க்ரைம் கதைகளின் முடிசூடா மன்னன் ராஜேஷ்குமாரின் 50 ஆண்டுகால எழுத்துப்பயணம்!

50 ஆண்டுகளாகத் தமிழ் எழுத்துலகில் க்ரைம் அண்ட் டிடெக்டிவ் கதைகளின் மன்னனாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் ராஜேஸ் குமார். 1980 ஆம் ஆண்டில் மாலைமதியில் வெளியான ‘வாடகைக்கு ஒரு உயிர்’ நாவலே அவருடைய முதல் நாவல். வாரப்பத்திரிகைகளில் எழுதப்படும் நெடுந்தொடர்கள் பிரசித்தி பெற்று விளங்கிய காலகட்டத்தில் கல்கண்டுவில் ராஜேஸ்குமார் எழுதிய ‘ஏழாவது டெஸ்ட் டியூப்’ எனும் தொடருக்கு மிகப்பெரிய வாசக வரவேற்பு கிடைத்தது. அதுவே அவர் எழுதிய முதல் தொடர். இவர் இதுவரை 1500 நாவல்கள், 2000 சிறுகதைகள், 250 தொலைக்காட்சித் தொடர்கள் எழுதி இருக்கிறார். இவற்றில் ஒரு எழுத்தாளர் 50 ஆண்டுகளில் இடைவெளியின்றித் தொடர்ந்து 1500 நாவல்கள் எழுதிக் குவித்திருப்பது உலக சாதனையாகக் கருதப்படுகிறது.

எழுத்துலகில் ராஜேஸ்குமாரின் பெருமை என்பது அவருக்கு கிடைத்திருக்கும் வாசகர்களை அடிப்படையாகக் கொண்டது. ஆம் இன்று மிகப்பெரிய நிறுவனங்களில் உயர்பதவிகள் வகிப்பவர்கள் முதல் ரயில்வே ஃப்ளாட்பார கூலிகள், துப்புறவுப் பணியாளர்கள் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்கள் வரை அவருக்கான பிரத்யேக ரசிகர்கள் உண்டு. இவரது நாவல்களை யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம், ஏனெனில் இவருடைய கதைக்களங்கள் பெரும்பாலும் அன்றாட  சமகாலநிகழ்வுகளை மையமாகக் கொண்டவை என்பதோடு இவர் கரண்ட் அஃபையர்ஸ் என்று சொல்லப்படக்கூடிய தற்கால நிகழ்வுகள் மற்றும் தொழில்நுட்ப அப்டேட்டுகளை எல்லாம் சடுதியில் கிரகித்துக் கொண்டு அதைத் தமது கதைகளில் பயன்படுத்தக் கூடியவர் என்பதால் இவரது கதைகளை வாசிக்கக் கூடிய சாமான்யர்களுக்கு கூட இஸ்ரோ, சேட்டிலைட், ஃபாரன்ஸிக் ரிப்போர்ட், எஃப் ஐ ஆர், டிடெக்டிவ் ஏஜென்ஸியின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல விஷயங்கள் அத்துப்படியாகி விடுகின்றன. எனவே இப்படி புதிது, புதிதாக எதையாவது அறிந்து கொள்ள வேண்டியாவது இவரை வாசிப்பவர்கள் அதிகரித்துக் கொண்டே சென்றார்கள். ராஜேஸ்குமாருக்கு வாசக ரசிகர்கள் குவிந்தது இப்படித்தான்.

கோயம்பத்தூர்க்காரரான எழுத்தாளர் ராஜேஸ்குமாரின் இயற்பெயர் கே.ஆர் ராஜகோபால். ஆனால், அதே பெயரில் அந்தக் காலத்தில் ஏற்கனவே இரண்டு எழுத்தாளர்கள் தமிழ் புனைவுலகில் கோலோச்சிக் கொண்டிருந்ததால் இவருக்கு வேறு பெயர் தேவைப்பட்டது. பெயர் தேடிக் கொண்டிருந்தவருக்கு சட்டென ஞாபகம் வந்தது சகோதரி மற்றும் மைத்துனரின் பெயர்களே. அப்படித்தான் ராஜேஸ்வரியில் இருந்து ராஜேஸையும் அனந்தகுமாரில் இருந்து குமாரையும் இரவல் வாங்கி ராஜேஸ்குமார் என்று புனைப்பெயர் வைத்துக் கொண்டு எழுதத் தொடங்கினார்.

1969 ல் முதல் சிறுகதை ‘உன்னை விட மாட்டேன்’  வெளிவந்தது.

