குழந்தைகளின் நடத்தைக் குறைபாடுகளுக்கு ஹோமியோபதி மருத்துவம்

ஒரே வீடு தான். ஒரு கூரையின் கீழ் தான் உணவு, உறக்கம், வாழ்க்கை எல்லாம். நெருங்கித் தான் இருக்கிறோம்; ஆனாலும் இடைவெளி அதிகம். ஒரே வகுப்பறை தான். ஒரே கூரையின் கீழ் தான் பாடம், படிப்பு, பரிட்சை எல்லாம்.ஆசிரியர்களும் மாணவர்களும் அருகருகே தான் இருக்கிறார்கள். ஆனாலும் இடைவெளி அதிகம். குழந்தைகளின் இதயங்களில் பெற்றோரும் ஆசிரியர்களும் இடம் பிடிக்கவில்லை. இதன்  பின்விளைவு, ‘அவன் வீட்டின் பெயர் அன்னை இல்லம்; அவன் அன்னை இருப்பதோ அனாதை இல்லம்’, என்ற துயர நிலை.

தாலாட்டுப் பாடி மழலைகளைத் துயில வைக்கும் தாய்மார்கள் அருகி விட்டனர். மரங்களையும், நிலவையும் காட்டி அன்பையும் சேர்த்து அமுதூட்டும் அம்மாக்கள் அபூர்வமாகிவிட்டனர். சின்னத் திரையின் வண்ணக் காட்சிகளுக்கு முன் இவையெல்லாம் எம்மாத்திரம்? மனித உறவுகளுக்கிடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது.

இன்றைய சமுதாய, பொருளாதார, வாழ்வியல் சூழ்நிலையில் குழந்தைப் பருவ சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ‘அன்றைய நாளைக் காட்டும் காலை நேரம் போல வருங்கால மனிதனைக் காட்டுகிறது குழந்தைப் பருவம்.’ என்று மில்டன் கூறுவதிலிருந்து குழந்தைப் பருவம் எவ்வளவு பொறுப்புணர்ச்சியோடு கவனிக்கத்தக்கது என்பது புலனாகும். குழந்தைப் பருவச் சிக்கல்கள் குழந்தைகளின் நிகழ்காலத்தையும், எதிர்கால வாழ்க்கையையும் கடுமையாகப் பாதிக்கும்.குழந்தைகளின் நடத்தைக் குறைபாடுகளில் ‘கவனக்குறைவு மற்றும் மிகை செயல் கோளாறு’ குறிப்பிடத்தக்கது.

கற்க இயலாத,கவனத்தை ஒருமுகப்படுத்த இயலாத குறைபாட்டை ATTENTION DEFICIT DISORDER [ADD]  என அழைக்கின்றனர். மிதமிஞ்சிய சேட்டைகள், செயல்பாடுகளை HYPERACTIVE DISORDER [HD] என அழைக்கின்றனர். இவ்விரு குறைபாடுகளும் இணைந்திருந்தால் ‘ADHD’  என அழைக்கின்றனர். ‘ADHD’ என்பது பிஞ்சுக் குழந்தைகள் [INFANTS], சிறுவர்கள் [CHILDREN], பதின் பருவவயதினர் [TEENS] போன்றவர்களிடம் காணப்படுகிறது.

குழந்தைகளிடம் காணப்படும் ADHD போன்ற நடத்தை மாறுபாடுகளுக்கு பாரம்பரியக் கூறுகளும், சமூக-உளவியல் பிரச்னைகளும், தைராய்டு இயக்கக் கோளாறும், சத்துப் பற்றாக்குறையும், கழுத்து முள்ளெலும்புப் பகுதியில் ஒருவித அழுத்தமும், கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் பயன்படுத்திய புகை, போதை மற்றும் மருந்துப் பொருட்களும், தலைக் காயங்களும் அடிப்படைக் காரணங்களாக இருக்கக்கூடும் என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.

