குளியல் சோப்பை கடையில் தான் வாங்கனுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க!

homemade_pappaya_soap

                                             

                                                           முதலில் ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்துக் கொண்டு லிஸ்ட் போடுங்கள், உங்களுக்குப் பிடித்த சோப் ஃபிளேவர் எது என்று, நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் சோப் உங்களுக்குப் பிடித்த ஃபிளேவரில் தான் இருக்கிறதா? உங்களுக்குப் பிடித்த நிறத்தில் தான் இருக்கிறதா? நீங்கள் விரும்பும் சிகப்பழகையும், உடல் நறுமணத்தையும், மென்மையையும், ஆரோக்யத்தையும் தர வல்லதாகத்தான் இருக்கிறதா? என்றெல்லாம் யோசித்துப் பாருங்கள். நிச்சயம் பலரது பதிலும்  ‘இல்லை’ என்பதாகத் தான் இருக்கக் கூடும். அப்படியானவர்கள் அவரவர்க்குப் பிடித்த குளியல் சோப்களை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ள முடிந்தால் எத்தனை சந்தோஷப் படுவார்கள் என யோசித்துப் பாருங்கள். அதற்கு எங்களால் ஆன சிறு உதவி தான் இந்த ஹோம்மேட் பப்பாயா சோப் தயாரிப்பு பற்றிய எளிய செய்முறை விளக்கம். விருப்பம் இருப்பவர்கள் இதில் கூறப்பட்டுள்ளவாறு தயாரித்துப் பலன் பெறுங்கள்…

தேவையான பொருட்கள்:

  • பப்பாளிப் பழத்துண்டுகள் – 4
  • தேங்காயெண்ணெய் – 1 டீஸ்பூன்
  • சர்க்கரை- 1 டீஸ்பூன் (சர்க்கரையை நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்)
  • வோட்கா (ஆல்கஹால்) – 1 டீஸ்பூன்
  • கிளிசரின் – 1/2 டீஸ்பூன் அல்லது சில துளிகள் உங்கள் விருப்பத்துக்கேற்ப
  • நறுமண எண்ணெய் – சில துளிகள்

செய்முறை:

முதலில் நன்கு கனிந்த பப்பாளிப்பழம் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் விதைகளை நீக்கி விட்டு நான்கு மீடியம் சைஸ் துண்டுகளை அதிலிருந்து வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் துண்டுகளை மிக்ஸியில் இட்டோ அல்லது கையாலோ நன்கு மசித்த பிறகு ஜூஸ் வடிகட்டியால் விரல்களால் அழுத்திப் பிழிந்து வடிகட்டவும். பழத்துண்டுகளில் இருக்கும் நார்கள் இதன் மூலம் வடிகட்டப் பட்ட பின் உங்களுக்கு கிளியரான பப்பாளிக் கூழ் கிடைக்கும். இந்தப் பப்பாளிக் கூழுடன் 1 டீஸ்பூன் தேங்காயெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி விட்டு அதனுடன் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை நன்கு கரைய வேண்டும். கரைந்த பின் அதனுடன் 1 டீஸ்பூன் வோட்காவும் 1/2 டீஸ்பூன் கிளிசரினும் சேர்த்து மீண்டும் ஸ்பூனால் நன்கு கலக்கவும். கிளிசரின் சேர்ப்பதும், சேர்க்காததும் உங்களது விருப்பத்தைப் பொறுத்தது. கிளிசரினை அடுத்து நறுமண எண்ணெய்களில் உங்களது விருப்பம் சார்ந்து ஏதாவதொன்றை சில துளிகள் சேர்க்கவும். சந்தையில் லெமன், சந்தனம், ரோஜா, பாதாம் என நறுமணமூட்டும் எண்ணெய்கள் நிறையக் கிடைக்கும். அதில் உங்களுக்குப் பிடித்தமான ஏதாவதொன்றை சில துளிகள் கலந்து கொள்ளவும்.

அதன் பின் உங்களுக்குப் பிடித்தமான நிறமூட்டிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சில துளிகள் கலந்து கொள்ளுங்கள். உதாரணம் சிவப்பு, ஆரஞ்சு (இரண்டிலும் சில துளிகளையும் சேர்க்கலாம்)

மொத்தக் கலவையையும் நன்கு கலக்கவும். இதில் நிறமூட்டிகளைச் சேர்ப்பதும், சேர்க்காததும் கூட உங்களது விருப்பமே. 

பின்னர் ரெகுலர் சைஸ் டிரான்ஸ்பரண்ட் கிளிசரின் பேஸ் பார் சோப் வாங்கி அதை மெல்லிய ஸ்லைஸ்களாக துண்டாக்கிக் கொள்ளவும். இந்த சோப்பை நீங்கள் சரும ஆரோக்யத்துக்கான குளியல் சோப்களை விற்பனை செய்யும் மருந்தகங்களிலோ அல்லது அழகு நிலையங்களிலோ பெறலாம். ஸ்லைஸ் செய்த சோப் துண்டுகளை டபுள் பாய்லிங் முறையில் நன்கு சூடாக்கினால் அது உருகி விடும். உருகிய சோப் கலவையுடன் நீங்கள் வீட்டில் தயாரித்து வைத்துள்ள பப்பாயா சோப்புக்கான கலவையையும் கலந்து நன்கு கலக்கவும். சோப் கலவையின் சூடு கைபொறுக்கும் பதமானதும் அதை உங்களுக்குப் பிடித்த மோல்டுகளில் ஊற்றி அறைவெப்ப நிலையில் ஆற விடவும். ஆறிய பின் எடுத்து துண்டுகளாக்கி உங்களுக்குப் பிடித்த நபர்களுக்கு அதைப் பரிசளிக்கலாம்.

இந்த தயாரிப்பில் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டால் அது அவர்களுக்கு மிகச்சிறந்த விடுமுறை தினப் பொழுது போக்காக இருக்கும்.

<!–

–>