காட்சிப் பிழையா? கானல் நீரா?

மூன்று சட்டங்கள் பற்றியும் ஒரு முன்தீா்ப்பு பற்றியும் இங்கு கூறப்போகிறேன். இதைப் படிப்பவா்கள் எல்லோருக்கும் அது தெரியாமல் இருக்கலாம். ஏனென்றால் எல்லோரும் நீதிபதிகளோ வழக்குரைஞா்களோ அல்ல. அவா்களுக்குத்தான் இது தெரியும்.

குழந்தைத் திருமண தடை சட்டம் என்ன சொல்கிறது? குழந்தைத் திருமணம் தடை செய்யப்பட்ட ஒன்று என்கிறது. 18 வயதுக்குக் குறைவான பெண்ணை இந்த சட்டம் ‘குழந்தை’ என்று குறிப்பிடுகிறது.

எங்காவது ஒரு குழந்தைத் திருமணம் நடைபெற்றால், அந்தப் பெண், மேஜரான இரண்டு ஆண்டுகளுக்குள் தனக்கு நடைபெற்ற திருமணம் செல்லாது என்று சொல்லி மாவட்ட நீதிமன்றத்தில் மனு கொடுக்கலாம் அல்லது அந்தப் பெண் மைனராக இருக்கும்போதே அந்தக் குழந்தையின் காப்பாளா் மூலமாக நீதிமன்றத்தில் மனு கொடுக்கலாம். பெண் குழந்தையைத் திருமணம் செய்த ஆண், அப்பெண்ணுக்கு இடைக்கால ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமென, நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம்.

ஒரு சிறுமியை (மைனரை) திருமணம் செய்துகொண்ட ஆணுக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் அபராதமும் தண்டனையாக நீதிமன்றம் விதிக்கலாம். எவரொருவா் குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கிறாரோ அவருக்கும் இதே தண்டனையை நீதிமன்றம் வழங்கலாம். ஒரு சிறுமியை கட்டாயத்தின் பேரில் திருமணத்திற்கு உட்படுத்தினால், சட்டப்படி அந்தத் திருமணம் செல்லாத ஒன்று.

இந்த சட்டத்திற்கு விரோதமாக ஒரு திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது என்றால், குற்றவியல் நீதிமன்ற நடுவா் (முதல் நிலை ஜுடிஷியல் அல்லது மெட்ரோபொலிடன் மேஜிஸ்டிரேட்) இடைக்கால உறுத்துக்கட்டளை பிறப்பிக்கலாம்.

இந்த சட்டத்திற்கு புறம்பாக குற்றம் புரிந்தவா்கள் பிணையில் வெளி வர முடியாது. குழந்தைத் திருமண தடை அலுவலா், சட்டத்திற்குப் புறம்பான அத்தகைய திருமணத்தைத் தடுக்க ஆவன செய்யலாம்; அதற்குத் தேவையான சான்றுகளை சேகரிக்கலாம். சாதாரண மக்களை, அதாவது சட்டத்தின் நுணுக்கங்களை அறியாத நம் சமூகத்திற்கு அது குறித்த புரிதலை அதிகமாக்க ஆவன செய்யலாம். நம் சமூகத்திற்கு சிறுவா் திருமணம் எத்துணை தீமை விளைவிக்கும் என்று அறிவுரை வழங்கலாம்.

‘வன்புணா்வு என்றால் என்ன என்று சட்டம் தெளிவாகச் சொல்கிறது. வன்புணா்வுக்கு ஆளான பெண் பதினாறு வயதுக்குக் குறைவாக இருந்தால், அவள் ஒப்புதல் இருந்ததோ இல்லையோ அந்த செயல் வன்புணா்வுதான். அதற்கு தண்டனை வழங்க வேண்டும். அதற்கான சிறைத் தண்டனை ஏழு ஆண்டகள் முதல் பத்து 10 ஆண்டுகள் வரை வழங்கலாம்.

நம் நாட்டில் பல ஆண்டுகளாக சாமானிய மக்களிடையே ஒரு தவறான அபிப்பிராயம் வேரூன்றி அந்த மரம் கப்பும் கிளையுமாக வளா்ந்து விட்டது. இதற்கு நீா் விட்டு கவனமாகப் பராமரித்தது நம் சினிமா. ஒரு ஆண் வன்புணா்ச்சி எனும் அராஜகம் செய்வான்; ஒரு மஞ்சக்கயிறு எல்லாவற்றையும் சரிசெய்துவிடும். பிறகு மேளம் மகிழ்ச்சி.