ADHD-ன் பிரதான இயல்புகள் கற்க இயலாமையும் [LEARNING DISABILITY] அமைதியற்ற தன்மையும், மேலும் ஒழுங்கீனம், பொய், திருட்டு, ஆக்ரோஷம் [AGGRESSIVE BEHAVIOUR TOWARDS PEOPLE OR ANIMALS] போன்ற நடத்தைக் கோளாறுகளும், அதிகமான பேச்சும், வரம்பு மீறிய செயல் வேகத்தைக் கட்டுப்படுத்த இயலாமையும், பிறர் சொல்லைக் காதில் வாங்கிக் கொள்ளாத தன்மையும், ஒரு வேலையை முடிக்கும் முன்பே மறு வேலைக்கு அல்லது வேறு விஷயத்திற்குத் தாவும் மனப்பான்மையும் அமைந்திருக்கும்.

ADHD இயல்புகளை மனவியல் நிபுணர்கள் மூன்று வகையாகப் பிரிக்கின்றனர்.

1. கவனக் குறைவு வகை [INATTENDIVE TYPE] : கல்வியில் கவனம் செலுத்த முடியாது. மொழியைக் கற்க சிரமம். எந்த விதிகளையும் அறிவுரையையும் பின்பற்ற இயலாமை, ஒரு பணியை முடிக்காமல் வேறொன்றுக்குத் தாவுதல்,மறதி,பார்ப்பது,கேட்பது,செயல்படுவது எல்லாவற்றிலும் கவனக்குறைவு. அதனால் நிறையத் தவறுகள் ஏற்படும்.

2. ஆவேசப்படும் வகை [ IMPULSIVE TYPE] : எதையும் யோசிக்காமல் செய்தல்,தன் நேரம் வரும் வரைக் காத்திருக்க இயலாமை, தெருவின் குறுக்கே – சாலையின் குறுக்கே அவசரக் கோலமாய் ஓடுதல், நட்பைக் காக்க இயலாமை, யாரும் எதிர்பாராத நேரம் அடித்தல், பொருட்களைச் சேதப்படுத்துதல்

3. வரம்பு மீறிச் செயல்படும் வகை [HYPERACTIVE TYPE] : பொருத்தமற்ற நேரத்தில் பொருத்தமர்ற காரியங்களைச் செய்தல், பிறருடன் இணைந்து விளையாட, செயல்பட இயலாது. பிறருக்கு இடையூறு செய்தல், மேலே கூறிய மூன்று வகை ADHD இயல்புகளோடு பொதுவாக உண்பதற்கு மறுத்தல், அன்பை மறுத்தல், அலறுதல், கதறி அழுதல், படுக்கையில் சிறுநீர் கழித்தல், குறைந்தளவு தூங்குதல், அமைதின்மை போன்றவையும் காணப்படும்.

குழந்தைகளின் நடத்தைக் கோளாறுகளைக் குணப்படுத்த பன்முகச் சிகிச்சை [MULTIFACETED TREATMENT] தேவைப்படுகிறது. நடத்தைகளை ஒழுங்குபடுத்தும் சிகிச்சை [BEHAVIOURAL THERAPY], தனி மற்றும் குடும்பரீதியிலான ஆற்றுப்படுத்துதல், சத்தூட்டச் சிகிச்சை, மருந்துச் சிகிச்சை போன்றவற்றை ஒருங்கிணைத்து வழங்குவது அவசியம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மூளையிலுள்ள DOPAMINE போன்ற நரம்புக்கடத்தி வேதிப் பொருட்களை [NEUROTRANSMITTER] உற்பத்தி செய்ய உதவும் இரும்புச் சத்தினைச் செயற்கையாக வழங்கி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக குறிப்பிடத்தக்க பலன்கள் நிகழவில்லை.   

