கீழடியில் தமிழைப் புறக்கணித்த சுற்றுலாத்  துறை

மானாமதுரை: உலகப் புகழ்  பெற்ற  கீழடி சுற்றுலாத் தளத்தில், சுற்றுலாத்  துறை மூலம் வைக்கப்பட்ட பெயர் பலகையில் தமிழை புறக்கணித்ததுடன்  முழுவதும் ஆங்கிலத்தில் இருப்பதாலும், போதிய விபரங்களை வைக்காததாலும் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வு தளத்தில் 2,600 ஆண்டுகளுக்கு முன் பண்டைய தமிழர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டு அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்பு, விவசாயம், நெசவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பண்டைய தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளனர்.

மேலும், வெளிநாடுகளுடன் வியாபார தொடர்பும் வைத்திருந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளது.  

இதுவரை நடந்த ஆறு கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைக்கும் முயற்சியில் தொல்லியல் துறை ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கான விளம்பர பலகையில் சுற்றுலாத் துறை தமிழை புறக்கணித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கீழடி விலக்கில் மெகா சைஸ் விளம்ர பலகை வைக்கப்பட்டுள்ளது .

கீழடியில் இருந்து, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள், அவைகளின் தூரம் மற்றும் வரைபடம் ஆகியவை அதில் இடம் பெற்றுள்ள நிலையில் விபரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர்.  

ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் தமிழகத்திலேயே பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் பற்றிய எந்த விபரமும் இல்லை.

சுற்றுலாத் துறை ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் விபர பலகைகள் வைக்கப்படும் நிலையில், அதிகாரிகள் இங்கு ஆங்கிலத்தில் மட்டும் வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இடத்தில் சுற்றுலாத் துறை மூலம் கூடுதலாக பெயர் விபர பலகை மற்றும் உயர் மின்கோபுர விளக்கும் அமைக்கப்பட உள்ளது.

எனவே, அதனை அமைக்கும்போது கீழடி விலக்கு சாலையில் தமிழில் பெயர்பலகை வைக்க வேண்டும் என்றும் தமிழார்வலர்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

<!–

–>