ராஜேஸ்குமாரின் மாஸ்டர் பீஸ்கள் என்றால்…

  1. விவேக், விஷ்ணு, கொஞ்சம் விபரீதம்
  2. டிசம்பர் இரவுகள்
  3. நில் கவனி கொல்
  4. வெல்வெட் குற்றங்கள்
  5. உன்னுடைய கண்களுக்கு மட்டும்
  6. பூவில் செய்த ஆயுதம்
  7. நல்லிரவு வானவில்
  8. அபாயம் தொடு

போன்ற நாவல்களைச் சொல்லலாம். இவையெல்லாம் வசூல் விற்பனையை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படும் பட்டியலாக இருக்கலாம் உண்மையில், மொத்தமுள்ள 1500 நாவல்களில் டாப் டென்னைத் தேர்ந்தெடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான். 

எழுத்தாளராவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்?

கோயம்பத்தூர்க்காரரான ராஜேஸ்குமார் ஆரம்பத்தில் ஆசிரியராக இருந்தார். பிறகு சில காலம் விற்பனைப் பிரதிநிதி வேலையும் பார்த்திருக்கிறார். ஆனால் வாரப்பத்திரிகைகளில் எழுதத் தொடங்கிய பிறகு வாழ்க்கை திசை மாறியது. 80 களில் ராஜேஸ்குமார் எழுதாத பத்திரிகைகளென்று எதுவுமே தமிழில் இல்லை எனும்படியாக அசுரகதியில் நாவல்களையும், நெடுந்தொடர்களையும், சிறுகதைகளையும் எழுதிக் குவித்தார் என்று சொல்லலாம். இந்தச் சிறப்பு அப்படியொன்றும் எளிதில் கிடைத்து விடவில்லை. பத்ரிகைகளுக்கு எழுதி அனுப்பிய கதைகள் பிரசுரமாகாமல் திரும்பி வந்த அனுபவங்கள் ராஜேஸ்குமாருக்கும் உண்டு. பிறகெப்படி தமிழ் எழுத்துச் சூழல் இவரை கொண்டாடத் தொடங்கியது என்றால்? அதற்குக் காரணமானவரை இன்றளவும் பெருமையுடன் நினைவு கூரத் தவறுவதில்லை ராஜேஸ்குமார்.

1980 களில் ஒருநாள் குமுதம் முன்னாள் ஆசிரியர் எஸ் ஏ பி அண்ணாமலை அவர்கள் எங்கோ செல்வதற்காக எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் சென்று ரயிலுக்காகக் காத்திருந்திருக்கிறார். அந்த நேரம் பார்த்து அங்கிருந்த போர்ட்டர்களில் ஒருவர் கையில் ராஜேஸ்குமாரின் நாவல் இருந்ததை அவர் அதிசயத்துடன் கண்டிருக்கிறார். அதிசயம் எதற்கென்றால்? அந்த போர்ட்டர் நாவலை வாசித்து முடிக்கும் ஆர்வத்தில் தன்னை அணுகிய வாடிக்கையாளர்களைக் கூட தவற விட்டுக் கொண்டிருந்திருக்கிறார். இப்படி ரயில்வே போர்ட்டர்களைக் கூட ஈர்க்கும்படியான எழுத முடியும் என்றால் அவரால் தமிழ்கூறும் நல்லுலகின் சாமான்ய வாசகர்கள் அத்தனை பேரையும் நிச்சயம் ஈர்க்க முடியும் என்று அந்த நிமிடத்தில் முடிவெடுத்து விட்டார் எஸ் ஏ பி. அப்படி வந்தது தான் மாலைமதியில் எழுதிய ‘வாடகைக்கு ஒரு உயிர்’ எனும் முதல் நாவல் வாய்ப்பு. இன்றைக்கு எண்ணிப்பார்த்தால் ராஜேஸ்குமாருக்கான ரசிகர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் தமிழ் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அங்கெல்லாமும் அவரது நாவல்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

ராஜேஸ்குமாரின் எழுத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்?

நாட்டு நடப்பு, உலக நடப்பில் அப்டுடேட்டாக இருப்பது தான் ராஜேஸ்குமார் ஸ்பெஷல். அது மட்டுமல்ல க்ரைம் கதைகள் எழுத வேண்டும் என்றால் அந்த தளத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் குறித்த தெளிவு இருக்க வேண்டும். அதற்காக இன்றைக்கு இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டாலும் 80 களில் எல்லாம் அப்படியான வாய்ப்புகள் இல்லாத காலகட்டத்தில் நேரடியாக கதையுடன் தொடர்பு கொண்ட துறைக்கு சம்மந்தப்பட்ட மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள்,  விஞ்ஞானிகள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் என யாரையும் சந்தித்து தனது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளத் தயங்கியதில்லை இவர்.

