சங்க இலக்கியங்களில் மாமியார் – மருமகள் உறவு!

இந்த பிரபஞ்சமானது ஓர் ஈர்ப்பு விதிக்குள் கட்டுப்பட்டு ஒரு பிணைப்பு சக்தியால் கவரப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. காலங்காலமாக அதனுள் தோன்றிய உயிரினங்களும் தங்களுக்குள் ஏற்பட்டுள்ள ஓர் அன்பு பாசப் பிணைப்பின் காரணமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஐந்தறிவு விலங்குகளும்கூடத் தன் குடும்பம், தன் சந்ததி என்று கூட்டமாகவும் பேணிக் காத்தும் வாழத் தலைப்படுகின்றன. இவற்றிற்கு மனிதனும் விதிவிலக்கல்ல.

சிந்திக்கும் அறிவு பெற்ற மனிதன் தன்னுடைய ஒவ்வொரு உணர்வையும் புரிந்துகொண்டு அதற்குரிய உறவுகளையும் பேணிப் பாதுகாத்து தானும் சமூகத்துடன் சேர்ந்து குடும்பமாக வாழ்கிறான். இந்தக் குடும்பம் என்கிற அமைப்பிற்கு அப்படி ஒரு வலுவான ஈர்ப்பும் பந்தமும் இருக்கின்றது.

சமூகம், குடும்பம் என்று இருந்தாலும் நாம் உறவுகளுக்கு ஒவ்வொரு பெயர் வைத்துள்ளோம். அத்தகைய ஒவ்வொரு உறவுக்கும் உண்டான பெயர் ஒவ்வொரு வகைப்படும். அந்த உறவுகளுக்கான உணர்வுகளும் ஒவ்வொரு மாதிரியாக உணரப்படும்.

தாய்-தந்தை உறவு, கணவன் -மனைவி உறவு, தாத்தா -பாட்டி உறவு, அண்ணன்- தங்கை உறவு, அண்ணன்- தம்பி உறவு, சித்தப்பா- சித்தி உறவு, மாமன்- மாமி உறவு, அத்தை- மாமா உறவு போன்ற உறவுகள். இவை அத்துணைக்கும் பொருள் உண்டு. குடும்பத்துடன் சேர்ந்த உறவுகள்தாம் இவை.

உலகெங்கும் தேடினும் நம் தமிழினத்தில் இருப்பது போன்ற இந்த அளவிற்கான உறவுமுறைகளும் அதற்குப் பெயர் சொல்லி அழைத்தலும் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றே கூறலாம்.

காலங்காலமாகத் தமிழரிடத்திலேதான் இந்த உறவுகள் மாறுபடாமல் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை குடும்பம், உறவுகள் என்று பல்வேறு தலைப்புகளில் படைப்புகளை வெளிப்படுத்தியிருந்தாலும் மக்கள் மத்தியில் ஒரு முக்கியமான உறவுக்கு ஒருவித மரியாதை கலந்த பயம் அல்லது வெறுப்புணர்வு ஏற்படுகிறது.

ஆம். மாமியார் – மருமகள் உறவே அது. இன்றைய நிலையில் மாமியார் என்றாலே மருமகளுக்கு ஸ்டவ் வெடித்தலும் மருமகள் என்றாலே மாமியாரை முதியோர் இல்லத்தில் விடுதலும் என்ற நிலைமை பொதுவாகிவிட்டது. அது அப்படி அல்ல, ஒரு பெண் திருமணம் முடித்து கணவன் வீட்டிற்கு வருகையில் எழுதப்படாத கரும்பலகை போலத்தான் வருகிறார். ஆனால், அவளுக்கு கணவன் வீட்டில் கிடைக்கும் அனுபவங்களைப் பொருத்து அவளுடைய எண்ணக் கரும்பலகையில் எழுத்துகள் பதிவாகின்றன.

