காஸ்ட்லி நகைகளைப் பராமரிப்பது எப்படி? ஈஸி டிப்ஸ்!

சிலருக்கு நகைகள் வாங்கிக் குவிப்பதென்றால் கொள்ளை ஆசை. ஆனால், வாங்கிக் குவிக்கத்தான் தெரியுமே தவிர, அவற்றை வாங்கிய அன்று இருந்ததைப் போலவே எப்படி நறுவிசாகப் பராமரிப்பது என்பது தெரியாது. ஏதோ பணம் இருக்கிறது நகை வாங்கினோம். நகை தான் சொந்தமாகி விட்டதே, இனியென்ன என்ற ரீதியில் நடந்து கொள்வார்கள். அத்தகையோரின் நகைகளை அடுத்தடுத்து தொடர்ந்து திருமணங்கள், திருவிழாக்கள் என விசேஷ நாட்களில் மீண்டும், மீண்டும் அவர்கள் அணியும் போது கவனித்துப் பாருங்கள். நகைகள் சில வருடங்களிலேயே பொலிவிழந்து, சிறு சிறு டேமேஜ்களுடன் நசுங்கிப் போய் காட்சியளிக்கும்.

லைட் வெயிட் நகையென்றால் தானே நசுங்கும் தொல்லையெல்லாம், நாங்களெல்லாம் கெட்டியான ஆன்ட்டிக் நகைப் ப்ரியர்கள் என்று யாரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. கெட்டியான நகைகளைப் பராமரிப்பது இன்னும் கஷ்டம். வைரம், முத்து, பவளம், என காஸ்ட்லி கற்கள் பதித்த அல்லது கற்களே இல்லாமல் ப்ளைன் தங்கத்தில் நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆன்ட்டிக் நகைகளில் வெகு சீக்கிரமாகவே அழுக்கு சேரத் தொடங்கி நாளடைவில் அவற்றை நாம் சரிவர சுத்தம் செய்ய மறந்தால் நகையின் பளீர் பொன்னிறம் மங்கி பித்தளை போலத் தோன்றிவிடக்கூடிய ஆபத்துகள் அவற்றில் அதிகமுண்டு.

எனவே விசேஷ நாட்களில் நகை அணிபவர்கள் வீட்டுக்கு வந்ததும் அந்த நகைகளை ஏனோ தானோ என்று கழற்றி அப்படியே சுருட்டி மடக்கி நகைப்பெட்டியில் புதைக்கப் பழகாதீர்கள். அது நகைகளுக்கு நல்லதல்ல. நகைகளை அணிந்து சென்று விட்டு கழற்றி வைக்கும் போது அவற்றைப் பாதுகாக்க தரமான சாட்டின் துணியால் வடிவமைக்கப்பட்ட நகைப்பெட்டிகளையே பயன்படுத்துங்கள். ஒவ்வொருமுறை நகைகளை அணிந்து விட்டு கழற்றும் போதும் வெதுவெதுப்பான நீரில், மைல்டு ஷாம்பூ அல்லது திரவ டிஷ்வாஷ் சோப் கலந்து ஊறவைத்து பிறகு மென்மையான டோத் பிரஸ் அல்லது ஸ்பாஞ்ச் கொண்டு துடைத்துக் கழுவி உலற வைத்து நகைப்பெட்டியில் எடுத்து வையுங்கள். இப்படியெல்லாம் செய்தால் நீங்கள் நகைகளைக் காதலிப்பதைப் போல்வே உங்கள் நகைகளுக்கும் உங்கள் மீது காதல் பெருகி எப்போது எடுத்து அணிந்தாலும் பளீரெனப் பொலிவாக ஜொலிக்கும். என்கிறார் பிரபல நகை வடிவமைப்பாளரான ராதிகா ஜெயின். 

