கொலைகாரர்களிடமிருந்து காக்கப்பட வேண்டிய யானைகள்

காட்டுவாழ் உயிரினங்களில் அதிமுக்கியமானவை யானைகள். பல்லுயிர் சூழலை உருவாக்குவதோடு அதன் சூழலியல் அமைப்பைப் பாதுகாத்து ஏனைய உயிர்களுக்கும் தலைமுறைக் கொடையாளனாக இருக்கும் காடுகளின் கர்ணன் யானை. தமிழ் இலக்கியத்தில் காதல் தொடங்கி வீரம் வரை யானைகள் குறிப்பிடப்படாத இடமும் உவமையும் இல்லை எனலாம்.

தனது வழித்தடங்களில் ஒரு காட்டை உருவாக்கிச் செல்லும் இதன் கூட்டம் தற்காலத்தில் குருதிகளால் நனைந்தபடி தப்பித்து ஓடுவதை அடிக்கடி காண்கிறோம். 

சமீபத்தில் மசினகுடியில் பாதை தவறி வந்த யானை மீது ரிசார்ட் உரிமையாளர்களால் தீ கொளுத்தப்பட்ட டயர் தூக்கியெறியப்பட்டுக்  கொல்லப்பட்ட கொடுமைச் சம்பவம் இரு நாள்களாக சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. அதேசமயம் நாள்தோறும் யானைகள் மின்சாரக் கம்பி வடங்களிலும், சாலைகளிலும், வேட்டையாடுதல்களினாலும் கொல்லப்படும் செய்திகள் பத்திரிகைகளில் தவறாமல் அங்கம் வகிக்கின்றன. இவை வழக்கமான செய்தியாகக் கடந்து போகின்றன. 

மிகப் பெரிய பாலூட்டி இனமான யானை பூமியில் வாழும் உயிரினங்களில் மனிதனைத் தவிர்த்து, மிக நீண்ட காலம் உயிர் வாழும் உயிரினமாகும். பரிணாமத்தில் இறுதியாக உருவான மனிதனால் சூறையாடப்பட்டு வரும் யானை உலகின் தன்மையான விலங்குகளில் ஒன்றாகும்.

யானைகள் ஏன் சூழலியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது? ஒரு தேனீ எப்படி தனது தேன் சேகரிப்பின் மூலம் மகரந்த சேர்க்கையைத் தூண்டி தாவர வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறதோ அதே போல் யானையும் தனது வலசையின் மூலம் காடுகளின் பெருக்கத்தை தூண்டுகிறது. 

நாளொன்றுக்கு 20 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை வலசை செல்லும் யானைகள் தனது பாதையை சக உயிர்களின் வாழ்விடத் தேவைக்கான ஒன்றாக மாற்றுகிறது. 270 கிலோ வரை உணவு உட்கொள்ளும் ஒரு யானை அதன் மூலம் வெளியேற்றும் கழிவில் உள்ள விதைகள் பல காடுகளை உருவாக்கும் இயற்கை சமன்பாடு கொண்டது. 

தென்னிந்தியாவில் தங்களது உணவுத் தேவைக்காக கோடைக் காலங்களில் வலசை பயணத்தை மேற்கொள்ளும் யானைக் கூட்டம் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடங்கி மைசூரூ வரை ஒரு வலசை பாதையிலும், சேர்வராயன் மலையில் இருந்து கேரளத்தை நோக்கிய பாதையிலும் வலசை மேற்கொள்ளும். மற்றொரு பாதையாக வேலூர் ஆந்திரம் மற்றும் கர்நாடக வனப்பகுதியில் யானைகள் வலசை அடைகின்றன.

சுற்றுச்சூழலின் ஆரோக்கிய அளவீடாக யானைகள் விளங்குகின்றன. காட்டில் வலசைக்காக பல கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்வதால், புதிய பாதைகளை உருவாக்கும் யானைகள் அவற்றின் உணவுக் கழிவான சாணத்தின் மூலம் விதைகளை விதைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதன்மூலம் புதிய தாவரங்கள் முளைத்து பசுமையான காடுகள் உருவாகின்றன. யானைகள் வன உயிர்களின் உணவு உற்பத்திக்குத் தேவையான மரம், செடிகளை மறைமுகமாக உற்பத்தி செய்யும் வேலையை செய்கிறது.