குழந்தைகளுக்கு ஆங்கில மருத்துவத்தில் புழக்கத்திலுள்ள மனநோய் மருத்துகளைப் [PSYCHIATRIC DRUGS] பயன்படுத்துவதால் நன்மைக்குப் பதில் தீங்குகளே ஏற்படுகின்றன. இம்மருந்துகளை நிறுத்த முடியாத [ADDICTIVE] பழக்க அடிமைத்தனமும், பசியின்மை, எரிச்சல், மயக்கம், தூக்கமின்மை, ஒழுங்கற்ற இருதயத் துடிப்புகள், சுவாசத் திணறல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

மருத்துவத் துறையில் புரட்சிகரமான கண்டுபிடிப்பான ஹோமியோபதியில் ADHD போன்ற குழந்தைகளின் நடத்தைப் பிரச்சினைகளுக்கு பக்கவிளைவு இல்லாத சிகிச்சை அளிக்க முடியும். இதனால் குழந்தைகளின் குணநலன் மேம்பட அதிக வாய்ப்புள்ளது. குழந்தைகளின் உடல் உள்ளம் இரண்டின் அமைப்பிற்கேற்பவும், பாரம்பரிய மற்றும் குடும்பப் பின்னணி போன்ற காரணங்களுக்கேற்பவும் ஹோமியோபதியில் மட்டுமே மருந்தளித்துச் சிகிச்சை மேற்கொள்ள முடியும். குறிப்பிடத்தக்க பலன்களும் ஏற்படும்.

குழந்தைகளிடம் காணப்படும் வன்முறைத்தனங்கள், கோபம், விதிமீறல்கள், மிருகவதை ஆர்வங்கள், பிறருக்கு இடையூறு, பொய்கள், திருட்டு, போதைப் பழக்க ஆர்வங்கள், கல்வி ஆர்வமின்மை, டிவி & வீடியோவின் வன்முறைக் காட்சிகளில் ஆர்வம், பாலியல் தவறுகள், முரட்டுப் பிடிவாதங்கள், மற்றும் பல வரம்பு மீறிய குணக்கேடுகளை அலட்சியம் செய்தல்,பள்ளி வன்முறை/கல்லூரி வன்முறை [SCHOOL VIOLENCE/COLLEGE VIOLENCE] , ரேக்கிங் பழக்கம், பெண்ணை இழிவு செய்யும் [EVE TEASING] பழக்கம் அதிகரிக்கும். குழந்தைகளின் நன்னடத்தைக் குறைபாடுகள், இயக்கக் குறைபாடுகளை முழுமையாக ஆய்வு செய்து ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்பட்டால் நடத்தைகளை மேம்படுத்த இயலும். ADHD குழந்தைகளைக் குணப்படுத்தும் ஆற்றல்மிக்க ஹோமியோபதி மருந்துகள் ஏராளம் உள்ளன. அவற்றில் முக்கிய பத்து மருந்துகளைப் பற்றிப் பார்ப்போம்.முதல் மூன்று மருத்துகள் குழந்தைகளின் ADD  நிலையை மாற்றவும் மற்ற மருந்துகள் ADHD நிலையைச் சீர்படுத்தவும் குறிகளுக்கேற்ப பயன்படக் கூடியவை.

1. ஓபியம் (OPIUM) : குழந்தையின் மூளை செயல்திறன் குறைவு. எதிலும் உணர்ச்சியற்ற மந்த நிலை [தாயார் கர்ப்ப காலத்திலும், பிரசவ காலத்திலும் ஏராளமான மருந்துகள் எடுத்திருப்பார். எப்போதும் தூக்க நிலை. தூக்கத்தில் உள்மனம் விழித்திருக்கும். அருகில் நடப்பது தெரியாது. தூரத்து மணி ஓசை, ஹாரன் சத்தம், பறவைச் சத்தம் கேட்கும். எதிலும் மனம் ஒன்றுதல் இயலாது. மிரட்டிய பின் அல்லது பயத்திற்குப் பின் அல்லது தலைக் காயத்திற்குப் பின் ஏற்படும் பாதிப்புகள். [மாடு, நாய் ஏதேனும் துரத்தியதற்குப் பின், இரவு பேய், பிசாசு எதேனும் பார்த்ததாகக் கூறும் அனுபவத்திற்குப் பின்]. மிக கடுமையான மலச்சிக்கல்.மலம் கழிக்கும் உணர்வே இல்லாமை. வறண்ட காய்ந்த உருண்டை மலம், வலி இருக்க வேண்டிய சீழ்கட்டி, புண்களில் கூட வலி இராது. நினைவுடன் மயக்கம் [COMA VIGIL]