நகைகளைப் பராமரிக்க ராதிகா ஜெயின் அளித்துள்ள சில உபயோகமான டிப்ஸ்கள்…

நகைகளை சுத்தமாக வைத்திருங்கள்…

நகைகளை அணிந்து விட்டு கழற்றி வைக்கும் போது அப்படியே வியர்வை, தூசு, எண்ணெய்ப்பிசுக்கு கலந்த கோலத்தில் வைக்காமல், ஒவ்வொரு முறை நகை அணிந்து கழற்றும் போதும் மைல்டான ஷாம்பூ அல்லது டிஷ்வாஷ் பார் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைத்து மென்மையான பிரஸ்ஸால் தேய்த்துக் கழுவித் துடைத்து உலர வைத்து நகைப்பெட்டியில் எடுத்து வைக்க மறக்கக் கூடாது. நகைகளைச் சுத்தமாகப் பராமரிக்க சோம்பலாக இருந்தால் பிறகு உங்கள் நகைகள் பொலிவிழந்து களை மாறி பழைய நகை போலக் காட்சியளிக்கத் தொடங்கி விடும் என்பதை ஒவ்வொரு முறையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நகைகளை முறையாகப் பத்திரப்படுத்த வேண்டும்…

நகைகளை நகைப்பெட்டியில் பராமரிக்கிறீர்கள் எனில், உங்களது நகைப்பெட்டி கடினமானதாக இல்லாமல் சாட்டின் துணியால் வடிவமைக்கப்பட்டு அதனுள் வளையல்கள், மோதிரங்கள், நெக்லஸ்கள், கற்கள் பதித்த நகைகளை ஸ்டோர் செய்வதற்கான தனித்தனியான ஸ்டோரேஜ் செக்‌ஷன்கள் இருக்கின்றனவா எனப் பார்த்து வாங்கி அத்தகைய நகைப்பெட்டிகளையே பயன்படுத்துங்கள். ரெகுலர் மாடல் நகைப்பெட்டிகளைப் பயன்படுத்தினீர்கள்  எனில் அவற்றில் லாங்க் செயின்கள், கனமான ஆன்ட்டிக் நகைகள், மெல்லிய நெக்லஸ்கள், மோதிரங்கள், சிறு சிறு ஃபேன்ஸி தோடுகள் முதல் கனமான ஜிமிக்கிகள் வரை தனித்தனியே ஸ்டோர் செய்யும் வசதி இருக்காது. பிறகு பழங்காலத்தில் சுருக்குப் பையில் அனைத்து வகையான நகைகளையும் சேர்த்துப் போட்டு கட்டி இரும்பு பீரோவில் பூட்டி வைப்பதைப் போலாகி விடும். எனவே நீங்கள் பயன்படுத்தும் அனைத்து விதமான நகைகளையும் சேமித்து வைக்கத் தகுந்த வகையில் பொருத்தமான தரமான துணியாலான நகைப்பெட்டிகளை வாங்கிப் பயன்படுத்தில் சுணக்கம் கூடாது.

குளிக்கச் செல்லும் முன் அனைத்து நகைகளையும் நீக்க வேண்டும்…

சிலர் கழுத்து நிறைய நகைகளை அணிந்து கொண்டு அப்படியே குளிக்கச் செல்வார்கள். இது தவறு. கை நிறைய தங்க வளையல்கள் அணிந்து கொண்டு துணிகளை சோப்பு போட்டு தேய்த்துக் கொண்டிருப்பார்கள் இதுவும் தவறு. குளிக்கச் செல்லும் முன் உடலில் அணிந்திருக்கும் அத்தனை நகைகளையும் கழற்றிப் பாதுகாப்பாக வைத்து விட்டுப் பிறகு தான் குளிக்கத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் சோப் பிசிறுகள் நகைகளில் ஒட்டிக் கொள்ளும், மோதிரம், தோடு, ஜிமிக்கிகளின் இடுக்கில் சோப் அழுக்கு படிந்து நாளடைவில் நகையைப் பொலிவிழக்கச் செய்யும். நீச்சல் குளம், கடற்கரைக் குளியலின் போது கண்டிப்பாக நகைகளைக் கழற்றி விட்டு குளிக்கச் செல்வது நல்லது. ஏனெனில் அத்தகைய இடங்களில் பொதுவாக காற்றில் ஈரப்பதத்துடன் உவர் தன்மையும் அதிகமிருக்கும். உப்பின் அரிக்கும் தன்மை நகைகளில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