மாமியார் கூறுவதை ஏற்றுக்கொண்டு தன் குடும்பத்தினரிடம் நல்ல பெயர் பெறவேண்டும் என்றே நினைத்துச் செயல்பட ஆரம்பிக்கிறாள். ஆனால், நாளடைவில் எங்கே இவள் தம் குடும்பத்தினரிடம் தன்னைவிட முக்கியத்துவம் பெற்று விடுவாளோ என்ற ஐயப்பாட்டில் ஒரு உறையில் இரு கத்தி இருக்காதல்லவா? மெதுமெதுவாக சண்டை பூசல், பொறாமை, யார் பெரியவர்? யாருக்கு வீட்டில் உள்ளவர்களிடம் உரிமை அதிகம்? இதுபோன்ற பிரச்னைகள் தலைதூக்கி அது நாளடைவில் சகிக்க முடியாத அளவிற்கு சண்டையில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது. மனித வாழ்விற்கு பலமாக இருக்கக்கூடிய கூட்டுக்குடும்ப வாழ்வு இதன் காரணமாக சிதைவுற்று தனிக் குடும்பமாகிறது. புதிதாக வருகின்ற உறவாகிய மருமகளிடம் மாமியார்தான், தன் வீட்டுப் பழக்க வழக்கங்கள், உணவுமுறை, உறவுமுறை பற்றிக்கூறி வழிகாட்ட வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவை, அவ்வூரில் உள்ள தன் குடும்பத்தின் பெருமை, கௌரவம் அது குலையாமல் காக்கும் விதம் அனைத்தையும் சொல்லித் தருதல் இயல்பேயாகும்.

சங்க காலத்தில் அகநானூறு பாடல் காட்சியொன்றைக் கவிஞர் சுவைபட வருணிக்கிறார். ஒரு தாயானவள் தன் மகனும் மருமகளும் மகிழ்வுடன் வாழ்க்கை நடத்தும் அழகைக் காண பகலெல்லாம் பல தொலைவு நடந்து வருகிறாள். இல்லத்தின் வாயிலருகே வரும் நேரம் இலேசாக இருட்டி விடுகிறது. அவள் வாயிலிலிருந்து உள்ளே பார்க்கும் காட்சியானது அவள் முகத்தையும் மனதையும் பெருமிதம்கொள்ளச் செய்கிறது.

வீட்டின் முன்புறம் ஒரு மலர்த்தோட்டம் ஒன்று இருந்தது. அங்கே உள்ள மரத்தினடியில் ஓர் அகலமான கல்மேடை. அம்மேடையின் அருகே அழகுமிகு முல்லைக்கொடியானது வௌ்ளை வெளேரென்று மலர்களைச் சுமந்தபடி படர்ந்து கிடக்கிறது. அவ்வழியாக அப்போது ஒரு பாணன் இசையை மீட்டிக்கொண்டு இனிமையாகப் பாடிக்கொண்டு போய்க்கொண்டிருந்தான். இளங்கணவன் முகமலர்ச்சியுடன் அமர்ந்தவாறு எதிரே இருக்கும் தன் சிறு மகனை எடுத்து தொடையில் அமர்த்திக்கொண்டு பாணன் பாடிச் செல்லும் இசைக்கு ஏற்ப குழந்தையின் இரு கைகளையும் பிடித்தபடி தாளம் போடக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான். மறுபுறத்தில் அவனுடைய இளம் மனைவி முல்லைப் பூக்களைப் பறித்து அவற்றினைத் தொடுத்துக் கொண்டிருந்தாள். பின்பு தான் தொடுத்த சரத்தில் ஒரு பகுதியை எடுத்து வந்து கணவனின் மடியில் அமர்ந்திருந்த சிறுவனுக்குச் சூடி மகிழ்கிறாள். மற்றொரு பகுதியை தானும் சூடிக்கொண்டாள். கணவனின் கவனம் குழந்தையிடம் இருந்து மனைவியிடம் திரும்பி அவளின் அழகைப் பருகலானான். இக்காட்சியைக் கண்ட தாயின் நெஞ்சம் பெருமிதத்தால் மகிழ்ந்தது. தன் மகனும் மருமகளும் நடத்தும் இனிய இல்லறத்தை எண்ணி எண்ணி மகிழ்ந்தாள்.