2. பரிடா கார்ப் [BARYTA CARB] : குறிப்பிடத்தக்க உடல், மன வளர்ச்சிக் குறைபாடுள்ள குழந்தை. பாதுகாப்பற்ற, கூச்ச சுபாவமுள்ள, மந்தத் தன்மையுள்ள, இயலாத தன்மைகளுள்ள குழந்தைகள். பள்ளிப் பாடங்களில் சிரமப்படுதல். வயதிற்கேற்ற முதிர்ச்சியின்றி குழந்தைத்தனமான செயல்பாடுகள். வாயில் உமிழ்நீர் ஒழுகுதல், பிறர் கேலி செய்யக்கூடும், விமர்சிக்கக் கூடும் என எண்ணுதல், எளிதில் சளி பிடிக்கும் தன்மை. டான்சில் சதை வளர்ச்சி.

3. அபிஸ் மெல் [APS MEL] : மோசமாகப் பொருட்களைக் கையாளுதல், அடிக்கடி அவற்றை நழுவ விடுதல், கால்களைத் தரையில் கீழே தேய்த்து நடத்தல் [தோல் வியாதிகளை அடக்கிய வரலாறு]

4. ஹெல்லிபோரஸ் [HELLEPORUS ] : மந்தமான மனநிலை [SLUGGISH]. பதிலளிக்க நீண்ட நேரம் ஆகும் அல்லது பதிலளிக்க மறுத்தல். உண்ணும் போது உணர்வின்றி ஊட்டும் கரண்டியைக் கடித்தல். படித்தது, கேட்டது, சொன்னது, சொல்ல நினைத்தது மறந்து விடுதல். மன பலவீனம் உடலைப் பாதிப்பதால் கையிலுள்ள பொருட்களை கீழே விட்டுவிடுதல், தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் ஒரு கை கால் தானாக தொடர்ந்து ஆடுதல். உதடுகளை, ஆடைகளைத் தொடர்ந்து கிள்ளுதல், தலையணைக்குள் தலையைப் பின்பக்கமாக அழுத்துதல் சுய உணர்வுடன் வலிப்பு. வலிப்புக்குப் பின் ஆழ்ந்த தூக்கம் [தலையில் அடிபட்ட வரலாறு அல்லது நீர்கோர்த்த-HYDRUCHEPALLUS வரலாறு]

5. சினா [CINA] : குழந்தை யாரும் அருகில் வருவதையோ, தொடுவதையோ, கொஞ்சு வதையோ, உற்றுப் பார்ப்பதையோ விரும்பாது. ஒவ்வொருவரையும் அடித்தல், எதிர்த்தல், சொல் கேளாமை, தண்டித்தாலோ,திட்டினாலோ வலிப்பு ஏற்படுதல், குடற்பூச்சிகளால் மூக்கைக் குடைதல், இரவில் பற்கடிப்பு, படுக்கையில் சிறுநீர் கழித்தல், லேசான வலிப்புகள், பலவிதப் பொருட்களை விரும்பிக் கேட்டல், கொடுத்தால் வாங்க மறுத்தல் அல்லது வாங்கி வைத்துக் கொண்டால் அமைதி, எரிச்சல், சிடுமூஞ்சித்தனம், பிடிவாதம், கடும்பசி, கடும் தாகம், இனிப்புகளில் ஆர்வம்.