கொரகொரப்பான பொருட்களைக் கொண்டு நகைகளை கிளீன் செய்யாதீர்கள்…

நகைகளைச் சுத்தம் செய்ய பேக்கிங் சோடா, டூத் பேஸ்ட் அவ்வளவு ஏன் சிலர் பாத்திரம் துலக்கும் கடினமான ஸ்டீல் ஸ்கிரப்பர்களைக் கூடத் துணிந்து பயன்படுத்தி விடுகிறார்கள். மோதிரங்களில் உள்ள அழுக்கை நீக்க ஊக்கு, கூர்மையான ஊடி போன்ற பொருட்களையும் சிலர் பயன்படுத்துகிறார்கள். இது அறியாமை. நகைகளைத் தேய்த்துக் கழுவ மென்மையான பிரஸ்கள் தான் எப்போதும் ஏற்றவை. கடினமான பொருட்களால் தேய்த்துக் கழுவும் போது நகைகளில் கீறல் விழ 100 சதம் வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமல்ல விலையுயர்ந்த கற்கள் பதித்த நகைகள் எனில் கற்கள் நிச்சயம் சேதமடையும், முத்து, பவளங்கள் உடைந்து நொறுங்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே நகைகளைச் சுத்தம் செய்யும் போது இதை மறக்காதீர்கள்.

வாசனைத் திரவியங்களை நகைகளின் மேல் ஸ்ப்ரே செய்யாதீர்கள்…

சிலர் நகைகளை அணிந்து கொண்டு வெளியில் கிளம்புகையில் வாசனைத் திரவியங்களை புடவை மற்றும் நகைகளின் மேலும் ஸ்ப்ரே செய்து கொண்டு செல்கிறார்கள். அது சரியானதல்ல. வாசனைத் திரவியங்கள் அவை கிரீம்களாக இருந்தாலும் சரி திரவ ஸ்ப்ரேக்களாக இருந்தாலும் சரி முற்றிலும் ரசாயனங்களே! அவற்றை நகைகளின் மீது தெளித்துக் கொண்டு வெளியில் செல்லும் போது காற்றிலுள்ள தூசுக்கள், நச்சு வாயுக்கள், புகை மற்றும் வெயிலினாலான வியர்வை உள்ளிட்ட வெளியுலக மாசுக்களுடன் வினை புரிந்து நகைகளின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். சிலரது நகைகள் தரமான தங்கத்தில் செய்யப்பட்டிருந்த போதும் வெளுப்பதும், கருப்பதும், வலுவின்றி தொய்வடைந்து அறுபடுவதும் இதனால் தான். எனவே முகம், கூந்தல் என வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துவோர் நகைகளை அணியும் முன் அவற்றை ஸ்பிரே செய்து கொண்டு பிறகு நகைகளை அணியவும். அதே போல வெளியில் சென்று திரும்பிய உடனே முதல் வேலையாக நகைகளின் மீது படிந்துள்ள வெளியுலக அழுக்குகளை முறையே மேற்சொன்னபடி சுத்தம் செய்து உலர்த்திப் பின் நகைப்பெட்டிகளில் எடுத்து வைக்கவும்.

உடற்பயிற்சி செய்யும் போது நகைகள் அணிவதைத் தவிருங்கள்…

உடற்பயிற்சி செய்யும் போது வியர்வை பெருமளவில் உடலில் இருந்து வெளியேறும். அப்போது நகைகளை அணிந்திருந்தீர்கள் எனில் வியர்வையில் வெளியேறும் சோடியம் அப்படியே நீங்கள் அணிந்துள்ள நகைகளின் மேல் படிந்து விடும். நாட்பட, நாட்பட அந்தப் பழக்கம் தொடரும் போது நகைகளின் மேல் படிந்துள்ள சோடியம் தடிமனாகப் படியத்துவங்கி நகைகளின் பொலிவை குன்றச் செய்வதோடு நிறமாற்றத்துக்கும் காரணமாகி விடும்.

