கும்ப்ளேவைத் தாண்டிச் செல்ல மாட்டேன்: ஓய்வு பற்றி அஸ்வின் அளித்த அதிர்ச்சி பதில்

 

ஹர்பஜன் சிங்கைத் தாண்டிவிட்டார். அடுத்ததாக கபில் தேவ், கும்ப்ளே ஆகியோரையும் தாண்டி அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையை ஆர். அஸ்வின் பெறுவார் என்று நீங்கள் கனவு கண்டால் அதற்கான வாய்ப்பு குறைவாகவும் இருக்கலாம். 

அனில் கும்ப்ளே 619 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அஸ்வின் அதைத் தாண்டிச் செல்ல சில வருடங்கள் ஆகும் என்றாலும் 2017-ல் அவர் அளித்த ஒரு பதில் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 3-வது இந்திய பந்துவீச்சாளர் என்கிற பெருமையைத் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் பெற்றுள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தொடக்க வீரர் டாம் லேதமின் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். இது அவருடைய 418-வது டெஸ்ட் விக்கெட். இதன்மூலம் 417 விக்கெட்டுகள் எடுத்திருந்த ஹர்பஜன் சிங்கைத் தாண்டிச் சென்று, அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 3-வது இந்திய பந்துவீச்சாளர் என்கிற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். 80 டெஸ்டுகளில் இந்த இலக்கை அவர் எட்டியுள்ளார். அடுத்ததாக கபில் தேவின் 434 விக்கெட்டுகளைத் தாண்டி விட்டால் 2-வது இடம் கிடைத்து விடும். இச்சாதனையை விரைவில் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் 2017-ல் ஒரு பேட்டியில் தன்னுடைய ஓய்வு பற்றி பேசியுள்ளார் அஸ்வின். அப்போது அவர் அளித்த வித்தியாசமான பதில்.

கும்ப்ளேவைத் தாண்டி சென்று விக்கெட்டுகள் எடுக்க மாட்டேன். கும்ப்ளேவின் பெரிய ரசிகன் நான். அவர் 619 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். நான் 618 விக்கெட்டுகள் எடுத்துவிட்டாலே மகிழ்ச்சியடைவேன். நான் 618 விக்கெட்டுகள் எடுத்துவிட்டால் அதுவே என்னுடைய கடைசி ஆட்டமாக இருக்கும் என்றார்.

2017-ல் அளித்த பேட்டியின் கருத்துகளை இப்போதும் அஸ்வின் வெளிப்படுத்துகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் மனத்தில் கும்ப்ளேவைத் தாண்டிச் செல்லக்கூடாது என்கிற எண்ணம் மட்டும் உள்ளது. காலம் மாறும்போது கருத்துகளும் காட்சிகளும் மாறுமா என்று பார்ப்போம். 

அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள்

619 – அனில் கும்ப்ளே (132 டெஸ்டுகள்)
434 – கபில் தேவ் (131 டெஸ்டுகள்)
419- ஆர். அஸ்வின் (80 டெஸ்டுகள்)
417 – ஹர்பஜன் சிங் (103 டெஸ்டுகள்)

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>