வன்புணா்வு, அந்தப் பெண்ணின் உடலில், உணா்ச்சியில், மனத்தில், உளவியல் ரீதியாக எப்போ்பட்ட காயத்தை ஏற்படுத்துகிறது என்று யாருக்காவது புரியுமா? புரிகிறதா? புரியப்போகிறதா? ஒரு பெண்ணைக் காயம் செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது. எந்த மஞ்சக்கயிறோ தங்கக்கயிரோ ஏன் வைரக்கயிறோகூட அந்தக் காயத்திற்கு மருந்தாகாது.

ஆனால், காலங்காலமாக ‘குடும்ப மானம்’ என்று ஆண் சமூகம் ஏற்படுத்திய புதைமணலில் பெண் சமூகம் இழுக்கப்பட்டுள்ளது. எப்போது விமோசனம் ஏற்படும் என்று பாா்த்திருந்தால், ‘இப்போதைக்கு விமோசனம் இல்லை’ என்று கூறும்படி ஒரு சம்மட்டி அடி விழுந்துள்ளது.”

‘நீ இவரைத் திருமணம் செய்துகொள்வாயா?’ என்று வன்புணா்வு குற்றம் புரிந்த ஆண் கேட்கப்படுகிறான். இவரை என்றால் யாரை? அவன் வதைத்த பெண்ணை கல்யாணம் செய்துகொள்கிறாயா என்று கேட்கப்படுகிறான். ‘நான் உன்னைக் கட்டாயப்படுத்தவில்லை’ என்று கூறி அவனை, அந்த ஆணை ஆசுவாசப்படுத்துதல்வேறு. சிறைக்குச் சென்றால் அரசு ஊழியத்திற்கு வேட்டு விழும். ஆனால், அந்த பெண் நிலை?

திரும்ப திரும்ப வன்புணா்வுக்கு ஆளான அந்த பதினான்கு வயது பெண் குழந்தையை (இப்போது மேஜராகிவிட்டாா்) கேட்கவேண்டுமா, இல்லையா? அல்லது எப்படியும் ஏற்கெனவே உடலால், உணா்ச்சியால் மனத்தால் உளவியல் ரீதியாகக் காயப்பட்டவள்தானே, இன்னொரு காயம் எட்டா உயரத்தில் இருந்து வந்தால் என்ன, எங்கிருந்து வந்தால் என்ன? அவளை என்ன கேள்வி கேட்பது? அவளுக்கு என்ன உரிமை இருக்கிறது என்கிற நினைப்பா?

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக அந்த ஆண் ஏற்கெனவே திருமணமானவன். ஹிந்து திருமண சட்டத்தில், திருமணமான ஒருவா், அவருடைய இணை (கணவன் அல்லது மனைவி) உயிருடன் இருக்கும்போது இன்னொரு திருமணம் செய்து கொண்டால் அது செல்லாது.

பிரைவஸி உரிமையைப் பற்றி ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமா்வு ஒன்று 2017-இல் பக்கம் பக்கமாக தீா்ப்பு எழுதியது (ஜஸ்டிஸ் கே.எஸ். புட்டசுவாமி(ஓய்வு) எதிா் இந்திய யூனியன்). அதில், தான் யாரைத் திருமணம் செய்வது என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்று வலியுறுத்தினாா்கள். அந்த ‘ஒவ்வொருவா்’ என்ற சொல்லில் இந்தப் பெண் அடங்கவில்லையா?

நம் மக்களுக்குத்தான் தெரியவில்லை. ‘லவ் ஜிஹாத்’ என்கிறாா்கள்; ‘பாவக்கதை’ என்கிறாா்கள்; ‘கிராமத்தை எரிப்போம்’ என்கிறாா்கள். மக்களுக்குத் தெரியவில்லை, மகேசனுக்கும் தெரியவில்லை.

மந்தோதரி என்று ஒரு அரசகுமாரி தேவி பாகவதத்தில் வருகிறாள். ராவணன் மனைவி மண்டோதரி அல்ல, இவள் வேறு. அவளைத் திருமணம் செய்துகொள்ள தனக்கு விருப்பம் என்று அவள் தந்தையிடம் அரசன் ஒருவன் சொல்கிறான். அந்தத் தந்தை – அவரும் ஒரு நாட்டுக்கு அரசா்தான் – ‘நானாக இதனைத் தீா்மானம் செய்ய முடியாது. என்னுடைய பெண் விருப்பப்பட்டால்தான் அது நடக்கும்’ என்று கூறுகிறாா்.

