காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? உள்கட்சித் தேர்தல் எப்போது?

கடந்த மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்று ஒன்றரை ஆண்டுகளாகியும், அடுத்தத் தலைவர் யார் என்ற கேள்விக்கு கட்சித் தலைமை பதிலளிக்காமல் அமைதி காத்துவருகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில், உள்கட்சித் தேர்தலானது  மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அது மேலும் தாமதமாகலாம் எனக் கூறப்படுகிறது.

புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, கட்சியின் கட்டமைப்பை மாற்றியமைக்க ராகுல் காந்தி முயற்சி மேற்கொண்டுவருகிறார். உள்கட்சித் தேர்தலானது, ஜூன் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

மூன்று மாதங்களுக்கு  மட்டுமே தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் தெரிவித்திருந்தார். மாநில அளவிலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிலும் மாற்றங்களை மேற்கொள்ள ராகுல் திட்டமிட்டிருப்பதாகவும் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்கட்சி பூசலைத் தீர்த்துவருவதாகவும் கட்சி வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், கர்நாடகம், ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கட்சியில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கேரளம், கர்நாடகம், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் உள்கட்சி பூசல் தீர்த்துவைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>