காடுகளை அழித்து அமைக்கப்படும் தண்டவாளங்கள் மற்றும் தேசிய சாலைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அணைக்கட்டுகள், மேம்பாலங்கள்,  போன்ற பல காரணங்களால் யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. காலம் காலமாக யானைகள் பயன்படுத்தும் வழித்தடத்தை மனிதன் ஆக்கிரமித்ததால் அதன் எல்லை சுருங்குகிறது. இதனால் மனிதன், யானை இடையே உண்டான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

மேலும் பருவமழை பொய்த்தல், காலநிலை மாற்றம், வெப்பம், வறட்சி, பசுமை உணவுகள் கிடைக்காமல் போனது போன்றவற்றால் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையோர குடியிருப்புகளை நோக்கி யானைகள் கூட்டமாக வருகின்றன.

இயற்கையாக அமைந்த இந்த யானைகளின் வலசை பாதைகளில் வணிக நோக்கங்களுக்காக திடீரென குடியிருப்புகளும், கேளிக்கை விடுதிகளும், கட்டுமானங்களும் எழுந்து யானைகளுக்கு தொந்தரவை உண்டாக்குகின்றன. புதிய கட்டுமானங்களாலும், மனித அச்சுறுத்தல்களாலும் யானைகள் மிரள்கின்றன. 

எப்படி நகரின் வளர்ச்சிக்கு உழைத்த மக்கள் நகருக்கு வெளியே துரத்தப்படுகின்றனரோ அதேநிலை யானைகளுக்கும் ஏற்படுகின்றன. தங்களது பாதையைப் பயன்படுத்த முடியாமல் அலையும் யானைகள் வனத்துறையால் பிடிக்கப்பட்டு அவற்றுக்கு சம்பந்தம் இல்லாத பகுதியில் கொண்டு சென்று விடப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டு கொன்றழிக்கப்படுகின்றன.

2019 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, ஆசியாவில் 55 ஆயிரம் யானைகளும் இவற்றின் மொத்த எண்ணிக்கையில் இந்தியாவில் 31,368 யானைகளும், தமிழகத்தில் 3,750 யானைகளும், கேரளத்தில் 5,706 யானைகளும், கர்நாடகத்தில் 6,049 யானைகளும் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் யானை மனித மோதல்களால் 100 மனிதர்களும் (சில ஆண்டுகளில் இது 300 பேராக இருக்கலாம்) 40-50 யானைகளும் கொல்லப்படுகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில், மின்சாரம், ரயில், வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் 2,330 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 561 யானைகள் உயிரிழந்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அரசு பதிலளித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மண்டலத்தில்  167 யானைகளும்  அதனைத் தொடர்ந்து கோவை மண்டலத்தில் 134 யானைகளும்,  தருமபுரி மண்டலத்தில் 89 யானைகளும் உயிரிழந்துள்ளன.

இவற்றில் அதிகபட்சமாக ஆண் யானைகள் உயிரிழப்பதாகவும், இதன் காரணமாக பெண் யானைகள் மட்டும் எஞ்சி அவற்றின் இனம் அழிவது கண்கூடாக நடந்து வருவதாகவும் சூழலியல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

யானைகள் காலநிலை நெருக்கடிக்கு எதிரான போரில் முக்கியமானவைகள். கரியமில வாயுக்களின் வெளியேற்றம் மட்டும் காலநிலை நெருக்கடி என சுருங்கும் நிலையில் பல்லுயிர் சூழலை பாதுகாப்பது சூழலியலுக்கான அத்தியாவசியப் பணி என உணர்ந்தால் யானைகளின் முக்கியத்துவம் விளங்கும். 

தற்போதைய சூழலில் பருவமழை பொய்ப்பது யானைகளின் நீராதாரத்தை பாதிக்கின்றன. ஓடைகளிலும், ஆறுகளிலும் நீர் இருப்பு குறைவதால் அவற்றைத் தேடி யானைகள் தங்களது நீண்ட கால வலசை பாதையில் இருந்து திசை மாறுகின்றன. தப்பிப் பிழைப்பவை மனிதர்களாலும், சிக்கிக் கொண்டவை வறட்சியாலும் இறந்து போகின்றன.

