குழலிசை இன்றும் இருக்கையில், யாழிசை ஏன் இல்லாமலானது?

Yaaz

பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய இசைக்கருவிகளில் முதன்மையாக வாசித்த நரம்பு இசைக்கருவி யாழ். கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்த யாழ் பின் வீணையின் வரவால் வழக்கிழந்து விட்டது எனலாம். குறிஞ்சி நிலத்து மக்கள் பயன்பாட்டில் இருந்த வில்லின் முறுக்கேற்றிக் கட்டப்பட்ட நாணிலிருந்து அம்பு செல்லும் போது தோன்றிய இசையினால் யாழ் உருவாகியிருக்க வேண்டும் என்ற கருத்தும், புராணத்தில் சொல்லப்பட்ட ‘யாழி’ என்ற விலங்கிலிருந்து செதுக்கப்பட்டு தோன்றியதாக இருத்தல் வேண்டும் என்ற மற்றொரு கருத்தும் நிலவி வந்துள்ளது. சங்க இலக்கியங்களில் திருக்குறள், சிலப்பதிகாரம், பெரும்பாணாற்றுப் படை, சீவக சிந்தாமணி, பெரியபுராணம் மற்றும் பல இலக்கியங்களில் யாழின் குறிப்புகள் உள்ளன. ஈழத்தவரான சுவாமி விபுலானந்தர் “யாழ்நூல்” என்னும் இசைத்தமிழ் நூலில் யாழைப் பற்றி பல விரிவான ஆய்வுகளைத் தொகுத்துள்ளார்.

“பேரியாழ் பின்னும் மகரம் சகோடயாழ்
சீர்பொலியும் செங்கோடு செப்பினார் – தார் பொலிந்து 
மன்னும் திருமார்ப வண் கூடற் கோமானே
பின்னுமுளவோ பிற” 

– என்ற பாசுரப்படி தமிழ்நாட்டில் வழங்கி வந்த யாழ்கள் நான்காகும்.

ஒன்றுமிருபதும் ஒன்பதும்பத்துடனே
நின்ற பதினான்கும், பின்னேழும் – குன்றாத 
நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன் முறையே
மேல் வகுத்த நூலோர் விதி’

– என்ற பாசுரப்படி பேரியாழுக்கு 21-ம், மகரயாழுக்கு 19 – ம், சகோடயாழுக்கு 14-ம் செங்கோட்டியாழுக்கு 7- ம் நரம்புகளாகக் கொண்டு வழங்கி வந்துள்ளது கண்கூடு. இவை நான்குமில்லாது ஆயிரம் நரம்புகளுடைய  ‘ஆதியாழ்’ எனும் யாழொன்றும் தமிழ்நாட்டில் வழக்கிலிருந்து வெகுகாலத்துக்கு முன்பு அது வழக்கு வீழ்ந்து அழிந்து போயிற்று.

யாழின் வகைகள்:

 • ஆதி யாழ்: 1000 நரம்புகளைக் கொண்டது (வனத்தில் விலங்குகளை விரட்டப் பயன்படுத்தப்பட்டது)
 • நாரத யாழ்: 1000 நரம்புகளைக் கொண்டது, முக்கோண வடிவை உடையது.
 • ஆதிகால பேரியாழ்: 100 நரம்புகளை கொண்டது.
 • பேரியாழ்: 21 நரம்புகளைக் கொண்டது.
 • மகரயாழ்: 17 அல்லது 19 நரம்புகளைக் கொண்டது.
 • சகோடயாழ்: 16 நரம்புகளைக் கொண்டது
 • செங்கோட்டியாழ்( சீறியாழ்): 7 நரம்புகளைக் கொண்டது
 • தும்புருயாழ்: 9 நரம்புகளைக் கொண்டது
 • கீசக யாழ்: 14 நரம்புகளைக் கொண்டது.
 • மருத்துவ யாழ்: 100 நரம்புகளைக் கொண்டது (தேவ யாழ் என்ற பெயரும் உண்டு)
 • வில் யாழ்: வில் போன்ற வடிவமுடையது.
 • மயில்யாழ்: மயில் போன்ற வடிவமுடையது.
 • கிளியாழ்: கிளி போன்ற வடிவமுடையது.

தகவல் உபயம்: சகோடயாழ் புத்தகம் 
ஆசிரியர்: பு.உ.கே.நடராஜன்
 

<!–

–>