6. ஸிங்கம் மெட் [ZINCUM MET] : திகில், கவலை, கோபம், அறுவைச் சிகிச்சை, அதிகம் படித்தல், இரவில் கண் விழித்தல் ஆகியவற்றின் பின் விளைவுகள், முழங்காலுக்குக் கீழே அமைதியற்ற தன்மை, பாதங்களை இடைவிடாமல் அசைத்தல், பிறர் சொன்னதையே குழந்தை திரும்பத் திரும்பச் சொல்லுதல், கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்டுவிட்டு பின்னர் பதிலளித்தல், பேச்சிலும் எழுத்திலும் அடிக்கடி பிழைகள், அதிக மறதி, மூளைச் சோர்வு, உட்கார்ந்து உடலைப் பின்புறம் வளைத்தால் தான் சிறுநீர் கழிக்க இயலும். இருமும் போது பிறப்புறுப்பில் கையை வைத்துக் கொள்ளுதல்.

7. ஸ்டிரமோனியம் [STRAMONIUM] : ஏதேனும் பயம் ஏற்பட்ட பின் அல்லது அடிபட்டதாலான மன அழுத்தக் கோளாறுக்குப் பின் குழந்தைகளிடம் காணப்படும் ADHD நிலை. கடுமையான மிகைச் செயல்பாடு. கோபம், மூர்க்கம், ஆவேசம், கடித்தல், உதைத்தல், மோதுதல், வலிப்பு வருதல், வன்முறை, சப்தமாய் பேசுதல், வேகமாய் தொடர்பற்றுப் பேசுதல், இருள், நாய்கள், ஆவிகள், பேய்கள் மீதான பயம், தாகம் இருந்தாலும் நீர் அருந்தப் பயம், சாவு பயம், இரவில் தனிமை பயம். பயங்கள் காரணமாக அதிக விழிப்போடிருத்தல், நள்ளிரவு 2 மணிக்கு பீதிகள் அதிகரிப்பு, எழுந்து அலறல், வன்முறை குணமும், ஆக்ரோஷமும், பயமும் நிறைந்த கடின நடத்தையுள்ள குழந்தைகள்.

8. டாரெண்டுலா ஹிஸ்பானியா [TARENTULA HISPANIA] : அதிகளவு அமைதியற்ற தன்மை, குதித்தல், ஆடுதல், கைகள், கால்கள் இயங்கிக் கொண்டே இருத்தல், ஒரு இடம் விட்டு மறு இடம் மாறி மாறிச் செல்லுதல், தன்னையோ பிறரையோ அடித்தல், தலையணைக்குள் தலையை உருட்டுதல், இசை கேட்டு அமைதியடைதல்.

9. டியூபர்குலினம் [TUBERCULINUM] : எதையாவது செய்ய, எங்காவது பயணம் செல்ல நிலையான விருப்பம். ஒரே இடத்தில் தங்கியிருக்க இயலாமை. நாய், பூனை, மிருகங்கள் பயம், பறப்பது போல, மிருகங்கள் சூழ்ந்து விட்டது போல பிரமை. கோபத்தில் பொருட்களை உடைத்தல்.

10. அயோடியம் [IODIUM] : பரபரப்பான மனநிலை. எப்போதும் நடத்தல், பொருட்களைக் கிழித்தெறியும் உணர்ச்சி வேகம், தனக்குத் தானே தீங்கிழைத்தல், வன்முறையில் ஈடுபடுதல், எப்போதும் பசி, உணவு இடைவேளைகளிலும் சாப்பிடுதல், ஆனாலும் உடல் மெலிவு. குளிர் அறை விருப்பம். அமைதியாக உறங்காமல் எப்போதும் பரபரப்பாய் ஓடித்திரிதல்.

இம்மருந்துகள் மட்டுமின்றி வேறுபல மருந்துகளும்  ADHD குறிகளுக்கு உதவக்கூடும். குறிகளைக் கவனத்திற் கொண்டு உரிய மருந்துகளை ஹோமியோ மருத்துவர்கள் தேர்ந்தெடுத்துச் சிகிச்சையளிக்கும் போது குழந்தைகள் நலம் பெறுவது திண்ணம்.

Dr.S.வெங்கடாசலம்,
மாற்றுமருத்துவ நிபுணர்,
சாத்தூர்.
செல்;94431 45700   
Mail: alltmed@gmail.com
 

<!–

–>