காதலர் தினம் தேவையா?

‘நேற்று இல்லாத மாற்றம் என்னது? காற்று என் காதில் ஏதோ சொன்னது….இதுதான் காதல் என்பதா?’ இந்தப் பாடல் வரிகள் புதிய முகம் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். காதல் ஒருவரை புத்தம் புதிய உயிராக மாற்றிவிடும் அற்புத சக்தி கொண்டது. மானுடத்தின் இயக்க சக்தி, தூய்மையான காதல், மெய்க் காதல், ஓருயிர் ஈருடல் என்றெல்லாம் சொல்கிறார்களே உண்மையில் காதல் என்றால் என்ன? 

காதல் என்பது எப்போதும் மகிழ்ச்சியான ஒன்றல்ல. அது நீங்களே உங்களுக்குள் அனுமதித்துவிட்ட அற்புதமானதொரு வலி. காதலில் சிக்கிவிட்டால் இனி நீங்கள் வேறு உங்கள் காதலர் வேறல்ல. உங்கள் ஈகோ உங்கள் சுயம், எல்லாம் உதிர்ந்து போக வேண்டும். நீங்கள் நேசிப்பவருக்காக சிறிதளவேனும் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் காதல் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

உங்கள் பெயர் ரமா என்று வைத்துக் கொண்டால் இதுவரை இருந்த ரமா வேறு, காதலுக்குப் பின்னான ரமா நிச்சயம் வேறுதான். காரணம் ஆழமான காதலுணர்வு உங்களுக்குள் வேதியல் மாற்றங்களை மட்டுமல்லாமல் உங்களை உங்களுக்கே உணர்த்தும் ஒரு கடவுளாகவே விளங்கக் கூடியது. காதலை மட்டுமே தேடினால் காதல் ஜெயிக்கும். ஆனால் கடவுளையும் சேர்த்துத் தேடினால் நிச்சயம் அவ்வுணர்வு உங்களை இருகூறாகக் கிழித்து தன்னிலை உணர்த்திவிடும்.  

காதலில் நீங்கள் வசப்பட்டிருக்கும் போது உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் நீங்கள் ரசிப்பீர்கள். ஆழமாக வாழ்வீர்கள். எல்லா வேலைகளும் பளிச்சென்று செய்து முடிப்பீர்கள். உங்களிடம் நேர்மறை எண்ணங்கள் மேலோங்கியிருக்கும். காதலில் இருக்கும்போது, நீங்கள் செய்யும் ஒவ்வொன்றும் அழகுதான்.  

ஆனால் அறிவியல் காதலை ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பு என்கிறது.   உடலில் ஹார்மோன்கள் நிகழ்த்தும் ரசாயன மாற்றங்களுக்கு வேறு பெயர்கள் இல்லாததால் காதல் என்று அழகான ஜிகினா வார்த்தை கூறுகிறோம் என்று அப்பட்டமாக கூறுகிரது. இதை முற்றிலும் சரி என்றும் கூறமுடியாது, போலவே தவறு என்றும் ஒதுக்கிவிட முடியாது.  

காதல் என்பது நமக்குள் நிகழும் தீவிரமான ஒரு உணர்வு. அது உடல்நிலையிலும் மனநிலையிலும் ஏற்படுகிற ஆழமான ஈடுபாடு. இந்த தீவிர ஈடுபாட்டால் மனது உற்சாகமடைகிறது. இதனால் தான் காதலிக்கும் போது பரபரவென்று மனமும் உடலும் கொதிநிலையில் இருக்கும். ஆதலினால் காதல் செய்வீர் என பாரதி கூறியது இந்த மனநிலை வாய்க்கப் பெற்றால் உங்கள் சந்திதியை பெறுக்கிக் கொள்ள முடிவதுடன் நீங்கள் செய்யும் எல்லா செயல்களையும் செம்மையாக செய்து முடிக்க முடியும். 

அத்தீவிர உணர்வால் நீங்கள் செய்கிற செயல்கள் எல்லாவற்றிலும் சாதனையாக்க முடியும்.  எதை ஈடுபாட்டுடன் செய்தாலும் அது காதல்தான். வாழ்விலே வரும் ஒவ்வொரு நாளையும் நீங்கள் காதலோடு கொண்டாடினால், அந்தக் காதலர் தின கொண்டாட்டங்கள் ஏற்கக் கூடியவைதான். 

பெரும்பாலானவர்கள் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் மட்டுமே ஈடுபாடு வரமுடியும் என்ற சூழ்நிலை அவர்களது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ளது. எனவே தான், காதல் என்றால் ஆண், பெண் சம்பந்தப்பட்டது என்ற தவறான முடிவு சமூகத்தில் உருவாகிவிட்டது.  அதனால் தான் அது அதிகளவில் கொச்சைப்படுத்தப்படுகிறது. காதலை விரும்பியபடியே இன்னொரு பக்கம் அதை எதிர்த்தும் நிற்கிறது. காதலை பாவம் என்றும் கலாசாரத்துக்கு எதிரானது என்றும் சில பழமைவாதிகள் இன்றளவும் நினைத்து எதிர்த்து வருகிறார்கள். குறிப்பாக நம் நாட்டில் காதல் பற்றிய புரிதலோ, விழிப்புணர்வோ இல்லை. அதனால் தான் ஆணவக் கொலைகளை ஈவு இரக்கமின்றி நடத்திக் கொண்டிருக்கிறது. ஒரு புறம் காதலை தவறாக புரிந்து கொண்ட காதலர்களும், இன்னொரு புறம் அதை அங்கீகரிக்காத சமூகமும் என காதல் இருமுனைத் தாக்குதல்களுக்கு உள்ளாகிவிட்டது. காதல் இயல்பானது, மிக இயற்கையானது. அது ஆதி உணர்வு. பருவ வயதில் தோன்றும் காதல், திருமணம் போன்றவை ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்றிமையாதது.

காதல் என்பதன் உண்மை அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, வாழ்விலே வரும் ஒவ்வொரு நாளையும் அனைவரும் காதலோடு கொண்டாடினால், காதலர் தின கொண்டாட்டங்கள் நிச்சயம் தேவைதான். நம்மைத் நாம் தேடிக் கண்டடைய ஒருவகையில் காதல் உதவி செய்கிறது அல்லவா?

‘வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம், வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம். காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா?’

<!–

–>