சங்க இலக்கியப் பாடல்களில் மாமியார் இறக்க மருமகள் ஒப்பாரி வைத்துப் பாடும் பாடலை அதிகம் காண முடியவில்லை. ஆனால், வாய்மொழியாக நாட்டுப்புறப் பாடலிலே சில வரிகளைக் காண முடிகிறது.

கொப்பரைய அடகு வச்சி
ஒப்பாரி படிக்கப் போனேன்
ஒப்பாரி படிக்கலியே
கொப்பரையும் திருப்பலியே

அதுபோல புறநானூற்றுப் பாடல் ஒன்று இயம்புகிறது.

போர்க்களத்திலிருந்து திரும்பி வராத தன் கணவனைக் கண்டு வரச் செல்கிறாள் மனைவி. அங்கே அவள் தன் கணவன் மார்பில் அம்பு பாய்ந்து இறந்து கிடப்பதைக் கண்டாள். இறந்து கிடக்கும் கணவனை நினைத்து அவள் கதறி அழுகிறாள். தன் இல்லத்திற்குச் சென்று தன் கணவன் இறந்த செய்தியை அவனுடைய தாய்க்கு எவ்வாறு கூறுவது என்று கலங்குகிறாள். அவளுடைய கையறு நிலையை இப்பாடலில் கயமனார் கீழ்வருமாறு கூறுகிறார்.

இளையரும் முதியரும் வேறு புலம் படர
எடுப்ப எழாஅய் மார்பம் மண் புல்ல
இடைச்சுரத்து இறுத்த மள்ள விளர்த்த
வளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள்
இன்னன் ஆயினன் இளையோன் என்று
நின்னுரை செல்லும் ஆயின் மற்று
முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்துப்
புள்ளார் யாணர்த் தற்றே என்மகன்
வளனும் செம்மலும் எமக்கென நாளும்
ஆனாது புகழும் அன்னை
யாங்கு ஆகுவள்கொல் அளியள் தானே.

தன்னுடைய மகனின்  செழுமையான வாழ்வு பற்றிய தாயின் இன்பமான ஒரு கர்வம் மணம் முடித்து இல்லறம் நடத்தும் தன் மகனின் செல்வச் செழிப்பும் அவன் ஆடம்பரமும், ஆரவாரமும் ஒரு தாய்க்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். அவன் குடித்தனம் செய்யும் பாங்கை அனைவரிடமும் பேசிப் பேசி மகிழ்ந்து போவாள். இறந்துபோன கணவனின் உடலை வைத்துக்கொண்டு அவன் இறந்து போனதை எண்ணி அவனது தாய் எவ்வாறு அரற்றுவாள் என்று அந்தப் பெண் அப்பாடலைக் கூறி அழுகிறாள் என்கிறார் புலவர்.
இதன்மூலம் தன் மகனை இழந்து அத்தாய் தவித்தது புலனாகிறது. மாமியார் மகனின் பேரில் வைத்திருந்த எல்லையற்ற பேரன்பும், பெருமிதமும், நம்பிக்கையையும் ஒரு மருமகள் போற்றுவதாக இக்கையறு நிலைப் பாடல் உணர்த்துகிறது.

பிற்கால இலக்கியத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் செட்டிநாட்டு மாமியாரின் வாக்காக,

நல்லாத்தான் சொன்னாரு நாராயணச்செட்டி
பொல்லாத பெண்ணாக பொறுக்கி வந்து வச்சாரு
வல்லூறைக் கொண்டுவந்து வாசலிலே விட்டாரு
கல்லாப் பொறந்ததையும் கரும்பாம்புக் குட்டியையும்
செல்லாப் பணத்தையும் செல்ல வெச்சுப் போனாரு
ஊரெல்லாம் பெண்ணிருக்கு உட்கார வெச்சிருந்தா
எட்டுக்கண் விட்டெரிக்க எந்தம்பி மகளிருக்க
குத்துக்கல் போலே ஒண்ணெ கூட்டிவந்தோம் வீடுவரை

என்று மருமகளை நம்பி நின்று நாராயணன் செட்டி செய்த செயல்களைக் கூறும் மாமியாராக இருக்கட்டும், மாமியாருக்கு பதில் கூறுதல்போல இருக்கும் மருமகள் மான்மியமாக

அவகெடக்கா சூர்ப்பனகை
அவமொகத்த யாரு பாத்தா?
அவுக மொகம் பாத்து அடியெடுத்து வச்சேன் நான்
பத்து வராகன் பணங்கொடுத்தார் எங்களய்யா
எத்தனைபேர் சீதனமா இவ்வளவு கண்டவுக

என்று மாமியாருக்கு பதில்கூறும் விதமாகத் தன் மனக்கருத்து ஒத்துவரவில்லை என்பது விளங்குகிறது.