கழுத்துப் பகுதியில் அழுத்தமாக லோஷன் பயன்படுத்துவதைத் தவிருங்கள்…

சிலர் முகம் தவிர கழுத்துப் பகுதியில் வியர்க்கும் என்பதால் சற்று அதிகமாகவே முகப் பெளடர் மற்றும் க்ரீம்களைக் பூசிக் கொள்கிறார்கள். இதுவும் கூட நகைப் பராமரிப்பிற்கு ஒவ்வாத செயலே. கழுத்துப் பகுதியில் வியர்க்கும் போது அந்த வியர்வையுடன் கலந்து இந்த பெளடர், க்ரீம் ரசாயனக் கலவைகளும் நகைகளின் இடுக்குகளில் படிந்து நகைகள் பொலிவிழக்கக் காரணமாகி விடுகின்றன.

தரமான நேச்சுரல் கலர் நெயில் பாலிஷ் கோட்டிங் செய்து ஃபேன்ஸி ரோல்டு கோல்டு நகைகளைப் பாதுகாக்கலாம்.

இப்போது ஒரிஜினல் தங்க, வைர நகைகளுக்கு ஈடாக ரோல்டு கோல்டு செய்யப்பட்ட தரமான கவரிங் நகைகளையும் கணிசமாகப் பயன்படுத்தும் வழக்கம் மக்களிடையே அதிகரித்திருக்கிறது. அந்த நகைகளும் காஸ்ட்லியானவையே. அப்படிப்பட்ட நகைகளைப் பராமரிக்க ரோல்டு கோல்டு ஃபேன்ஸி நகைகளின் மீது தரமான பிராண்டு நேச்சுரல் நெயில் பாலிஷ் ஒரு கோட்டிங் அடித்துப் பராமரிக்கலாம். இப்படிச் செய்வதால் நகைகளின் மீது படியும் எண்ணெய்ப்பிசுக்கு மற்றும் தூசுகளைத் துடைத்தால் போதும். நகைகள் சீக்கிரம் கருத்து மானத்தை வாங்காமல் இருக்கும். 

வருடத்துக்கு ஒருமுறை நகைகளை சோதித்து டேமேஜ் இருக்கிறதா எனக் கண்காணியுங்கள்…

இப்படியெல்லாம் நகைகளைப் பாதுகாப்பு செய்தால் மட்டும் போதாது. நீங்கள் அடிக்கடி நகை அணியும் வழக்கம் இல்லாதவர். நகைகள் எப்போதும் பேங்க் லாக்கர் அல்லது உங்கள் வீட்டு இரும்பு பீரோவில் வைத்துப் பூட்டப்பட்டே கிடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை பூதம் காப்பது மாதிரி திறந்தே பார்க்காமல் காப்பாற்றிக் கொண்டிராலம் வருடத்துக்கு ஒருமுறையாவது வெளியில் எடுத்து நகைகளில் சேதாரம் ஏதாவது உண்டா? நிறம் மங்கியிருக்கிறதா? கற்கள் கழன்று விழும் நிலையில் இருக்கின்றனவா? என்று சோதித்துப் பார்த்து தேவையெனில் எல்லாவற்றையும் பழுது நீக்கிய பின்னர் உள்ளே பூட்டி வைக்க வேண்டும். வருடத்துக்கு ஒருமுறையாவது இதைச் செய்தால் நல்லது.

இரு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது நகைகளைப் பாலீஷ் செய்யுங்கள்…

தங்க நகைகளை இரு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது பாலீஷ் செய்து பத்திரப் படுத்தினால் புது நகை எது? பழைய நகை எது? என வித்யாசம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நகைகள் என்றென்றும் பளபளப்பாக இருக்கும்.

தினமும் அணியும் முத்து மற்றும் பவளம் கோர்த்த மாலைகளை வருடத்திற்கு ஒருமுறை கழற்றி மீண்டும் நெருக்கமாகக் கோர்த்து அணியுங்கள், இதனால் மாலைகளில் தொய்வு நீங்கும்.

அவ்வளவு தான் மேலே சொன்ன முறைகளை எல்லாம் சரியாகப் பின்பற்றினீர்கள் எனில் உங்களது பொன்னகை என்றைக்கும் உங்கள் முகத்தில் கவலை ரேகைகள் அற்றுப் புன்னகைகளை வரவழைப்பதாகவே நீடிக்கும்.

<!–

–>