கொண்டாடினாலும் காதல் திருமணங்களில் 25 சதவிகிதமே வெற்றி

காதலர் தின விழா ஒரு புறம் கலக்கிக்கொண்டிருந்தாலும் கூட மறுபுறம் காதல் திருமணம் செய்துகொண்டவர்களில் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட 25 சதவிகிதமே என்கிறது புள்ளிவிவரங்கள்.

என்றாலும், காதல் திருமணங்களின் எண்ணிக்கை குறையவில்லை. மாறாக, ஒவ்வோர் ஆண்டும் காதல் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது.

பதிவுத் துறையில் பதிவு செய்யப்படும் திருமணங்களில் 75 சதவிகிதத்துக்கும் அதிகமானவை காதல் திருமணங்களே என்கின்றனர் அலுவலர்கள். ஆனால், காதல் திருமணம் செய்து கொள்பவர்களில் கிட்டத்தட்ட 25 சதவிகிதம் பேர் மட்டுமே வெற்றிகரமாக வாழ்க்கை நடத்துவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சில காதலர்கள் திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து ஒரு வாரத்துக்குள்ளாகவே கூட பிரச்னை ஏற்பட்டு காவல் நிலையத்துக்குச் செல்கின்றனர். மேலும் சில காதலர்கள் திருமணம் நடந்து ஓராண்டு நிறைவடைவதற்கு முன்பாகவே விவாகரத்து வரை சென்றுவிடுகின்றனர்.

பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்தைவிட காதல் திருமணத்தில் ஆண், பெண் இருவரும் திருமணத்துக்கு முன்பாகவே தங்களுக்குள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். என்றாலும், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைவிட, காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தான் அதிக அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காவல் நிலையம் வரை செல்கின்றனர்.

இதுபோல, சமரசம் செய்து கொள்வதற்காகக் குடும்ப ஆலோசனை மையத்துக்கும் சென்றுகொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தின் இரண்டாம் நிலை நகர் ஒன்றில் உள்ள இத்தகைய மையத்துக்கு மாதத்துக்குச் சராசரியாக 50 பேர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த தம்பதியினர் வருகின்றனர். இவர்களில் 25-க்கும் அதிகமானோர் காதல் திருமணம் செய்தவர்களாக உள்ளனர் என்கின்றனர் குடும்ப நல ஆலோசகர்கள்.

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் பிரிந்த தம்பதிகளைக்கூட சேர்ப்பதற்கு எளிதாக இருக்கிறது. இரு தரப்பிலும் உள்ள உறவினர்களையும் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதால் தீர்வு கிடைக்கிறது. ஆனால், காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு உறவினர்களின் ஆதரவு இருப்பதில்லை. காதல் திருமணத்தில் கணவன் – மனைவி இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதே அதற்குக் காரணம். இதனால், சமரசத்துக்கு வரும் காதல் தம்பதிகளைச் சேர்த்து வைப்பது அரிதாகவே இருக்கிறது என ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல், அன்பு செலுத்துதல் போன்றவை திருமணத்துக்குப் பிறகு காதலர்களிடையே இல்லாமல் போய்விடுவதே இந்த பிரச்னைகளுக்கு காரணம்.

குறிப்பாக 16 – 22 வயதில் காதலைத் தொடங்கும் காதலர்கள்தான் அதிகமாக இந்தப் பாதிப்புக்கு ஆளாவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. காதலர்கள் காதலிக்கும்போதே ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில்லை. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளும் பெண்கள், திருமணத்துக்குப் பிறகு அது நிறைவேறாமல் போகும்போது பிரச்னைகள் எழுகின்றன. ஈகோ பிரச்னையும் பிரிவு ஏற்படுவதற்குக் காரணமாக உள்ளது.

இந்த பிரச்னையால் ஆண்கள் மன ரீதியாகவும், பெண்கள் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகளுக்குக் காதல் என்பதற்கு உண்மையான பொருள் தெரியவில்லை.

இதனால், பெரு நகரங்களில் லிவிங் டூ கெதர் என்ற போக்கு அதிகரித்துள்ளது. அதாவது, காதலர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழும் முறை அதிகரித்து வருகிறது. கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உடனடியாகப் பிரிந்து சென்றுவிடுகின்றனர்.

திருமணம் செய்து கொண்டால், பின்னாளில் கருத்து வேறுபாடு ஏற்படும்போது, சட்டச் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருப்பதால், ஆண், பெண் இருவருமே இப்படியொரு முடிவு செய்து இணைந்து வாழும் போக்கு அதிகரித்து கொண்டிருக்கிறது.  சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏறத்தாழ 50 சதவிகித காதலர்கள் லிவிங் டு கெதர் முறையைப் பின்பற்றுகின்றனர். இந்த நிலைமை இரண்டாம் நிலை நகரங்களிலும் தற்போது பரவிக் கொண்டிருக்கிறது.

இந்தப் பண்பாட்டுச் சீர்கேடு காரணமாகக் குடும்ப ஆலோசனை மையத்துக்கு சமரசத்துக்கு வரும் காதல் தம்பதிகளின் எண்ணிக்கையும் குறைவதாக ஆலோசகர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமிழகத்தில் சங்க காலம் முதற்கொண்டு காதல் நிகழ்வுகளின் பதிவுகள் அதிகம். உலகமயமாக்கலின் விளைவாக கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாகக் காதலர் தின விழாக்கள் தமிழக நகரங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படுன்கிறன. இவற்றில், அதிகமாகக் கலந்து கொள்பவர்கள் பள்ளி, கல்லூரிக் காதலர்கள்தான். ஆனால், பெரும்பாலும் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமலே பங்கேற்கின்றனர்.

எனவே, காதலர் தினத்தில் கொண்டாட்டம் என்பதைவிட காதலின் மாண்பும், நம்முடைய பண்பாடு, சங்க காலத்தில் காதலுக்கு இருந்த மரியாதை, காதல் திருமண பந்தத்தில் கிடைக்கும் நன்மைகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கூறும் விழிப்புணர்வு நிகழ்வாகவும் மாற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

<!–

–>