மாமியார் – மருமகள் குறித்த பலமொழிகள்

மாமி குற்றம் மறைப்பு மருமகள் குற்றம் திறப்பு
மாமியார் உடைத்தால் குழவிக்கல் மருமகள் உடைத்தால் வைரக்கல்
மாமியார் கை வெல்லத்தைப் பார்க்கிலும் மருமகள் கை தவிடு தேவலை.
மாமியார் கோபம் வயிற்றுக்கு மட்டும்
மாமியார் சாமான் வாங்கி மச்சு நிரம்புமா?

தற்போது காலம் வேகவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு குடும்பத்தில் அனைவருமே வேலைக்குச் சென்றாக வேண்டியுள்ளது. அவரவர்களுக்குத் தன்னுடைய வேலையைப் பார்ப்பதே அரிதாக உள்ளது. இதில் அடுத்தவரைப் பற்றிய கவலையோ செயல்பாடுகளையோ கவனிப்பது என்பது சிந்திப்பது என்பது இயலாத காரியமாக உள்ளது. ஆகையால் அவரவரே அந்தந்த குடும்பத்துக்குப் பொறுப்பு என்கிற எண்ணம் வந்துவிட்டது.

முக்கியமான நாள் கிழமைகளில் மகன்-மருமகள், பேரன்-பேத்திகள் என வந்து செல்வது அல்லது மகனின் வீட்டிற்குப் பெற்றோர் வருவது நடைமுறையாகிவிட்டது. வந்த இரண்டு மூன்று நாட்களிலும் விருந்தினர் போல இருந்துவிட்டுச் சென்றுவிடுவது வாடிக்கையாகிவிட்டது. அலுவலகத்தில் மேலதிகாரியைச் சகித்துச் செல்வது இல்லையா? அதுபோல்தான் என்ற எண்ணம் மருமகளுக்கும் நாட்கள் செல்லச்செல்ல தன் நிலைமை போன்றுதான் தம் மருமகளுக்கும் என்ற எண்ணத்தில் மாமியாரும் நேரத்தைக் கடத்திக்கொண்டு காரியம் முடிந்ததும் சென்றுவிடுகிறார்கள்.

நடுநிலை தவறாது ஆண்கள் இருக்கும் பட்சத்தில் இருவருக்குமே சற்று பயமும் மரியாதையும் ஆண்களிடத்தில் இருக்கும். நடுநிலை தவறும்பட்சத்தில் யாரிடம் பாதிப்பு இருக்கிறது. அவர்களிடம் கோபமும் தலைதூக்கி பிரச்சினை, சண்டை என்கிற அஸ்திரங்கள் வரிசையாக வந்து சேரும். எந்த ஒரு விஷயத்தையும் பொறுமை என்னும் ஓர் ஆயுதத்தைக் கைக்கொண்டால் அது எப்பேர்ப்பட்ட உறவாக இருந்தாலும் வெல்லலாம்.

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறிய உறவுகள் மேம்பட குற்றம் கூறாதீர்கள்; அதைச்செய், இதைச்செய் என்று அதிகாரம் செய்யாதீர்கள். அது வேண்டும், இது வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். சகித்துக்கொள்ளுங்கள். விட்டுக்கொடுங்கள். தியாகம் செய்யுங்கள்.

மிக முக்கியமாக விட்டுக் கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை என்ற பழமொழியை நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாமியாரும் தன் மருமகளை மகளாகவும், ஒவ்வொரு மருமகளும் தன் மாமியாரை தாயாகவும் பார்த்தாலே அனைத்து பிரச்னைகளும் எளிதில் தீரும்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>