குண்டான பெண்கள் உடல் எடையை எளிதாகக் குறைக்க முடியவில்லை, ஏன்?

ஆரோக்கியமான உடல் எடையைக் கொண்ட பெண்கள் உடற்பயிற்சி செய்யும்போது எளிதாக உடலில் சேரும் கொழுப்புகளை எரிக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. 

உடல் எடையைக் குறைக்கும் பலரது முயற்சியில் உடற்பயிற்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எளிய உடற்பயிற்சிகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலமாக உடல் எடையைக் குறைக்க முடியும். கொழுப்பைக் கரைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலமாகவும் உடல் எடையைக் குறைக்க முடியும். 

இந்நிலையில் உடல் எடைக் குறைப்பு குறித்து பெண்களிடையே நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வொன்றில் ஆரோக்கியமான, உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் பெண்கள் எளிதான உடற்பயிற்சியின் மூலம் உடலில் உள்ள கொழுப்புகளை எளிதாக எரிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

அதாவது உடல் பருமன் கொண்ட பெண்கள், தங்கள் உடலில் சேரும் கொழுப்புகளை எரிக்க அதிக உடற்பயிற்சியை செய்ய வேண்டியிருக்கும், அதேநேரத்தில் உடல் எடை சரியாக(ஃபிட்டாக) வைத்திருக்கும் பெண்கள் எளிதாக உடல் எடையை பராமரிக்க முடியும் என்று ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏனெனில் உடல் எடை அதிகமாக இருக்கும்போது உடலின் வளர்ச்சிதை மாற்றம் வேறுபடும், இன்சுலின் சுரப்பு, நீரிழிவு நோய் என ஒரு சில பிரச்னைகள் இருக்கலாம், உடல் எடைக்கு ஏற்றவாறு உடல் உறுப்புகளின் செயல்பாடும் மாறுபடும், உதாரணமாக நீங்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்டால் உணவு செரிமானத்திற்கு எவ்வாறு அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறதோ, அதேபோல உடல் எடைக்கு ஏற்றவாறே உடலியல் செயல்பாடுகளும் உள்ளன. 

அவ்வாறு உடல் பருமனாக உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்யும்போது உடனடியாக உடல் எடையைக் குறைக்க முடியாது. சீராக உடற்பயிற்சி செய்து சீரான உணவுகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே குறைக்க முடியும். 

வளர்சிதை மாற்றத்தில் வேறுபாடுகள் இருப்பதனால்தான் உடல் பருமன் கொண்டவர்களால் உடல் எடையை எளிதில் குறைக்க முடிவதில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

மேலும், ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் உடற்பயிற்சி செய்யும் போது அதிக கொழுப்பை எரிக்க முனைகின்றனர் என்றும் பெண்களின் உடல்ரீதியாக இந்த முடிவுகளில் மாற்றம் இருக்கும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பாத் பல்கலைக்கழக ஊட்டச்சத்து மையத்தின் விளையாட்டுத் துறை ஊட்டச்சத்து நிபுணர்கள் இதுகுறித்த ஆய்வினை மேற்கொண்டு இந்த முடிவினை வெளியிட்டுள்ளனர். 

<!–

–>