இவரது நாவல்களில் மற்றுமொரு ஸ்பெஷல் என்னவென்றால் அப்போதெல்லாம் பெரும்பாலான எழுத்தாளர்களின் கதைக்களம் என்பது சென்னை, டெல்லி, மும்பை அல்லது அதையொத்த மற்ற பெருநகரங்கள் என்றிருந்த நிலையில் அதை மாற்றி கோயம்பத்தூரை மையமாக வைத்து அதிகப்படியான கதைகள் எழுதத் தொடங்கியவர் ராஜேஷ்குமாராகத்தான் இருக்க முடியும். இது கோயம்பத்தூரைப் பற்றி பிறமாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள் அறிந்துகொள்ள வசதியாக அமைந்து விட்டது. ஒருமுறை வெளிமாநில வாசகர் ஒருவர், கோவையில் இருக்கும் தன் வீட்டின் முகவரியைக்  கண்டறிந்து மிகச் சரியாக வந்திறங்கி தன்னைச் சந்தித்த போது, ராஜேஷ்குமாருக்கு மிகப்பெரிய ஆச்சர்யம், எப்படி அட்ரஸ் கண்டுபிடித்து வந்து சேர்ந்தீர்கள்? என்ற கேள்விக்கு, நீங்கள் உங்கள் நாவலொன்றில் குறிப்பிட்டிருந்த கோயம்பத்தூர் டோபோகிராபியின் (ஸ்தல விவரங்கள்) துணை கொண்டு இடம் கண்டுபிடித்து வந்து விட்டேன். என்றிருக்கிறார். அந்த அளவுக்கு ராஜேஸ்குமார் நாவல்களில் ஸ்தலம் குறித்த விவரங்கள் மிகத்தெள்ளத் தெளிவாக இருந்திருக்கின்றன என்பது பெருமைக்குரிய சாதனையே!

இவை தவிர, தமிழ் ரசிகர்களுக்கு தமிழ்வாணனின் சங்கர்லாலுக்குப் பிறகு புத்தம் புதிய துப்பறிவாளர்கள் தேவைப்பட்ட காலகட்டத்தில் விவேக், ரூபலா என்ற இரண்டு கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்களை நாவலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நண்பர்களாக்கினார் ராஜேஸ்குமார்

க்ரைம் கதை மன்னராக 50 ஆண்டுகளைக் கடந்தும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் ராஜேஸ்குமார் தற்போது இணைய ஊடகமொன்றில் தொடர்கதை எழுதிக் கொண்டிருப்பதோடு தனது படைப்புகளுக்காக மட்டும் எக்ஸ்குளூஸிவ்வாக பதிப்பகம் ஒன்றையும் துவக்கி இருக்கிறார். அதில் தனது நாவல்கள், நெடுந்தொடர்களை அருமையான பதிப்பில் புத்தகங்களாகக் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார். இத்தனை ஆண்டுகால எழுத்துப்பணியில் உங்களை மிக மிக சந்தோஷத்தில் ஆழ்த்திய விஷயம் எது என்ற கேள்விக்கு;

சில நாட்களுக்கு முன்பு 95 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் என்னை அலைபேசியில் அழைத்தார். அவர் எனது நெடுநாள் வாசகியென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு என்னிடம் பேசத்தொடங்கினார். இன்றைக்கு அவருக்கு கண்பார்வை மங்கி விட்டது, புத்தகங்களை நேரடியாகத் தானே வாசிக்க இயலாத நிலை, ஆனபோதும், தன் பேத்தியிடம் என் நாவல்களைக் கொடுத்து அதைத் தனக்கு வாசித்துக் காட்டச் சொல்லி ரசிக்கும் அளவுக்கு அவருக்கு என் நாவல்கள் மீதான ஆர்வம் இன்னும் குன்றவில்லை என்றார். ஒரு எழுத்தாளராக இதை விட மிகப்பெரிய பாராட்டு எனக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள். அவர் என்னை அழைத்தது இதைச் சொல்வதற்காக அல்ல, நான் எழுதத் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகி விட்டது என்பதை அறிந்து அதற்காக வாழ்த்தத்தான் என்னை அவர் அழைத்திருந்தார். இதை விட எனது எழுத்துக்குரிய அங்கீகாரம் வேறென்ன வேண்டும்?! என்கிறார் ராஜேஸ்குமார்.

நிஜம் தான். 

இன்று எழுத்துலகில் ராஜேஸ்குமாரைத் தெரியாதவர்கள் யார்?

இன்றைக்கும் கூட தொலைக்காட்சித் தொடர்களில் புலன் விசாரணைத் தொடர்கள் எடுக்க வேண்டும் என்றால் உடனடியாக நினைவுக்கு வரக்கூடிய எழுத்தாளர்கள் பட்டியலில் நிச்சயம் ராஜேஸ்குமார் முதலிடத்தில் இருப்பார் என்பதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது. அவருக்கு தினமணியின் சார்பாக வாழ்த்துக்கள்.

<!–

–>