மரங்களையும், புதர்களையும், புல்வெளிகளையும், வனங்களையும் காப்பாற்ற யானைகள் அவசியம். சூழலியல் சமநிலையில் ஒன்று மற்றொன்றை சார்ந்து வாழ்வது உறுதிப்படுத்தப்பட வேண்டிய சூழலில் உயிர்கள் மீது நெருப்புகளை இடுவதும், சாலைகளில் இட்டு மோதுவதும், மின்சார கம்பிகளில் மரண விலை பேசுவதும் தடுத்து நிறுத்தப்படவேண்டும். 

தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள யானைகளின் வலசை பாதைகளில் குடியிருப்புகளும், மடங்களும், கல்வி நிறுவனங்களும் எழுந்து அவைகளுக்கு எதிரான சூழலியல் குற்றங்களைப் புரிகின்றன.

யானைகளின் பாதைகளை மீட்டுத்தர வேண்டிய அரசு அவற்றின் வருகையைத் தடுப்பதாகக் கூறி சுற்றுச்சுவர் கட்டும் அறிவிப்புகளை வெளியிட்டு மகிழ்ந்து கொள்கின்றன. யானைகளின் பாதைகள் மீட்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றக்கோரும் உத்தரவுகள் அமல்படுத்தப்படாமல் இருப்பது மேலும் மேலும் யானைகளை மேலாண்மை செய்வதற்கான வாய்ப்புகளை மட்டுமே தரும் அன்றி அவற்றின் வாழ்வை உறுதிப்படுத்தும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.

காடுகளை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் சூழலியல் சட்டங்களில் தாராளத்தை திறந்து விடுவதும் வணிக நோக்கங்களை இலக்குகளாகக் கொள்வதும் முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டியவைகளாகும். விதிமீறலுக்கு உள்ளான கட்டுமானங்களை அழித்து பல்லுயிர் சூழலுக்கு அவை திரும்ப அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பருவநிலை தப்பி வருவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். இயல்பைக் காட்டிலும் வெப்பம், மழைப்பொழிவு, கட்டுப்படுத்த முடியாத வெள்ளம், அதன் காரணமாக பயிர் சேதம் என காலநிலை மாற்றத்தின் விளிம்பில் நின்று தப்பிக்கக் கிடைக்கும் வாய்ப்புகளையும் பறிகொடுத்து விட்டு வாழ முயல்வது அறியாமை மட்டுமல்ல பொறுப்பின்மையும் கூட.

யானைகள் மீது குற்றம்சாட்டப்படும் பயிர் சேதங்களைக் காட்டிலும் இயற்கைப் பேரிடரால் இழக்கும் வேளாண் வருவாய் என்பது மலைக்க முடியாத உயரத்தில் இருக்கிறது. யானை மனித மோதல்களுகு உள்ளாகும் பொருளாதாரத்தில் நலிந்த பகுதி மக்களுக்கு நிவாரணம் அறிவித்து அவர்களது வாழ்வாதாரங்களை உறுதி செய்வதுடன், சட்ட விரோதமாக கட்டுமானங்களை எழுப்பி சூழலியல் பாதிப்புகளை ஏற்படுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

யானை-மனித மோதல் தனிமனிதனுக்கும் பாதை தவறி வந்த அல்லது தவறவைக்கப்பட்ட ஒரு யானைக்குமான பிரச்னை அல்ல. அவை சமூகத்தின் சூழலியல் மூலம் பெறப்படும் இலாப நோக்கங்களை இலக்குகளாகக் கொண்டு நிகழ்த்தப்படுபவை.

வணிக நலன்களை புறந்தள்ளி வாழ்வாதார சிக்கலை தீர்க்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் அமையப்பெறாமல் யானை-மனித மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. யானைகளைக் கொன்று விட்டு மனிதன் நடும் மரத்தால் சூழலியல் சிக்கல் தீர்ந்துவிடப் போவதில்லை.

<!–

–>