுங்கி விட  தென்னிந்தியர்கள் கூஜா, கூஜாவாய் காஃபி அருந்தத் தொடங்கினார்கள். இன்றும் அருந்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காஃபி பித்து எப்படி வந்தது என்று தெரியும் முன்பே நொடியில் அதற்கு அடிமையாகி நூற்றாண்டு தாண்டி இன்று வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை ‘காஃபி சாப்பிடுங்க’ என்று கேட்க மறந்தோமெனில் அது மிகப்பெரிய கலாச்சாரப் பண்பாட்டுக் குற்றமாகி விருந்தோம்பலின் மிக மோசமான அம்சமெனக் கூக்குரலிடும் அளவுக்கு காபி பைத்தியம் தலைக்கேறி விட்டது நமக்கு.

காஃபி அருந்துவது என்றால் காஃபிக் கொட்டைகளை மட்டுமே அரைத்துப் பொடியாக்கி பாலில் கலந்தோ அல்லது தனித்து டிகாக்‌ஷன் எடுத்து வெந்நீரில் கலந்தோ அருந்துவது என்று பொருளில்லை. காஃபியுடன் ஒருகுறிப்பிட்ட அளவில் சிக்கரி கலந்து அருந்துவதே இப்போது நாம் அருந்திக் கொண்டிருக்கும் காஃபியின் ஃபார்முலா. தூய காஃபிப்பொடியில் எத்தனை சதவிகிதம் சிக்கரி கலக்கிறோம் என்பதில் இருக்கிறது காஃபியின் மகத்துவம். சிலருக்குச் சிக்கரி சற்றுத் தூக்கலாக இருந்தால் காஃபி அருந்திய திருப்தி கிடைக்கும். சிக்கரி பொதுவாக காஃபியில் திடமூட்டப் பயன்படுகிறது. சிலருக்கு காஃபியில் திடமெல்லாம் தேவையில்லை மூக்கைச் சுண்டியிழுக்கும் மணம் மட்டுமே போதுமென நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு காஃபியில் சிக்கரியின் சதவிகிதம் குறைவாக இருக்க வேண்டும்.

பொதுவாக நம்மூரில் தாராளமாகக் கிடைக்கும் நரசூஸ், ப்ரூ, நெஸ்கஃபே காஃபிப்பொடி சாஸேக்களில் அதில் காஃபி மற்றும் சிக்கரியின் சதவிகிதம் எத்தனை என குறிப்பிட்டிருப்பார்கள்.

சமையல் காண்ட்ராக்டர்கள், கேன்ட்டீன்கள், மெஸ்கள் உள்ளிட்ட இடங்களில் சப்ளை செய்வதற்கென ஸ்பெஷல் காபிப்பொடி சாஸேக்கள் மார்க்கெட்டில் உண்டு. அந்தக் காஃபிப்பொடி வகையறாக்களில் 60% காஃபிப்பொடியும் 40% சிக்கரியும் கலக்கப்பட்டிருக்கும். இவை எல்லா வகையான காஃபிப்பொடி பிராண்டுகளிலும் தற்சமயம் கிடைக்கின்றன.

வீடு மற்றும் தனிநபர் உபயோகங்களுக்கென தயாராகும் நெஸ்கஃபே, ப்ரூ, நரசூஸ் காஃபிப்பொடிகளில் காஃபி, சிக்கரிக் கலவை 70க்கு 30 எனும் விகிதத்தில் இருக்கும்.

இவையெல்லாம் இன்ஸ்டண்ட் காஃபிப்பொடிகளுக்குப் பொருந்தும்.

நீங்கள் ஃபில்ட்டர் காஃபிப் பிரியர்கள் என்றால்… உங்களுக்கு சிக்கரியே தேவையில்லை என தூய, தரமான காப்பிக் கொட்டைகளை வாங்கி சிக்கரியே சேர்க்காமலும் அரைத்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இது 100% தூய காஃபி. ஆனால் இப்படி காஃபி அருந்தினால் சிலருக்கு காஃபியின் அதீத மணத்தில் தலைச்சுற்றல் வரவும் வாய்ப்புகள் உண்டு.

அதனால் 80% தூயகாப்பிப் பொடியும் 20% சிக்கரியும் கலந்து காபிபொடி தயாரித்து வைத்துக் கொண்டு அதிலிருந்து டிகாக்‌ஷன் எடுத்து திடமும் மணமுமான காஃபியைச் சுவைக்கலாம்.
 

<!–

–>