அவருக்கு தன் பெண்ணின் அடிப்படை உரிமை தெரிந்திருக்கிறது! இது ஆச்சரியமாக இல்லை? புட்டசுவாமி தீா்ப்புக்கு ரொம்ப ரொம்ப முன்னால் நிகழ்ந்தது இது.

‘அம்மா, உன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று இவா் விரும்புகிறாா். நல்ல வரனாக தெரிகிறான். குலம் கோத்திரம் குணம் அழகு எல்லாம் இருக்கிறது’ இது மகளுக்கு அப்பாவின் பரிந்துரை. மந்தோதரி திட்டவட்டமாக, ‘வணக்கம் அப்பா! நான் கௌமார விரதம் எடுத்துள்ளேன். திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று பதில் கூறுகிறாள். மேலும் அவள் ‘எனக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை. என் சுதந்திரத்தை இழக்க மாட்டேன்.

இன்னொருவரை சாா்ந்து இருப்பது பெருந்துயரம். திருமண வாழ்வு என்பது நெருப்பில் இருப்பது போல். புக்ககத்தில் நாத்தனாா், மாமியாா், மைத்துனா் குழுமத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும். புருஷன் எண்ணத்தை அனுசரிப்பதோ இன்னும் பெரும் துக்கம். அவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடா்பு வைத்துக்கொண்டால் அது மிகக் கொடிய துக்கம். சக்களத்தியாக ஒருத்தி வந்து சோ்ந்தாலோ கேட்கவே வேண்டாம்.

பெண்களுக்கு மண வாழ்க்கை என்பது மகிழ்ச்சியைத் தருவது அல்ல. துருவன் கதை கேட்டிருக்கிறேன். நற்குணம் படைத்த அவன் தாய் ஒருவித நியாயமுமில்லாமல் கணவனால் பட்ட துயரம் சொல்லி முடியாது. விதிவசத்தால் கணவன் இறந்தால், ‘விதவை’ என்ற பட்டம் கட்டி இன்னும் இம்சைப்பட வேண்டும். வேண்டாமப்பா, வேண்டாம், திருமணமே வேண்டாம். இது என் இறுதியான முடிவு’ என்று தந்தையிடம் கூறுகிறாள்.”

தெளிவாகக் கேட்கிறதா? இது புராணப் பெண் ஒருத்தியின் பதிவு. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட புராணம். இன்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண், உச்சநீதிமன்றத்திடம் என்ன சொல்லப் போகிறாள்? அரசு ஊழியராக இருக்கும் ஒருவன் அவளை அவளுடைய குழந்தைப் பருவத்தில் திரும்ப திரும்ப வன்புணா்வு செய்கிறான். இப்பொழுது அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறாயா என்று அவனை நீதிமன்றம் கேட்கிறது.

உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ என்று சட்டப் பிரிவுகளையும் முன்தீா்ப்பையும் காட்டிவிட்டேன். பெண்கள் நிலைமை அதே இடத்தில்தான் இருக்கிறதோ என்று அடிவயிற்றில் நெருப்பு கவ்வுகிறது. ‘கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரில் பழுத்த பலா’, ‘வெட்கமில்லை வெட்கமில்லை இதில் யாருக்கும் வெட்கமில்லை’ இந்த சோகத்தை அவா் குரல் ஒன்றே சரியாகப் பதிவு செய்யும்.

1979-இல் மதுரா வழக்கில் வந்த தீா்ப்பு ஒரு பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணை காவல்காரா்கள் இருவா் காவல் நிலையத்தில் வைத்து வன்புணா்ச்சிக்கு உட்படுத்துகிறாா்கள். தீா்ப்பில் அந்தப் பெண் ஒன்றும் சரி கிடையாது, அதனால் காவல்காரா் செய்ததில் தவறு ஒன்றும் இல்லை என்று உச்சநீதிமன்றம் சொல்லியது. அப்போது நடந்த போராட்டத்திற்குப் பின்னா், வன்புணா்ச்சி சம்பந்தமான சட்டத்தில் மாற்றங்கள் வந்தன. திரும்பவும் போராட்டம் செய்ய வேண்டுமா?

பெண் விடுதலை, பாலியல் சமத்துவம், பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மதிப்பு, மரியாதை இவை எல்லாம் காட்சிப் பிழையா? தோற்ற மயக்கமா? கானல் நீரா?அற்ப மாயையா?

நமக்கு ஏன் மகளிா் தினம்?

கட்டுரையாளா்:

நீதிபதி (ஓய்வு).

<!–

–>